மத நல்லிணக்க அடையாளம் ராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலயம்!

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் வரலாற்று சிறப்புமிக்க புனித பனிமய மாதா ஆலயம், 166 ஆண்டுகளை கடந்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
ராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலயம்
ராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலயம்

கம்பம்: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித பனிமய மாதா ஆலயம், 166 ஆண்டுகளைக் கடந்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் உள்ளது ராயப்பன்பட்டி. இங்குள்ள புனித பனிமய மாதா ஆலய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் 3 மேல்நிலைப்பள்ளிகள் தமிழக அளவில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து மாநில அளவில் சாதனைகளை புரிந்து வருகிறது. 

கடந்த 1840 ஆம் ஆண்டு ராயப்ப உடையார் என்பவரால் ராயப்பன்பட்டி உருவாக்கப்பட்டது, அப்போது ஆங்கிலேயர் லூயிஸ் செயின்ட் சீர் என்ற பங்குத் தந்தை 1854 ஆம் ஆண்டு புனித பனிமய மாதா ஆலயத்தை சிறிய அளவில் கட்டினார். தற்போது இந்த கோவிலின் கோபுரம் 140 அடி உயரமாக சிறப்புற்று விளங்கி வருகிறது.

இந்த ஆலயம் அன்றைய திருச்சி மறைமாவட்டத்தில் பஞ்சம்பட்டி பங்கு, பின்னர் சிலுக்குவார்பட்டி பங்கு,  அதன்பின் தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி பங்கில் 1889 ஆம் ஆண்டு  நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.

பின்னர் 1925 ஆம் ஆண்டு பாரிஸ் நகரிலிருந்து ஒரு பெரிய ஆலயமணி இந்த ஊரைச் சேர்ந்த சவரியப்ப உடையார் என்பவரால் கொண்டுவரப்பட்டு, கோபுரத்தில் வைக்கப்பட்டது.

1938 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, புனித பனிமய மாதா கோவில் பல்வேறு வகைகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பின்னர் 1979 ஆம் ஆண்டு 75 வது ஆண்டு பவள விழா ஊர் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஆரோக்கிய அடிகள் என்பவர் தலைமையில் ஆலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் சாதி, மதம் பாராமல் கோவிலுக்கு வந்து கலந்து கொண்டனர்.

தற்போது ஆலயம் தொடங்கி 166வது ஆண்டுகள் ஆனாலும் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் புனித அலோசியஸ் ஆரம்ப, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஆக்னஸ் ஆரம்ப, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். பள்ளிகளைத் தொடர்ந்து அவற்றை நிர்வாகிக்க புனித அன்னாள் சபை, திரு இருதய சகோதரர்கள் சபை போன்றவை துவக்கப்பட்டது.

166 ஆண்டுகள் கண்ட இந்த ஆலயத்தை கடந்த 1846 ஆம் ஆண்டு முதல் தற்போது 2020ஆம் ஆண்டு வரை 11 ஆயர்கள் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த ஆலயத்தில் இதுவரை 31 பங்குத்தந்தையர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்று சிறப்பு பூஜைகளை நடத்தி உள்ளனர்.

இவ்வாறு பழம் பெருமைமிக்க புனித பனிமய அன்னை ஆலயம், கம்பம் உத்தமபாளையம் வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து மத பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளது.  இன்றுவரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழாக்காலங்களில் அனைவரும் கலந்துகொண்டு புனித பனிமய அன்னையை தரிசித்து வருகின்றனர் என்பது இப்பகுதியில் ஒரு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com