நடிகர் சந்திரபாபு நிதி திரட்டி கட்டப்பட்ட கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தலம் கட்டுவதற்காக நடிகர் சந்திரபாபு கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டித் தந்துள்ளார்.
கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தலம்
கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தலம்

புகழ்பெற்ற திரைப்பட நடிகர் சந்திரபாபு கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டித் தந்து கட்டப்பட்டது, கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாத்திமா அன்னை திருத்தலம். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி பகுதி பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. பாரமஹால் என்பது பன்னிரண்டு கோட்டைகள் கொண்ட பகுதியாகும். திப்பு சுல்தானிடமிருந்து பாரமஹால் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு 1768 ஆம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவர்கள் எலத்தகிரி - வெண்ணம்பள்ளி பகுதியிலிருந்து கிருஷ்ணகிரிக்குக் குடியேறினர். ஆங்கிலப் படைகளில் இருந்த கிறிஸ்துவர்கள் ஜெபக் கூட்டத்தில் பங்கேற்று வந்தனர்.

போர்ச்சுகல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை பாத்திமா திருவுருவம்
போர்ச்சுகல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை பாத்திமா திருவுருவம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு ஜெபக் கூட்டங்களைப் பாதிரியார்கள் நடத்தி வந்தனர். கிருஷ்ணகிரியில் லைன் கொல்லை என்ற பகுதியில் கொட்டகை அமைத்து சேவையாற்றி வந்த பாதிரியார்கள் பின்னர் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் சிறிய அளவில் ஒரு ஆலயத்தைக் கட்டமைத்தனர். பின்னர் அந்த ஆலயம் பல மாற்றங்களுக்கு உள்படுத்தப்பட்டது,  தற்போது அந்த ஆலயம் லொயலா இஞ்ஞாசியார் ஆலயம் என அழைக்கப்படுகிறது. பாத்திமா அன்னை திருத்தலம் பங்கு ஆலயமாக மாற்றப்படும் வரையில் இஞ்ஞாசியார் ஆலயம் பங்கு ஆலயமாக விளங்கி வந்தது.

1930 முதல் 1933 வரை பழையபேட்டையில் தங்கிப் பணியாற்றிய பாதிரியார் கபிரியேல் பிளேயுஸ்ட், பெங்களூரு சாலையில் 3.04 ஏக்கர் பரப்பளவு நிலத்தை 1931 ஆம் ஆண்டில் ராசப்ப முதலியாரிடம் இருந்து வாங்கினார். 1936 முதல் 1946 வரை பங்குத்தந்தையாக இருந்த வாஷோன், புதிய இடத்தில் குருக்கள் இல்லத்தைக் கட்டினார். 1951 முதல் 1964 வரையில் பங்குத்தந்தையாக இருந்த குழந்தைநாதர், கிருஷ்ணகிரியில் இறைமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர்ந்து புதிய ஆலயம் கட்டத் திட்டமிட்டார்.

அதையடுத்து கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் தற்போதைய பெங்களூரு சாலையில் பெரிய அளவில் ஆலயம் கட்ட 1958 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

சேலம் மறைமாவட்ட ஆயர் செல்வநாதர் அனுமதியுடன் அருள்தந்தை குழந்தைசாமி நாதர் முயற்சியால் பாத்திமா அன்னை திருத்தலக் கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. இந்த திருத்தலம் கட்டுவதற்கு பெரும் தொகை தேவைப்பட்ட நிலையில் கலை நிகழ்ச்சிகள்  மூலம் நிதி திரட்ட தீர்மானிக்கப்பட்டது.

தற்போது  அமைந்துள்ள திருத்தலத்தின் எதிரே உள்ள பள்ளி வளாகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்தவரான புகழ்பெற்ற திரைப்பட நடிகர் சந்திரபாபு பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நடிகர் சந்திரபாபு பங்கேற்ற கலை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கப் பொதுமக்களிடமிருந்து நாலணா, எட்டணா, 5 ரூபாய், 50 ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நடிகர் சந்திரபாபு  பம்பரக் கண்ணாலே என்ற பாடலுக்கு நடனமாடியும் நகைச்சுவை ஜோக்குகளை கூறி பொது மக்களை மகிழ்வித்தார். ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வசூலான ரூ. 10 ஆயிரத்தைக் கட்டட நிதியாக நடிகர் சந்திரபாபு நிதி திரட்டிக் கொடுத்தார்.

அந்த நிதி திருத்தலத்தின் அஸ்திவாரப் பணிக்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 11.7.1963 அன்று குழந்தைநாதர் இறந்தார். தொடர்ந்து பொறுப்பேற்ற ஐசக் அடிகளார் பாத்திமா அன்னை திருத்தலத்தை கட்டி முடித்தார். 11.09.1972 அன்று சேலம் ஆயரால் பாத்திமா அன்னை திருத்தலம் புனிதப்படுத்தப்பட்டது. 

பாத்திமா அன்னை திருத்தலத்தை மறைமாவட்ட திருத்தலமாக 7. 10 2000 அன்று தர்மபுரி ஆயர் ஜோசப் அந்தோனி இருதயராஜ் நிலை உயர்த்தினார்.

நடிகர் சந்திரபாபுவின் பங்களிப்பை போற்றும் வகையில் ஆலயத்தின் அஸ்திவாரத்தில் அவரது பெயரை குறிப்பிட்டு ஒரு கல்வெட்டு பதியப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் தேர்த் திருவிழா நாள்களில் நடிகர் சந்திரபாபுவுக்கு நன்றி செலுத்தும் வகையில் கிறிஸ்துவர்கள் சிறப்பு ஜெபத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com