150 ஆண்டுகள் கடந்த தஞ்சை திரு இருதய ஆண்டவர் பேராலயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகப் பழமையான கிறிஸ்துவ தேவாலயங்களில் ஒன்று தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் அமைந்துள்ள தூய வியாகுல மாதா ஆலயம்.
சகாய மாதா
சகாய மாதா

தஞ்சை மறை மாவட்டம், நாகப்பட்டினத்தில் கி.பி. 1545 ஆம் ஆண்டளவில் சவேரியார் மறைத் தொண்டு புரிந்தார். கி.பி. 1667 ஆம் ஆண்டுக்குப் பின் தூய அருளானந்தர் தஞ்சாவூர் மக்களிடையே மறைப் பணி ஆற்றினார் என்பனவெல்லாம் வரலாறுகள்.

தஞ்சாவூருக்குக் கோவா குருக்கள் எப்போது வந்தனர் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் போற்றிப் பாராட்டப்படும் வீரமாமுனிவர் தஞ்சாவூர் பங்குத்தந்தையாகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பே தஞ்சாவூர் தூய வியாகுல அன்னை திருக்கோயில் கோவா குருக்களின் கண்காணிப்பில் இருந்து வந்தது.

திரு இருதய ஆண்டவர்
திரு இருதய ஆண்டவர்

கி.பி. 1838ல் திருத்தந்தை 16 ஆம் கிரகோரியாரின் முல்த்தா பிரக்லாரா என்ற திருமடலால் தஞ்சாவூர், பாத்ரொவாதோ (கோவா குருக்கள்) பொறுப்பிலிருந்து மறை பரப்புப் பேராயத்தின் பொறுப்புக்கு மாற்றப்பட்டது.

1843 வரை பாரிஸ் அயல் நாட்டு மறைபரப்புக் குருக்கள் தஞ்சாவூரில் பணியாற்றியுள்ளனர். 1843ல் வெட்டாறுக்கு வடக்கே உள்ள பகுதி புதுவை மறை மாவட்டத்தைச் சார்ந்த அயல் நாட்டு மறை பரப்புக் குருக்களிடமும், தெற்கே உள்ள பகுதி மதுரை மண்டலத்தைச் சார்ந்த சேசு சபைக் குருக்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.

புனித வியாகுல மாதா ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டத்திலே உள்ள மிகப் பழமையான கிறிஸ்துவத் தேவாலயங்களில் ஒன்று தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் அமைந்துள்ள தூய வியாகுல மாதா ஆலயம். வீரமாமுனிவர் தஞ்சாவூர் பகுதியில் பணிபுரிந்த காலத்துக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆலயம் இருந்ததாக இயேசு சபைக் குருக்கள் எழுதி வைத்த ஓர் ஆண்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலயத்தின் உள்புறம்
ஆலயத்தின் உள்புறம்

இந்த ஆலயமானது பாத்ரொவாதோ குருக்களின் பணித்தளமாகக் திகழ்ந்தது. பூக்காரத் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்கர் மத்தியில் இவர்கள் மறைப் பணியாற்றினர். தற்பொழுது புனித அடைக்கல அன்னை சபைக் கன்னியர் இல்லமாகக் திகழ்கிற இல்லமே வியாகுல மாதா ஆலயப் பங்குக் குருக்கள் இல்லமாக இருந்தது.

பின்னர், தஞ்சாவூர் பகுதி உரோமை மறைப்பரப்புப் பேராலயத்தின் கீழ் வந்தவுடன் வியாகுல மாதா ஆலயம், திரு இருதய ஆண்டவர், ஆலயப் பங்குக் குருவின் பொறுப்பின் கீழ் வந்தது. பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் பெரும் உதவி செய்த தஞ்சாவூர் மராட்டிய மாமன்னர் இரண்டாம் சரபோஜி (1798 - 1832) இந்த தூய வியாகுல மாதா ஆலயத்துக்கு ஆலயப் பணிக்காக நிலங்கள் மற்றும் பொருளுதவி வழங்கியுள்ளார்.

குழந்தை இயேசு
குழந்தை இயேசு

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் கொண்டாடப்படும் இத்தேவாலயத் தேர் திருவிழா, திருப்பலியில் தஞ்சாவூர் நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களில் வாழும் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ மக்கள் இப்போதும் உற்சாகத்தோடு கலந்து கொள்வதைப் பார்க்கலாம்.

தஞ்சாவூர் பூக்காரத் தெரு மற்றும் அதைச் சுற்றிலும் வாழக்கூடிய கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல், பிற சமயத்தைச் சார்ந்த சகோதர,  சகோதரிகளும் இத்தேவாலயத்தில் பக்தியோடு ஜெபம் செய்வதை நாம் இன்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் காணலாம். இது தஞ்சாவூரின் சமய நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.

தஞ்சையில் இயேசு சபையில் 1843 ஆம் ஆண்டில் அருள்திரு கிளாடுபேடின் அடிகளார் தஞ்சாவூர் பங்குத் தந்தையானார். அது மதக் கலவரங்கள் நடைபெற்ற காலம். அதனால் தஞ்சாவூரில் பணியாற்ற இயலாமல் வெளியேறி, வல்லம், கூனம்பட்டி, பரக்குடி ஆகிய இடங்களில் அவர் மறைத்தொண்டு புரிந்தார்.

திரு இருதய ஆண்டவர்
திரு இருதய ஆண்டவர்

பட்டுக்கோட்டை, பாதிரிக்குடி ஆகிய இடங்களுக்கும் அருள்திரு கிளாடுபேடின் அடிகளார் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால், அப்போதைய துணைப் பங்குத் தந்தை அருள்திரு திரிங்கால் அடிகளார் தஞ்சாவூரில் பங்குப் பணிகளைச் செய்து வந்தார். அவர் தந்துள்ள தகவலின்படி 1849 ஆம் ஆண்டில் தஞ்சாவூரைச் சுற்றி 2,500 கத்தோலிக்கர் இயேசு சபையினரின் பார்வையிலும், 1,000 பேர் கோவா குருக்களின் கண்காணிப்பிலும் இருந்தனர். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் முதல்முதலில் மொழிபெயர்த்தவர் திரிங்கால் அடிகளாரே என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசுவின் திரு இருதயக் கோயில்

கி.பி. 1867 ஆம் ஆண்டில் அருள்திரு யோசேபு லேரோ அடிகளாரின் முயற்சியில் மதுரை மறைபரப்பு மண்டலத்தைச் சார்ந்த செல்வந்தர் ஒருவரின் பெருங்கொடை மூலம் தஞ்சாவூரில் இயேசுவின் திரு இருதயக் கோயில் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, இக்கோயில் 1867, செப்டம்பர் 5 ஆம் தேதி புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது. திரு இருதய ஆண்டவர் ஆலயம் 1867 ஆம் ஆண்டில் கட்டப்படுவதற்கு முன்பே இவ்வாலய வளாகத்தில் இருந்த சிற்றாலயம் இன்றும் இந்த வளாகத்தின் கிழக்குப்புறம் நாஞ்சிக்கோட்டை சாலையோரத்தில் இருப்பதைப் பார்க்கலாம். தற்போது இங்கு கோல்பிங் தையல் பயிற்சியும், தட்டச்சுப் பயிற்சியும் நடைபெற்று வருகிறது.

ஆலயத்தின் முகப்பு
ஆலயத்தின் முகப்பு

இயேசு சபைக் குருக்கள் 1893 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் பகுதியைக் கோவா குருக்களிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றனர். தஞ்சாவூர் மக்கள் செல்லமாய் சவேரியார் அடிகளார் என்றழைத்து வந்த அருள்திரு சேவியர் கொய்லோ அடிகளார் 1893 ஆம் ஆண்டு முதல் 1915 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் பங்குத் தந்தையாகத் திகழ்ந்தார்.

கடந்த 1906 ஆம் ஆண்டில் தஞ்சாவூருக்கு வந்த சலேசிய சபைக் குருக்கள் தூய சவேரியார் தொழிற்பள்ளியைத் தொடங்கி நிர்வகித்து வந்தனர். இந்தியாவிலேயே முதல் முறையாக சலேசிய சபைக் குருக்கள் பணியாற்றத் தொடங்கியது தஞ்சாவூரில்தான் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

1915 ஆம் ஆண்டு முதல் 1928 வரை அருள்திரு யூஜின் மெடர்லே என்ற சலேசிய அடிகளார் பலரும் போற்றும் பங்குத் தந்தையாக இருந்தார். அவர் காலத்தில்தான் அதுவரை நடுநிலைப்பள்ளியாக இருந்த தூய அந்தோனியார் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது.

அந்தோனியார்
அந்தோனியார்

தஞ்சையில் நடைபெற்ற பொம்மை பாஸ்கா புதுமுறையில் நடத்திக் காண்பிக்கப்பட்டது. பின்னாளில் அருள்திரு யூஜின் மெடர்லே அடிகளார் சென்னைப் பேராயராகவும், அவருடைய உதவி குரு அருள்திரு மரிய செல்வம் அடிகளார் பின்னாளில் வேலூர் முதல் ஆயராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1953 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி தஞ்சை ஈன்ற தவப்புதல்வர் இரா. ஆரோக்கியசாமி சுந்தரம் ஆண்டகை தஞ்சை ஆயராகப் பொறுப்பேற்றார். அப்போது முதல் திரு இருதய ஆண்டவர் திருக்கோயில் மறைமாவட்டப் பெருங்கோயிலானது. இதைத்தொடர்ந்து, 1969 ஜூலை 6,7,8 ஆகிய நாட்களில் இக்கோயிலின் நூற்றாண்டு விழாவும், அதே ஆண்டில் இரா. சுந்தரம் ஆண்டகையால் விரிவுபடுத்தப்பட்ட பெருங்கோயிலின் திறப்பு விழாவும் நடைபெற்றது.

பின்னர், பேராலயத்தின் அடிக்கல் நாட்டப்பட்ட 125 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, இதன் நினைவாக ஆலயத்தின் முன்புறம் பிரம்மாண்ட மேடையும், மேற்கூரையும் புதிதாகக் கட்டப்பட்டு, 1994 ஆம் ஆண்டு ஆக. 5 ஆம் தேதி பேராயர் பாக்கியம் ஆரோக்கியசாமி ஆண்டகையால் புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

இப்பேராலயத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா 2018 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. இந்த ஆலயத்தில் இதுவரை 35 பேர் பங்குத் தந்தையாக இருந்துள்ளனர்.

வழிபாடுகள்

இப்பேராலயத்தில் நாள்தோறும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் பிற சமயத்தைச் சார்ந்தவர்கள் நாள் முழுவதும் பக்தியுடன் பெருமளவில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

வாரந்தோறும் திங்கள்கிழமை மாலையில் நடைபெறும் சகாய மாதா நவநாள் வழிபாட்டுக்கு, தொடர்ந்து 9 வாரங்கள் வந்து சென்றால் கேட்ட வரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையினால் பெண்கள்,  நோயாளிகள்,  வேலையில்லாதோர், திருமணமாகாதவர்கள் என பலர் வந்து அன்னையின் அருள் வேண்டி வழிபட்டுச் செல்கின்றனர்.

இதேபோல, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுகிழமையில் நாள் முழுவதும் நடைபெறும் குணமளிக்கும் சிறப்பு வழிபாட்டுக் கூட்டத்துக்கும் தஞ்சாவூரின் பல்வேறு பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

மத நல்லிணக்க வழிபாடு

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஈஸ்டர் போன்ற முக்கிய விழாக்காலங்களில் ஆயர் தலைமையில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளியூர்களிலிருந்து இறை மக்கள் பலர் வருகை தருவதால், அக்காலங்களில் ஆலய வளாகமே நிரம்பி வழியும்.

தமிழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போதும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாள்களிலும் இப்பேராலயத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருவது எங்கும் காண முடியாத தனிச்சிறப்பு.

மேலும் அரசியல் தலைவர்களின் பிறந்த நாளின்போது தொண்டர்கள் இவ்வாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து வருவதை இன்றும் காண முடிகிறது. தஞ்சாவூரில் 150 ஆண்டுகள் கடந்துவிட்ட இப்பேராலயம் மத நல்லிணத்துக்குச் சான்றாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

படங்கள்: எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com