கேட்ட வரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள ஆலயமாகும். குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
கோட்டாறு புனித சவேரியார் பேராலயம்
கோட்டாறு புனித சவேரியார் பேராலயம்

பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது கோட்டாறு புனித சவேரியார் பேராலயம். குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் இருக்கிறது இந்த ஆலயம்.

இந்த ஆலயத்துக்குத் தினமும் அனைத்து மதத்தினரும் நூற்றுக்கணக்கில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். சாதி, சமய, இனம், மொழி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வந்து வழிபட்டு செல்கின்ற ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது புனித சவேரியார் பேராலயம்.

சவேரியார் பேராலயம் வருவதற்கு முன்பே இங்கு கிறிஸ்துவர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் கி.பி. முதல் நூற்றாண்டில் குமரி மாவட்ட பகுதிகளில் மறைப் பணியாற்றிய தூய தோமையாரால் கிறிஸ்துவர்கள் ஆனவர்கள். இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் முறையான மறைக்கல்வி கற்கவில்லை. அவர்களுக்காக ஜெபம் செய்ய சவேரியார் அடிக்கடி கோட்டாறு வந்து சென்றார். அப்போது திருவிதாங்கூர் அரசு மீது மதுரை மன்னன் படையெடுத்து வந்தான். அதனை சவேரியார் தடுத்து நிறுத்தினார்.  இதைத் தொடர்ந்து தற்போதுள்ள சவேரியார் ஆலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்டுவதற்கு நிலத்தையும், பொருள்களையும் சவேரியாருக்கு திருவிதாங்கூர் மன்னர் பரிசாகக் கொடுத்தார். அந்த இடத்தில் சவேரியார் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார். அங்கு அவரே திருப்பலியும் நிறைவேற்றினார்.

கி.பி. 1542 முதல் 1552 வரை தூய சவேரியார் கோட்டாறில் மறை பணியாற்றியுள்ளார். பல இடங்களுக்கும் சென்ற சவேரியார் 1552 ஆம் ஆண்டு சீனா அருகேயுள்ள சான்சியான் தீவில் இறந்தார். இதைத் தொடர்ந்து கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வந்த மக்கள் சவேரியாருக்கு கோட்டாறில் ஆலயம் எழுப்ப விரும்பினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று திருவிதாங்கூர் மகாராஜா கி.பி. 1602-ல் இத்தாலி நாட்டு அருள்பணியாளர் அந்திரேயாஸ் புச்சாரியோவிடம் கோட்டாறில் ஆலயம் கட்டத் தேவையான இடத்தைத் தானமாக வழங்கினார். கி.பி.1603-ல் அருள்பணியாளர் அந்திரேயாஸ் புச்சாரியோ தூய சவேரியார் வழிபாடு நடத்தி ஜெபித்த இடத்தில் களிமண்ணாலும் மரத்தாலும் ஆன மூவொரு இறைவன் ஆலயம் ஒன்றைக் கட்டினார். தூய சவேரியார் மீது கொண்ட பற்றினாலும் பக்தியினாலும் இந்த ஆலயத்தை மக்கள் சவேரியார் கோயில் என்று அழைக்கத் தொடங்கினர். கி.பி. 1605-ல் மூவொரு இறைவன் ஆலயம் சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கி.பி. 1640-ல்  கற்களால் ஆன புதிய ஆலயம் கட்டப்பட்டது. 1643-ல் தூய சவேரியார் மற்றும் தூய இஞ்ஞாசியார் திருப்பண்டங்கள் கோட்டாறு ஆலயத்தில் வைக்கப்பட்டன. ஸ்பெயின் நாட்டில் பிறந்த சவேரியாருக்குக் கோட்டாறில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமே உலகில் சவேரியாருக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. சவேரியார் என்பது அவரது குடும்ப பெயர், பிரான்சிஸ்கோ என்பதே அவரது ஞானஸ்நான பெயர். இந்த இரண்டையும் இணைத்து பிரான்சிஸ் சேவியர் என இவர் அழைக்கப்படுகிறார். இவரது மேலான மன்றாட்டால் பல புதுமைகள் நிகழ்ந்தன. இதனால் சவேரியார் 1622  ஆம் ஆண்டு புனிதராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து 30.5.1930-ல் கோட்டாறு தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது கோட்டாறு சவேரியார் ஆலயம் மறைமாவட்ட பேராலாயமாக உயர்த்தப்பட்டது.

தூய சவேரியார், இந்தியா வந்த 400  ஆவது ஆண்டு நினைவாக 1956 ஆம் ஆண்டு கோபுரம் கட்டப்பட்டு அதில் தூய சவேரியாரின் சொரூபமும் நிறுவப்பட்டது. ஆலயம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தூய ஆரோபண அன்னை ஆலயம் பேராலயத்தோடு இணைக்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு தூய சவேரியார் இந்தியா வந்ததன் 450 ஆவது ஆண்டு நினைவாக ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 3.12.2012 அன்று கர்தினால் ஆஞ்சலோ அமர்த்தோவால் புதிய ஆலய விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு லூர்து அன்னை கெபியின் முன் ஜெபமாலை, சிறப்பு நற்கருணை ஆசீர் வழிபாடு நடைபெறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தேர் பவனியில் பக்தர்கள் புனித சவேரியார் மற்றும் மாதா தேர்களின் பின்னால் தரையில் உருண்டு கும்பிடு நமஸ்காரமும், உருண்டு வேண்டுவதும் சிறப்பம்சமாகும்.

கோட்டாறில் சவேரியாருக்கு ஆலயம் கட்டும் போது, அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள்  ஊதியம் எதுவும் வாங்காமல் வேலை செய்தனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின்போது இவ்வூர் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

தூய சவேரியார் ஆலயத்தில் தினமும் காலை 6.15  மணிக்குத் திருப்பலியும், நாள் முழுவதும் நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை  6.15  மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 6.15, 8 மணி, மாலை 5  மணிக்கும் திருப்பலி நடைபெறும். மாதத்தின் 2 ஆவது சனிக்கிழமை மாதா பவனி, நற்கருணை ஆசீர் நடைபெறும். நவம்பர் மாதம்  24 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 3  ஆம் தேதி வரை பேராலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவுக்குத் தேரோட்ட நாளன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சவேரியாரை தரிசனம் செய்கிறார்கள்.

கோட்டாறு பேராலயத்தில் நிலைகொண்டு தன்னைத் தேடி வரும் எண்ணற்ற மக்களுக்குக் கேட்ட வரம் அருளிக் கொண்டிருக்கிறார் புனித சவேரியார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com