மலைகளின் அரசியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோடைக் கால வசிப்பிடமாக நீலகிரியை ஆங்கிலேயர்கள் தேர்வு செய்ததிலிருந்து கிறிஸ்துவ கலாசாரமும் பழக்கவழக்கங்களும் இங்கிருந்தவர்களிடமும் பரவியது.
புனித தாமஸ் தேவாலயம்
புனித தாமஸ் தேவாலயம்


உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் டிசம்பர் 1 ஆம் தேதி முதலே தொடங்கிவிடுகின்றன.

திருவருகைக் காலம் என கிறிஸ்துவர்களால் அழைக்கப்படும் கிறிஸ்து பிறப்பின் காலம் டிசம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் தொடங்கிய பின்னர் கோடைக் கால வசிப்பிடமாக நீலகிரியை ஆங்கிலேயர்கள் தேர்வு செய்ததிலிருந்து கிறிஸ்துவ கலாசாரமும் பழக்கவழக்கங்களும் இங்கிருந்தவர்களிடமும் பரவியது.

இதைத் தொடர்ந்து இன்னமும் இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துவர்களால் கடைப்பிடிக்கப்படும் அதே பழக்கவழக்கங்கள் நீலகிரியிலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ஸ்டீபன் தேவாலயம்
புனித ஸ்டீபன் தேவாலயம்

கிறிஸ்துவர்களின் மூன்று முக்கிய கொண்டாட்டங்களான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் பண்டிகைக் காலங்கள் இரவிலிருந்துதான் தொடங்குகின்றன. அதிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உறைபனிக் காலத்தில் வருவதால் இவை மூன்றுமே முக்கிய பண்டிகைகளாகவே இன்னமும் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.

உதகையைப் பொருத்தமட்டில் கிறிஸ்துமஸ் காலத்தில் வீடுதோறும் கேரல்ஸ் எனப்படும் கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் நிகழ்ச்சி, சாண்டா கிளாஸ் ஊர்வலம் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்,  லைவ் கிரிப் எனப்படும் மனிதர்களாலேயே கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் நிகழ்ச்சி ஆகியவற்றோடு, அனைத்து கிறிஸ்துவர் இல்லங்களிலும் கிரிப் எனப்படும் குடில் அமைத்தல், வீடுகளின் முகப்பில்  வால் நட்சத்திரத்தை  நினைவுபடுத்தும் ஸ்டார் அமைத்தல் போன்றவை இன்னமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

கிறிஸ்து பிறப்பை நினைவுபடுத்தும் லைவ் கிரிப் எனப்படும் மனிதர்களால் நடத்தப்படும் கிறிஸ்து பிறப்பின் ஊர்வலம்
கிறிஸ்து பிறப்பை நினைவுபடுத்தும் லைவ் கிரிப் எனப்படும் மனிதர்களால் நடத்தப்படும் கிறிஸ்து பிறப்பின் ஊர்வலம்

இவை அனைத்துமே நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடைபிடிக்கப்படுகின்றனவா என்றால் முழுமையாக உள்ளதாக கூற முடியாது. ஆனால், ஆங்கிலேயர்களின் கலாசாரத்தை ஒட்டி வாழ்ந்த நீலகிரி மாவட்டத்தில் இவை இன்னமும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அம்சங்களாகும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பழமையான தேவாலயங்கள் அனைத்துமே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையே. இதில் குறிப்பிடத்தக்கது உதகையிலுள்ள புனித ஸ்டீபன் தேவாலயம்.

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் முதன்முதலில் உருவாக்கப்பட்டது இந்த தேவாலாயம்தான். 19ம் நூற்றாண்டில்  1865ம் ஆண்டில் இங்கிலாந்தின் மன்னராக இருந்த 4ம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளையொட்டி அமைக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மைசூர் மன்னரான திப்பு சுல்தானை ஆங்கிலேயப் படைகள் தோற்கடித்த பின்னர் அந்த அரண்மனையிலிருந்து எடுத்து  வரப்பட்டவை என ஆவணங்களில் கூறப்படுகிறது.

உதகையிலுள்ள மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில். 
உதகையிலுள்ள மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில். 

ஆங்கிலேயர்களின் கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழும் இந்த தேவாலயத்தை வார நாள்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பார்வையிடலாம். இதற்கு நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது. இந்த தேவாலயத்தைச் சுற்றியுள்ள கல்லறைத் தோட்டத்தில் இந்தியாவின் ஆளுமைமிக்க பல்வேறு ஆங்கிலேய உயர் அலுவலர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல,  உதகையின் மற்றொரு புகழ்மிக்க தேவாலயம் புனித தாமஸ் தேவாலயமாகும். இதுவும் 19ம் நூற்றாண்டில்,  1867ம்  ஆண்டில் கட்டப்பட்ட தேவாலயமாகும். இங்கும் ஆங்கிலேயரின் கட்டடக் கலைக்கு சான்றாக பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல இங்குள்ள கல்லறைத் தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளோரும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது மிக முக்கிய மனிதர்களாக இருந்தவர்களாவர்.

இவர்களில் குறிப்பிடத்தக்க  ஒருவரின் கல்லறைத் தோட்டமும் உள்ளது. சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளராக இருந்த ஜே.ஜே. குட்வினின் கல்லறைத் தோட்டம் இங்குதான் அமைந்துள்ளது. அதேபோல, எ பேசேஜ் டு இந்தியா என்ற ஆங்கில திரைப்படமும் இங்கு படமாக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் விழா, நாட்டின் ஒவ்வோரிடத்திலும் ஒருவிதமாகக் கொண்டாடப்பட்டாலும் நீலகிரியைப் பொருத்தவரை ஆங்கிலேயர்களைப் போலத்தான்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com