பார்போற்றும் பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா!

திருச்சி பாலக்கரை பகுதியிலுள்ள உலக மீட்பர் பசிலிக்கா என்றழைக்கப்படும் சகாயமாதா திருத்தலப் பேராலயம் பார்போற்றும் வகையில் அமைந்துள்ளது.
திருச்சி சகாயமாதா திருத்தலப் பேராலயம்
திருச்சி சகாயமாதா திருத்தலப் பேராலயம்

பார்போற்றும் வகையில் அமைந்துள்ளது திருச்சி பாலக்கரை பகுதியிலுள்ள உலக மீட்பர் பசிலிக்கா என்றழைக்கப்படும் சகாயமாதா திருத்தலப் பேராலயம்.

பசிலிக்கா என்றால் பேராலாயம் எனப் பொருள்படும். திருச்சியில் அத்தகைய சிறப்பைப் பெற்றிருப்பது பாலக்கரை பசிலிக்கா என்றால் அது மிகையல்ல. விரைவில் சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலிலும் இடம்பெறவிருக்கிறது.

திருத்தல வரலாறு:  கி.பி. 1616 ஆம் ஆண்டில் மதுரை மிஷன் திருச்சிக்கு வந்தது. இதனால் கத்தோலிக்க விசுவாசமும் உள்நுழைய வசதி வாய்ப்பு ஏற்பட்டது.  மதுரை மன்னரின் வரிசையில் வந்த மதுரை நாயக்கரின் தார்மிக ஆதரவு காலப்போக்கில் இயேசு சபை வேத போதகர்களுக்குக் கிடைத்தது. 

மதுரையிலிருந்து திருச்சிக்குத் தலைநகரையும் ஆட்சிப் பீடத்தையும் மாற்றினார் நாயக்க மன்னர். மன்னரின் சமஸ்தான ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பலர் ஏற்கெனவே ராபர்ட் தே நோபிலி என்ற தத்துவப் போதகரால் மத மாற்றம் அடைந்திருந்தனர். இவர்கள் மூலம் திருச்சியில் கிறிஸ்துவம் பரவ வழி ஏற்பட்டது. மேலும், தூய பிரான்சிஸ் சவேரியார் வழியாகவும் கிறிஸ்துவம் பரவியிருந்தது.

மதுரை மறை மண்டலத்தில் திருச்சி துணை மையமாக இருந்து வந்தது. பாலக்கரை, தர்மநாதபுரம் ( இருதயபுரம்), வரகனேரி ஆகிய மூன்று பகுதிகளில் கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை  அதிகமாகியிருந்தது. 

உலக மீட்பர் கோயில் கட்டுவதற்கு முன்பே  இங்கு சுமார் 7,500 பேர் கிறிஸ்துவர்களாக இருந்தனர். இவர்கள் திருப்பலி, திருவருட்சாதனங்களுக்காக இயேசு சபை குருக்களால் கட்டப்பட்டிருந்த மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு செல்லும் வழியும் புல், புதர்கள் செறிந்திருந்தும் போக்குவரத்து வசதியின்றியும் இருந்தது.

தற்போது பாலக்கரையில் பழைய கோயில் என்றழைக்கப்படும் தூய வியாகுல அன்னை கோயில் அருகிலிருந்தும் அது பதுர்வாத குருக்களின் (போர்த்துக்கீசிய குருக்கள்) வசம் இருந்ததால் அங்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. இவற்றின் மத்தியிலும் மக்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்தனர். எனவே, பாலக்கரை பகுதியில் புதியதொரு கோயில் கட்ட வேண்டியது இன்றியமையாததாயிற்று.

அந்தக் காலத்தில் திருச்சி நகரம் ஆங்கிலேயர் ஆட்சியில் திவான் கஞ்சமலை முதலியாரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. அருள்தந்தை கோரீஸ், திவான் கஞ்சமலை முதலியாருக்கு செய்த நன்மைக்கு நன்றிக் கடனாக, திவான் கொடுத்த இடம்தான் உலக மீட்பர் பேராலயமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்.

கி.பி.1880 ஆம் ஆண்டில் அடிக்கல்:   உலக மீட்பர் ஆலயத்துக்கு கி.பி. 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி மோன்சிங்ஞோர்  கனோசுவால் அடிக்கல்  நாட்டப்பட்டது.  1881 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஓவியம் போன்ற கலைகள் நிறைந்து கட்டி முடிக்கப்பட்டது. சுனோசு முன்னிலையில் புதுச்சேரி பேராயர் லுவெனாவால் அர்ச்சிக்கப்பட்டது. 

இந்த பிரம்மாண்டமான கோயிலை அந்த காலத்திலேயே 16 மாதங்களில் கட்டி முடித்திருக்கின்றனர். 1957 ஆம் ஆண்டில் அருள்தந்தை ஏ. தாமஸ் பங்குத்தந்தையாக இருந்தபோது, ரட்சகர் சபை குரு அருள்திரு பிரான்சிஸைக் கொண்டு இடைவிடாத   சகாயத்  தாயின்  பக்தி  முயற்சி  தொடங்கப்பட்டது. சகாய அன்னையின் வழியாக ஆயிரக்கணக்கான புதுமைகள் நடைபெறத் தொடங்கியதால்,  பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் வரத் தொடங்கினர். வாரந்தோறும் இதற்காக சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.

பேராலயமாகத் தரம் உயர்வு: 2006 ஆம் ஆண்டில் கோயிலின் பங்குத்தந்தையாக இருந்த ஏ. கபிரியேல் முயற்சியால்  திருச்சி  ஆயர்  அந்தோனி டிவோட்டோ பரிந்துரையால், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட், 2006, அக்டோபர் 12 ஆம் தேதி இக்கோயிலை பசிலிக்கா (பேராலயம்)  நிலைக்கு உயர்த்தினார். 

இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பேராலயத்துக்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர். இந்த பேராலய நிர்வாகத்தால், பேராலய வளாகத்திலும் வரகனேரி பகுதியிலும் கல்வி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பேராலய திருவழிபாட்டு நேரங்கள்:  தினமும் காலை 6.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும் நடைபெறுகிறது. இதைத் தவிர புதன்கிழமைகளில் காலை 5, காலை 6.15, முற்பகல் 11, மாலை 4.15, மாலை 5.15, மாலை 6.15 மணிக்கு திருப்பலி, நவநாள் பக்தி முயற்சி, நற்கருணை ஆசீர் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மேலும், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் வெற்றி வேந்தனுக்கு வெள்ளி வேள்வி நடைபெறுகிறது.  நவநாள் ஜெபம், பிரார்த்தனை, திருப்பலி, சிலுவை ஆசீர்வாதம் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6, காலை 7.15 (மலையாளம்) திருப்பலி நடைபெறுகிறது. முற்பகல் 11.15 மணிக்கு திருப்பலியும், நவநாள் பக்தி முயற்சியும் ஆங்கிலத்தில் நடைபெறும்.  மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் பேராலயத்தில் நடைபெறும்.

மேலும், மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் காலை 8.15 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் திருமுழுக்கு வழங்கப்படும். இப்பேராலயத்தின் கீழ் உள்ள வரகனேரி தூய சவேரியார் ஆலயத்தில் தினமும் காலை 5.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கும் திருப்பலி நடைபெறும்.

கரோனா கட்டுப்பாட்டால் இவற்றில் சில மாற்றங்கள் உள்ளன. பேருந்து வசதிகள் உள்ளன. மாநகரின் மையப் பகுதியில் உள்ள இப்பேராலயத்துக்குச் செல்ல திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் பாலக்கரை வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து, பிரபாத் திரையரங்கு  பேருந்து  நிறுத்தப் பகுதியில் இறங்கி நடந்து செல்லலாம். மேலும் இப்பேராலயத்துக்கு வந்து செல்ல ஆட்டோ வசதி  அதிகளவில் உள்ளது.

சகாய அன்னையின் புதுமைகளால் நிரம்பி வழியும் இந்தத் தேவாலயத்தைத் தேடி திருச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அனைத்து மதத்தினரும் வந்து  வழிபடுவது சிறப்பு.

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com