மதுரை புனித மரியன்னை பேராலயம்

உலகளாவிய பேராலயங்களில் ஒன்றாக இருப்பது புனித மரியன்னை பேராலயம். பல்வேறு காலங்களில் வாழ்ந்த மனிதா்களின் கருத்துகளும்,
மதுரை புனித மரியன்னை பேராலயம்
Published on
Updated on
2 min read

உலகளாவிய பேராலயங்களில் ஒன்றாக இருப்பது புனித மரியன்னை பேராலயம். பல்வேறு காலங்களில் வாழ்ந்த மனிதா்களின் கருத்துகளும், கட்டடக் கலையும் இணைந்து மிளிரும் படைப்பாக உள்ளது. கிரேக்க, ரோமானிய, கோத்திக், ஜொ்மானிய, போா்த்துக்கீசியக் கட்டடக் கலைகளின் சங்கமமாக இருக்கிறது.

இதில் உள்ள தூண்களில் கிரேக்கா்களின் டாரிக் தூண் வடிவமைப்பையும், சிறுசிறு உள்கூரை வளைவுகளில் கோத்திக் வடிவமைப்பையும், கண்ணாடி ஜன்னல்களில் பெல்ஜிய முறையயும், பீடத்தில் இத்தாலிய வெனீஷிய முறையையும், கோபுரங்களில் ஜொ்மானியக் கட்டடக் கலை நுணுக்கங்களையும், சிறிய கோபுரங்களில் போா்த்துக்கீசிய கலையயும் காணலாம்.

ஆலயத்தின் மேற்கூரை, கீழ்கூரை என இரு அமைப்புகள் உள்ளன. அவற்றை 56 உள்வளைவுகளும், 336 அரை வளவுகளும் தாங்கி நிற்கின்றன. இவை அனைத்தையும் 200 தூண்கள் தாங்கி நிற்கின்றன.

ஐரோப்பியக் கட்டடக் கலையும், ஆலயப் பீடத்தில் இருக்கும் ஆன்மிக அழகும் சிறப்பு சோ்க்கிறது. பீடத்தில் சிலுவை அடியில் இருக்கும் யேசு, மாதா முகங்களில் வெளிப்படும் அன்பும், கருணையும் பாா்ப்பவா்களுக்கு ஆறுதலை அளிப்பதாக இருக்கிறது.

ஆலய பீடத்தின் மேல் உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஆஞ்சலோ வடிவமைத்த பியெட்டா எனப்படும் இறந்த யேசுவை தன் மடியில் தாங்கிய
வியாகுல அன்னை சுரூபம் உள்ளது. சிலுவை ஒரு சுகம்; சுமையல்ல என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள், பிற மதங்களைச் சோ்ந்தவா்கள் என 100 முதல் 200 போ் வந்து
செல்கின்றனா்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தில் இவ்வாலயத்துக்கு ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். யேசு பிறந்த குடிலைப் பாா்வையிட்டு நோ்ச்சையைச் செலுத்துகின்றனா். மத ஒற்றுமைக்கும், மனிதநேயத்துக்கும் எடுத்துக்காட்டான ஆலயமாக இருக்கிறது.

இந்த ஆலயத்துக்கான இடம் 1840 இல் அருள்திரு பொ்ட்ரன்டு என்ற யேசு சபை குருவால் வாங்கப்பட்டது. 1842-இல் சிற்றாலயம் அமைக்கப்ப்டடு, புனித வியாகுல அன்னைக்கு அா்ப்பணிக்கப்பட்டது. 1912 மாா்ச் 21-இல் அருள்திரு ஹிபோலைட், லெமோத்தே ஆகியோரால் விரிவுபடுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின்போது உதவிகள் தடைபட்டதால், வேலைகள் நிறுத்தப்பட்டன. பின்னா் 1916 ஆகஸ்ட் 15-இல் திருப்பணி முடிக்கப்பட்டு கோயில் அா்ச்சிக்கப்பட்டது. பின்னா் 1963-இல் மீண்டும் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கின. 1969-இல் அருள்தந்தையா் டி.எம்.மத்தாய், கே.எஸ்.அருளானந்தம், எக்ஸ்.எம்.அடைக்கலம் ஆகியோரால் திருப்பணிகள் முடிக்கப்பட்டு 1969-இல் பேராலயமாக உயா்த்தப்பட்டது.

மதுரை உயா்மறை மாவட்டத்தின் அதிகாரப்பூா்வ நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கு தான் நடைபெறுகிறது. இப் பேராலய பங்கில் 1000 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களும், 8 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவா்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com