'கர்த்தரின் பந்தியில் வா..' பாடலை இயற்றிய மரியான் உபதேசியார்

மரியான் உபதேசியார் எளிய வாழ்வை மேற்கொண்டவர். பார்ப்பவர்கள் அவரை ஓர் 'ஏழைப் பரதேசி' என எண்ணுமளவிற்கு, தாழ்மைக் கோலம் கொண்டவர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மரியான் உபதேசியார் எளிய வாழ்வை மேற்கொண்டவர். பார்ப்பவர்கள் அவரை ஓர் 'ஏழைப் பரதேசி' என எண்ணுமளவிற்கு, தாழ்மைக் கோலம் கொண்டவர். ஆண்டவருக்காக உற்சாகமாகப் பல இடங்களில் பணியாற்றினார். பல இனிய பாடல்களை, அவர் தன் உள்ளத்தில் உணர்ச்சி ததும்ப எழுதினார்.

கடந்த நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் (தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கியது) வாழ்ந்த மரியான் உபதேசியார், கொடிய தொழுநோயால் பீடிக்கப்பட்டார். எனினும், ஆண்டவர் பேரில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை, சிறிதும் குறைந்து போகவில்லை. தொடர்ந்து நற்செய்திப் பணிகளை, உற்சாகமாய் செய்து வந்தார்.

ஒருமுறை, அவர் ஏழாயிரம் பண்ணையில் சபை ஊழியராக பணியாற்றியபோது, ஞானப் பிரகாசம் என்ற மூப்பருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பல நாள்கள் அந்த மூப்பர் சபைக்கு வரவில்லை. அந்நாள்களில் திருவிருந்து ஆராதனை 3 மாதங்களுக்கு ஒருமுறை போதகர் வரும் போதுதான் நடைபெறும். அதனால் திருவிருந்து ஆராதனையில் கலந்துகொள்வதை சபை மக்கள் மிகுந்த பக்திக்குரிய விஷயமாகவும் முக்கியமானதாகவும் கருதினார்கள். முதல் நாள் போதகர் வந்ததும் சபை மக்களுக்கு மறுநாள் திருவிருந்து ஆராதனை என்பதை ஆலயப் பணியாளர் வீடுவீடாகச் சென்று அறிவித்தார். அதில் ஞானப் பிரகாசம் வர இயலாது என மறுத்துவிட்டார்.

திருவிருந்து ஆராதனையை ஞானப் பிரகாசம் புறக்கணிக்கமாட்டார், எப்படியும் மறுநாள் திருவிருந்து ஆராதனையில் கலந்துகொள்ள வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார் மரியான் உபதேசியார். முதலாம் மணி அடித்த உடனேயே சபை மக்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். போதகரும் ஆலயத்திற்கு வந்துவிட்டார். இரண்டாம் மணி அடிக்கும் முன்னர் சபைக்கு வந்தவர்களுடன் சேர்ந்து போதகர் பாடல் பாடத் தொடங்கி விட்டார். ஆனால், ஞானப் பிரகாசம் வரவில்லை. திருவிருந்து ஆராதனையே ஐக்கியத்திற்காகத்தான், ஞானப் பிரகாசத்துடன் ஐக்கியமின்றி திருவிருந்து ஆராதனையில் கலந்துகொள்ள விரும்பாமல் தாம் வீட்டில் சென்று அழைத்தால் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் போதகரிடம் அனுமதி பெற்று ஞானப் பிரகாசத்தின் வீட்டிற்குச் சென்று விட்டார் மரியான் உபதேசியார்.

வீட்டிற்குச் சென்ற நிலையில் வீட்டின் கதவைத் திறக்காமலேயே உள்ளேயே இருந்து வெளியே வர மறுத்து விட்டார் ஞானப் பிரகாசம். அந்த வேளையில் மரியான் உபதேசியாருக்குத் தோன்றிய வரிகள்தான்

கர்த்தரின் பந்தியில் வா - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின் பந்தியில் வா

1. ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? - உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு.
பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன பந்திதனில் சேரு.
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே - கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே.
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா - கர்த்தரின்

--

இதனைத் தான் கையில் கொண்டு சென்ற வயலின் கருவியின் இசையை துணையாகக் கொண்டு முழுமையாக பாடலாகப் பாடினார் அவர்.

பாடலின் கருத்து, மரியான் உபதேசியாரின் குரல் வளம் ஞானப்பிரகாசம் என்ற அந்த மூப்பரின் மனதை உருக வைத்தது. விளைவு உடனே மனம் மாறி, மன்னிப்புக் கேட்டு, அந்நாளின் நற்கருணை ஆராதனையில் கலந்து கொண்டார்.

அனைத்து சபை நற்கருணை எனப்படும் திருவிருந்து ஆராதனையில் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது.

“சுந்தரப் பரம தேவ மைந்தன்” போன்ற பல துதிப் பாடல்களையும், மரியான் உபதேசியார் இயற்றியிருக்கிறார். “கிறிஸ்துவுக்குள் அனைவரும் சகோதரர்; எனவே, திருச்சபையில் சாதி வேற்றுமை பாராட்டுவது தவறு,” என்று ஆணித்தரமாய் எடுத்துக் கூறினார். அவர் வாழ்ந்த காலத்தில், பரவலாக நிலவிய இச்சீர்கெட்ட பழக்கத்தைக் கடிந்து, சமுதாயச் சீர்த்திருத்தவாதியாக விளங்கினார்.

மரியான் உபதேசியார், ஸ்ரீவைகுண்டம், கிறிஸ்தியான் கோட்டை, ஏழாயிரம் பண்ணை, ஆகிய பல ஊர்களில் ஊழியம் செய்துமுடித்து, பின்னர் தேவனின் பரம அழைப்பைப் பெற்று, ஏழாயிரம் பண்ணையில் அடக்கம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com