மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியாபாலின் காதலர் சுகாஷ் சந்திரசேகர் என்ற சேகர்ரெட்டி புழல் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகாஷ் சந்திரசேகர் என்ற சேகர் ரெட்டி என்ற பாலாஜி. இவர், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி பலரிடம் பல குரலில் பேசி மோசடி செய்து வந்தார். மலையாள நடிகை லீனா மரியாபாலுடன் நெருங்கி பழகிய சுகாஷ், அவரை காதலித்து வந்தார். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட லீனா, சுகாஷின் மோசடிகளுக்கு உடந்தையாக செயல்பட ஆரம்பித்தார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.19.22 கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல சேலையூரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் மொத்தமாக சீருடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் சந்திரசேகரும், லீனாவும் கர்நாடக அரசின் மருத்துவத் துறை, போக்குவரத்துறை மற்றும் மாநகராட்சியில் பணிபுரிபவர்களுக்கு சீருடை தைக்க ஆர்டர் தருவதாகவும், டெபாசிட்டாக ரூ.72.47 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றினர்.
இந்த மோசடி குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். இருவரும் வங்கியில் மோசடி செய்ததில், அந்த வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மரியாபால், சுகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், கடந்த மே 27ம் தேதி தில்லி அருகே உள்ள பங்களாவில் அவர்கள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் அங்கு தலைமறைவாக வாழ்ந்து வந்த மரியாபாலை போலீஸார் கைது செய்தனர். சந்திரசேகர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே தில்லியிலும் சந்திரசேகர் மோசடி செய்ததால், தில்லி போலீஸாரும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தேடி வந்தனர்.
இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் கங்கர் பிதா என்ற இடத்தில் பதுங்கியிருந்த சந்திரசேகரை போலீஸார் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் பல கட்டங்களாக தில்லி போலீஸார் விசாரணை செய்தனர். பின்னர் அவரை திகார் சிறையில் தில்லி போலீஸார் அடைத்தனர். இந்நிலையில் ஏற்கனவே சந்திரசேகர் சென்னை போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி என்பதால், சென்னை போலீஸாரும் அவரைக் கைது செய்து இங்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, சென்னை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை சிறையில் காட்டி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சந்திரசேகரை அங்கு திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் ரயில் மூலம் சென்னைக்கு புதன்கிழமை காலை அழைத்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை செய்தனர். விசாரணைக்குப் பின்னர் தாம்பரம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து சந்திரசேகர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரசேகரை 5 நாள்களில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஓரிரு நாள்களில் தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்திரசேகர் மீது தமிழகத்தில் 6 மோசடி வழக்குகளும், கர்நாடகாவில் 8 மோசடி வழக்குகளும், கேரளம், தில்லியில் தலா ஒரு வழக்கும் உள்ளது.
போலீஸார் நடத்திய விசாரணையில் சந்திரசேகர் தனக்கு 8 மொழிகள் பேச, எழுத தெரியும் என தெரிவித்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே மோசடியில் ஈடுபட்டதாகவும், மோசடிக்காக ஐ.ஏ.எஸ் எனக் கூறிக் கொண்டு சென்னையில் சிவப்பு சைரன் விளக்கு வைத்த காரில் வலம் வந்ததாகவும், லீனா மரியாபாலுடன் பேஸ்புக்கில் இணைந்திருந்தவர்களிடமும் மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


