

தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சராசரி மழையின் அளவைவிட 27% அதிக மழைப்பொழிவு இருந்தது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 8% அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் அளவும் சராசரி அளவைவிட அதிக அளவில் பெய்யக்கூடும்.
நிலத்தடி நீரை உயரச் செய்வதோடு, நீர்நிலைகளையும் நிரம்பச் செய்து உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கும் பருவமழையால், சில பாதிப்புகளும் ஏற்படவே செய்கின்றன. பருவ மழைக் காலங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரால் மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படலாம். இடி, மின்னல் பாய்ந்து மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அண்மையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் சோளக்காட்டில் வேலை செய்துகொண்டிருந்த 4 பெண்கள் மின்னல் பாய்ந்து உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை மாதம், பிகார் மாநிலம் நாளந்தா, பாட்னா, வைஷாலி, ஷேக்புரா ஆகிய நான்கு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 34 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இடி, மின்னலால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஆவர்.
இதற்குக் காரணம் இடி, மின்னலின் போது தற்காத்துக் கொள்ள போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். இடி, மின்னல் பசுமையான உயர்ந்த மரங்களை எளிதில் தாக்கும் என்பது தெரியாத நிலையில், இடி, மின்னல் ஏற்படும் போது அருகிலிருக்கும் மரங்களின் கீழ் தஞ்சம் அடைபவர்கள் ஏராளம்.
மழைக்காலங்களில் அணைகள் நிரம்புவதால் உபரி நீர் திறக்கப்படுகிறது. இதன் விளைவாக ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, மீன் பிடிப்பது, தற்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் வெள்ள அபாயத்தில் சிக்குகிறார்கள். இவர்களில் சிலர் உயிரிழக்கும் சோகச் சம்பவங்களும் நிகழ்கின்றன. பருவமழைக் காலங்களில் அரசின் எச்சரிக்கையை அறியாமல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் புயல்களில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
நகர்ப்புறங்களில், தேங்கிக் கிடக்கும் மழை நீரில் மின்சாரக் கம்பிகள் விழுந்து கிடப்பது, சாலைகளிலும் தெருக்களிலும் மின்கம்பங்கள், மின்சாதனங்களுக்கு அருகில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் மின் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் நடப்பது, வாகனத்தில் செல்வது போன்றவற்றால் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாநில மின்சார வாரியம் அறிவுறுத்தியதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழை நீரில் வாகனங்கள் சிக்கி கொள்வது, புதை சாக்கடைகளின் மூடிகள் திறந்து இருப்பது ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் சிறிது முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் தவிர்த்து விடலாம்.
பருவ மழைக்காலங்களில் சாலைகள் சேதம் அடைவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு சாலை விபத்துகளும் அதிகரிக்கின்றன.
உதகை, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பருவமழைக் காலங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதும் அதனால் உயிர் இழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட மண்ணரிப்பால் மலையிலிருந்த பாறைகள் உருண்டு மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் மீது விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அண்மையில் ஹிமாசல பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம், மரோத்தன் பகுதியில் இருந்து குமர்வின் என்ற பகுதி நோக்கி சென்ற தனியார் பேருந்து நிலச்சரிவில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவுகளைத் தடுக்கும் வகையில் மலைப்பிரதேசங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கான வரைமுறைகள் கடுமையாக்கப்படுவதோடு நிலச்சரிவு மற்றும் மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் அதிக அளவில் மரங்களை வளர்த்தல், மலைப் பகுதிகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும்.
அதிகரித்து வரும் மக்கள்தொகையின் விளைவாக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வரும் நிலை மாற வேண்டும். பருவமழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே பிரதான காணமாகும். இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு எவ்வித சமரசத்துக்கும் இடம் தரலாகாது. காலநிலை மாற்றத்தால் ஒரு பருவ காலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, மேக வெடிப்பால் ஓரிரு மணி நேரங்களில் கொட்டித் தீர்ப்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது.
இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள செயல் திட்டம் வகுப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை. பருவமழைக் காலங்களில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைக்க போதுமான எண்ணிக்கையில் நிவாரண மையங்களை அரசு எற்பாடு செய்வது நல்லது. இப்பருவமழைக் காலத்தில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்க வேண்டியது நம் சமூக கடமை ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.