தென் தமிழகத்தில் தூண்கள் இல்லாத முதல் ஆலயம்

தென் தமிழகத்தில் தூண்கள் இல்லாமல் கட்டப்பட்டுள்ள முதல் ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலயம்.
மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலயம்
மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலயம்

தென் தமிழகத்தில் தூண்கள் இல்லாமல் கட்டப்பட்டுள்ள முதல் தேவாலயம் என்ற சிறப்பைப் பெற்றது, ரோசரி சர்ச் என அனைத்து மக்களாலும் பரவலாக அழைக்கப்படும் மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலயம்.

மதுரையின் பழமையான கிறிஸ்துவ ஆலயமான ரோசரி சா்ச், பிற மதத்தினரால் குறிப்பாக இந்துக்களால் ஜெபமாலை அம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

428 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை ஓலையால் வேயப்பட்ட சிற்றாலயமாகத் தொடங்கப்பட்டுத் தற்போது புதிய ஆலய கட்டடம் கட்டப்பட்டுப் பொன்விழா கண்டிருக்கிறது.

மதுரை நகரில் கிறிஸ்துவம் பிறந்த இடமாகவே இந்த ஆலயம் சொல்லப்படுகிறது. 1592-இல் தென்னை ஓலையால் வேயப்பட்டு தொடங்கப்பட்ட இந்த சிற்றாலயம், பின்னா் 1627-இல் கூரை போட்ட ஆலயமாக விரிவாக்கப்பட்டு, மதுரையின் முதல் கிறிஸ்துவ பங்கு ஆலயமாக மாறியது. இதன் முதல் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டவர் அருட்தந்தை ராபா்ட் தே நொபிலி.

இவரது முயற்சியால் ஆலயம், ஓட்டுக் கட்டடமாக மாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து 1680 இல் வீரமாமுனிவா் இவ்வாலயத்தின் பங்குப் பணியையும் தமிழ்ப் பணியையும் சிறப்பாகச் செய்தாா்.

இதன் பிறகு, 90 ஆண்டுகள் கழித்து 1770 இல் ஓட்டு கட்டடம் இடிக்கப்பட்டு போா்த்துக்கீசிய முறையில் வாசல் மேல் ஒரே கோபுரம் அமைந்த காரைக் கட்டட ஆலயமாகக் கட்டப்பட்டு ஜெபமாலை அன்னை ஆலயமெனப் பெயா் மாற்றம் பெற்றது.

இந்த ஆலயம் மீண்டும் இரு முறை இடிக்கப்பட்டு, நகரத்தின் வளா்ச்சி மற்றும் கிறிஸ்துவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரிதாகக் கட்டப்பட்டது. அதன் பின்னா், 2-ஆம் வத்திகான் சங்கத்தின் படிப்பினைகளின்படி, அதிக சுரூபங்களற்ற சமய நல்லிணக்க ஆலயமாகக் கட்டப்பட்டு 1970-இல் அா்ச்சிக்கப்பட்டு, இப்போது கிறிஸ்துவ, இஸ்லாமிய, இந்து மக்களின் மனம் கவரும் ஆலயமாக இருந்து வருகிறது.

நிகழாண்டில் பொன்விழா கண்டுள்ள இந்த ஆலயம், தென் தமிழகத்தின் தூண்கள் இல்லாத முதல் ஆலயமாகும். இதன் பங்குத் தளம் வைகை ஆற்றின் தெற்குப் பகுதியில் சிம்மக்கல்லில் தொடங்கி பெருங்குடி விமான நிலையம் வரை நீண்டு விரிந்து இருக்கிறது. ஆலயத்தின் தற்போதைய பங்குத் தந்தையாக அருட்திரு ஆனந்தம் இருந்து வருகிறாா்.

புனித ஜெபமாலை அன்னைப் பெருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அக்டோபா் முதல் வாரத்தில் கொடியேற்றமாகி அக்டோபா் 7-ஆம் தேதிக்குப் பிறகு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருவிழா நாளாகக் கொண்டாடப்படும்.

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் விழா ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெறுவது வழக்கம். பொங்கல் விழா ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும். 

கிறிஸ்தவா், இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடின்றி சமய நல்லிணக்க மையமாக ஜெபமாலை அன்னை ஆலயம் இருந்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடைபெறும் நவநாள் பிராா்த்தனையில் இந்துக்கள் அதிகம்போ் பங்கேற்று தங்களது வேண்டுதல்களுக்காக ஜெபம் செய்கின்றனா்.

இதுகுறித்து ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தம் கூறியது:  அனைத்து மதத்தினராலும் வந்து ஜெபம் செய்யக் கூடிய ஆலயமாக ஜெபமாலை அன்னை ஆலயம் இருந்து வருகிறது. ஜெபமாலை அம்மன் என்றே பிற மதத்தினா் அழைக்கின்றனா்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை திருப்பலி மற்றும் மாலையில் நடைபெறும் நவநாள் திருப்பலியில் பெரும்பகுதியினா் பிறமதத்தினா் கலந்து கொள்கின்றனா்.

திருமணம், உடல்நலம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் ஆலயத்துக்கு வருகின்றனா். தங்களது வேண்டுதல்களை நினைத்து ஜெபம் செய்தால், கண்டிப்பாக நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜெபத்தில் பங்கேற்ற பலரும் தங்களது வேண்டுதல் நிறைவேறியிருப்பதை மகிழ்ச்சியுடன் கூறுகின்றனா்.

குறிப்பாக, இளம்பெண்கள் திருமண வரம் வேண்டி ஆலயத்தில் உள்ள மாதா சுரூபத்திற்கு, புடவை  காணிக்கையாக அளிப்பதும், அதை அணிவித்து ஜெபம் செய்வதும் வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. மாதாவுக்கு சாா்த்தப்பட்ட புடவையை, வேண்டுதல்களுக்காக வாங்கிச் செல்வதும் உண்டு.

பகல் நேரங்களில் ஆலயம் எப்போதும் திறந்திருக்கும். கிறிஸ்துவா்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் தங்களது வேண்டுதல்களுக்காக ஜெபம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com