சேலத்தின் மையமான பாரம்பரியமிக்க சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்!

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே 145 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் மிக்கதாகத் திகழ்கிறது சேலம் நகரில் மையத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்.
சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்.
சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்.

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே 145 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரிய ம் கொண்டதாகத் திகழ்கிறது சேலம் நகரில் மையத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்.

1861 இல் இந்திய நில அளவைத் துறையினர் நடத்தி முடித்த திரிகோண நில அளவையின் சேலம் நகரின் மையம் என்ற கல்வெட்டு, இந்தக் கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1853 ஆம் ஆண்டில் தூய திருத்துவ ஆங்கிலிக்கன் ஆலயம் ஏற்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் போதகர், சேலத்தில் உள்ள ஆங்கிலிக்கன் கிறிஸ்துவர்களுக்கு வேண்டிய ஆராதனை, ஞானஸ்நானம், திருமணம் மற்றும் அடக்கம் ஆகியவற்றை நடத்தி 1875 ஆம் ஆண்டு வரை பதிவு செய்து வந்தார்.

சேலம் நகரின் மையம்

1866 இல் சேலம் நகரில் வாழும் ஆங்கிலிக்கன் சபையைச் சேர்ந்தவர்கள் ஆராதனை செய்ய ஓர் ஆலயம் கட்டத் தீர்மானித்தனர். அதன்பேரில் ஆலயம் கட்ட பழைய ஆங்கிலேயர் கல்லறைத் தோட்டம் எதிரே உள்ள தனது இடத்தை ஜெசி தாமஸ் விட்டுக் கொடுக்க முன்வந்தார். ஏற்கெனவே அவரது அந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் பில்லியர்ட்ஸ் விளையாடும் அரங்கு ஒன்று இருந்தது.

அந்த அரங்கின் படிக்கட்டில் 1861 இல் இந்திய நில அளவைத் துறையினர் நடத்தி முடித்த திரிகோண நில அளவையின் சேலம் நகரின் மையம் என குறிக்கப்பட்டிருந்தது. அந்த நிலப் பகுதி சேலம் நகரின் மையமான முதல் திரிகோணத்திற்கு உட்பட்டு இருந்தது. இந்த இடமே ஆலயம் கட்ட உகந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது.

1875 இல் கட்டி முடிக்கப்பட்டது

சேலம் நகரின் மைய பூமியில் 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி ஆலயம் கட்ட அடித்தளக் கல் பதிக்கப்பட்டது. பின்னர் 1875 அக்டோபர் 26 ஆம் தேதி ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, சென்னை பேராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு கிறிஸ்துநாதர் ஆலயம் என்று பெயரிடப்பட்டது.

கலைப் படைப்புகள்

இந்த ஆலயத்தில் காணப்படும் கட்டுமானங்கள், கண்ணாடி ஓவியங்கள், கலைப்படைப்புகள் வரலாற்றின் சாட்சியமாக கண் முன் நிற்கின்றன.

கட்டட பாணி

இந்தோ-சார்சனிக் கட்டடக் கலைப் பாணியில் இந்த ஆலயத்தை வடிவமைத்தவர் சென்னை பல்கலைக்கழக செனட் மன்றத்தை வடிவமைத்த பிரிட்டிஷ் அரசு கட்டட கலைஞர் ராபர்ட் பெல்லோஸ் சிஸ்சோம் (1840-1915). இதே கட்டட பாணியில்தான் மதுரையில் தூய ஜார்ஜ் ஆலயம் கட்டப்பட்டது.

ஆலய மணி

பிரிட்டிஷ் அரசின் நன்கொடையான பெரிய மணி, சென்னை தங்க சாலையில் 1861 இல் வார்த்து வடிவமைக்கப்பட்டது. இந்த மணி, கிறிஸ்துநாதர் ஆலய கோபுரத்தில் பொருத்தப்பட்டது.

பழைய ஆங்கிலேயர் கல்லறை தோட்டம் (1792-1883)

இன்றைக்கு 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கல்லறைத் தோட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பிரிட்டிஷ் ஆட்சியர்கள், நீதிபதிகள், சேலம் மாவட்டத்தில் முன்னோடி லண்டன் மிஷினரி சங்க மிஷனரிகள் 7 பேர் ஆகியோரின் கல்லறைகள் உள்ளன.

இதுதொடர்பாக, சேலம் வரலாற்று சங்க பொதுச் செயலாளர் ஜே.பர்னபாஸ் கூறுகையில், சேலம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயமாகும். இந்தோ-சார்சனிக் கட்டட கலையில் கட்டப்பட்ட கட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இதுபோன்ற கட்டடங்களைப் பாதுகாத்து, பராமரித்து என்றும் நிலைத்து நிற்கும்படி செய்ய வேண்டும். சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சேலம் நாட்டாண்மைக் கழக கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை வரலாற்று சின்னங்களாகப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

படங்கள்: வே.சக்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com