சிரம் சாய்த்து அருளும் நாகை மாதரசி மாதா
இந்தியாவின் கடைக்கோடிப் பகுதிகளில் ஒன்றான நாகை மாவட்டத்தின் பெயரைச் சோழர்கள் காலத்துக்குப் பின்னரும் உலகளவில் உச்சரிக்கக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் போர்த்துக்கீசியர்கள்.
பௌத்தம், சைவம், வைணவம் என பல நெறிகள் பரவியிருந்த இப்பகுதியில் உலகப் புகழ்ப் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்பட மகிமைகள் நிறைந்த பல தேவாலயங்கள் ஏற்பட காரணமாக இருந்தவர்கள் போர்த்துக்கீசியர்களே.
அந்த வகையில், போர்த்துக்கிசீயர்களால் நிர்மாணிக்கப்பட்டு, மகிமைகளின் மகுடமாக விளங்குகிறது நாகை புனித மாதரசி மாதா திருத்தலம். நாகை இரண்டாவது கடற்கரைச் சாலையில் உள்ள இத்திருத்தலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மாலுமிகளால் கட்டப்பட்டது.
போர்த்துக்கீசியர் வசமிருந்த நாகை, கி.பி 1660 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. போர்த்துக்கீசியர்கள் மாதா வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில், உருவ வழிபாட்டை ஏற்காத டச்சுக்காரர்களின் ஆளுமை, மாதா வழிபாட்டுத் தலங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அப்போது, மாதாவின் மீது பக்தியற்ற டச்சுக்காரர்களால், நாகை புனித மாதரசிமாதாவின் திருச்சொரூபம் பழுதாக்கப்படலாம் என்ற அச்சம், அப்போதைய மாதரசி மாதா ஆலய நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, நாகையில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஒன்றிணைந்து, மாதரசி மாதாவின் திருச்சொரூபத்தை மறைத்து வைக்கத் திட்டமிட்டனர்.
இதன்படி, புனிதமாதரசி மாதாவின் திருச்சொரூபத்தை உள்ளே வைத்துக் கொண்டுச் செல்வதற்காக ஒரு மரப்பெட்டி தயாரிக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் மாதாவின் திருச்சொரூபத்தை வைத்து, இரவோடு இரவாக வேறு இடத்துக்குக் கொண்டுசென்று மறைத்து வைத்து விடலாம் என்பது அவர்கள் திட்டமாக இருந்தது. இதன்படி, ஒரு நாள் இரவு புதிதாக தயாரிக்கப்பட்ட மரப்பெட்டியுடன் மாதாவின் திருத்தலத்துக்குச் சென்று, மாதாவை துதித்து அவரது திருச்சொரூபத்தை அந்த மரப்பெட்டிக்குள் வைக்க அவர்கள் முயன்றனர்.
ஆனால், அவசரகதியில் தயாரிக்கப்பட்ட அந்தப் பெட்டி, மாதாவின் திருச்சொரூபத்த முழுமையாக உள்வாங்கும் உயரம் கொண்டதாக இல்லாமல் சற்று சிறிதாக இருந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த ஆலய நிர்வாகிகள், காலையில் வேறு ஒரு பெட்டியைத் தயாரித்துக் கொண்டு வந்துமாதாவை இடம் மாற்றலாம் எனக் கருதி, உயரம் பற்றாக்குறையாக இருந்த அந்தப் பெட்டியின் மீதே அன்னையின் திருச்சொரூபத்தை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் அவர்கள் மீண்டும் மாதாவின் திருத்தலத்துக்கு வந்தபோது, அங்கு நிகழ்ந்திருந்த மகிமை அனைவரையும் திகைப்பும், ஆன்மிகத் திளைப்பும் அடையச் செய்தது. காரணம், முதல் நாள் இரவு பெட்டியின் அளவு சிறிதாக உள்ளது எனக் கருதி பெட்டியின் மேலேயே வைத்துவிட்டுச் சென்றிருந்த அன்னையின் திருச்சொரூபம், மறுநாள் காலையில் அந்தப் பெட்டியினுள் இருந்தது.
தன் திருச்சொரூபத்தைப் பாதுகாப்பதற்காக சிரத்தையுடன் முயற்சிகள் மேற்கொண்டிருந்த பக்தர்களுக்காக, அன்னை மாதரசி மாதா தன் சிரத்தை வலப்புறம் சாய்த்து புதுமையை நிகழ்த்தியிருந்த அற்புதம் அன்று நடைபெற்றிருந்தது.
இந்த மகிமையால் மட்டற்ற மகிழ்ச்சிக்குள்ளான ஆலய நிர்வாகிகள், புனித மாதரசி மாதாவின் திருச்சொரூபத்தை நாகையிலிருந்து எடுத்துச் சென்று, அம்மாபேட்டைக்கு அருகே வயல்கள் சூழ்ந்த ஒரு களத்துமேட்டின் நடுவே, சிற்றாலயம் ஒன்று எழுப்பி மறைத்து வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், புனித மாதரசி மாதாவின் திருக்கருணையால், அன்னையின் திருச்சொரூபம் மீண்டும் நாகைக்குக் கொண்டு வரப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. அன்று முதல், இந்த ஆலயம் அழியா வரலாற்றுச் சின்னமாகவும், கன்னி மரியாள் தன் திருமகன் வழியாக செய்யும் அற்புதங்களின் அடையாளமாகவும், நாடி வரும் பக்தர்களுக்கு நலம் பல அருளும் திருத்தலமாகவும் ஆன்மிக மணம் பரப்பி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.