புதுமைகளின் திருத்தலம் வேளாங்கண்ணி

அன்னை மரியா பல அற்புதங்களை இத்திருத்தலத்தில் நிகழ்த்தியுள்ளார். அதில், புனித ஆரோக்கிய அன்னை நிகழ்த்திய முதன்மை புதுமையாக அறியப்படுவது பால் விற்கும் சிறுவனக்குக் காட்சியளித்து ரட்சித்தது.
பால்கார சிறுவனுக்கு புனித ஆரோக்கிய அன்னை காட்சியளித்த இடத்தில் அமைந்துள்ள மாதா குளம் கோயில்.
பால்கார சிறுவனுக்கு புனித ஆரோக்கிய அன்னை காட்சியளித்த இடத்தில் அமைந்துள்ள மாதா குளம் கோயில்.

இயேசு பிரான் சிலுவையேற்று, தன் பிறப்பின் நோக்கத்தை அடையும் நேரத்தில், தனது மீட்பின் திட்டத்துக்கு உதவிய தனது தாயை, யோவான் வழியே 'இதோ உம் தாய்' எனச் சுட்டிக்காட்டி, மனித இனத்துக்கு விலை மதிக்க முடியாத தனது இரண்டாம் கொடையை வழங்கினார். அதுமுதல், மனித இனத்தின் தாயாக அன்னை மரியா நிகழ்த்தும் புதுமைகள் ஏராளம். 

ஏழை, எளியவர்கள், கள்ளம் கபடமில்லாத குழந்தைகள் மற்றும் உலகியல் மதிப்பு மறுக்கப்பட்டவர்களுக்காக புனித மரியன்னை லூர்து நகரிலும், பாத்திமா நகரிலும் நிகழ்த்தியதைப் போன்ற ஆன்மிக அற்புதங்களை, புதுமைகளை நிகழ்த்திய திருத்தலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி. 

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வேளாங்கண்ணியின் கடற்கரையோர பகுதியில் மண் சுவர்களைக் கொண்டதாக உருவான ஒரு சிறு ஆலயம், தற்போது வானுயர்ந்த கோபுரங்களுடன் பரந்து, விரிந்து, பசலிக்கா (பேராலயம்) அந்தஸ்தை பெற்றுத் திகழ்கிறது எனில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் கருணையே காரணமாகும். 

பால்கார சிறுவனுக்குக் காட்சியளித்த புதுமையின் ஐதீகமாக வேளாங்கண்ணி மாதாகுளம் கோயிலில் உள்ள அன்னையின் திருச்சொரூபம்.
பால்கார சிறுவனுக்குக் காட்சியளித்த புதுமையின் ஐதீகமாக வேளாங்கண்ணி மாதாகுளம் கோயிலில் உள்ள அன்னையின் திருச்சொரூபம்.

அன்னை மரியா பல அற்புதங்களை இத்திருத்தலத்தில் நிகழ்த்தியுள்ளார். அதில், புனித ஆரோக்கிய அன்னை நிகழ்த்திய முதன்மை புதுமையாக அறியப்படுவது பால் விற்கும் சிறுவனக்குக் காட்சியளித்து ரட்சித்தது. அந்த அருள் வரலாறு...  

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவன் வேளாங்கண்ணியிலிருந்து, நாகையில் உள்ள தனது பண்ணையார் இல்லத்துக்குப் பால் கொண்டுச் செல்லும் பணியை தினமும் செய்து வந்தான்.  வெயில் காலங்களில், வேளாங்கண்ணி, அண்ணாப்பிள்ளை வீதியில் இருந்த ஒரு குளக்கரையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறிச் செல்வது அச்சிறுவனின் வழக்கம்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்

அதேபோல ஒரு நாள், அந்தச் சிறுவன் அண்ணாப்பிள்ளை வீதி குளக்கரையில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தான். அப்போது, வானத்து நிலவு வையகத்துக்கு வந்ததைப் போன்ற எழில் வடிவுடன் அன்னை ஒருவர், சூரியனைப் போன்ற சுடர் வடிவுடைய சிறுவனுடன் தன் எதிரே தோன்றியதை அந்தப் பால்கார சிறுவன் கண்டான். அந்த எழில் காட்சியால் தன்னை மறந்திருந்த அச்சிறுவன், தன்னையறியா நிலையில் அன்னையைப் பணிந்து வணங்கினான்.

அப்போது, அந்த விண்ணகத்துப் பேரரசி, என் குழந்தை பருகிட கொஞ்சம் பால் தருவாயா? என பால்கார சிறுவனிடம் வினவியுள்ளார். பாலின் அளவு குறைந்தால் பண்ணையாரின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதை அந்தச் சிறுவன் உணர்ந்திருந்தான். இருப்பினும், அந்த மாதரசியின் பேச்சுக்கு மறுமொழி தெரிவிக்காமல் ஒரு குவளையில் பால் எடுத்து அன்னையிடம் அளித்தான். 

வேளாங்கண்ணி மாதாக்குளம் கோயில்
வேளாங்கண்ணி மாதாக்குளம் கோயில்

அந்தப் பாலை அன்னை தன் குழந்தைக்குப் புகட்ட, பால் அருந்தி சிரித்த அந்த பாலகனின் எழில் வடிவைக் கண்டு, எதையும் எதிர்கொள்ளும் மனவலிமை வரப் பெற்றவனான் அந்தப் பால்கார சிறுவன். தன் மீதான பழியை ஏற்கும் உறுதிக் கொண்டவனாக, நாகையில் உள்ள பண்ணையார் இல்லத்தை வந்தடைந்தான். 

பண்ணையாரிடம் பால் குடத்தை ஒப்படைத்த அவன், குடத்தின் மூடியைத் திறக்கும் முன்பாகவே, பாலின் அளவு குறைந்துள்ளது எனவும், அதற்காக தன்னை மன்னிக்க வேண்டுமெனவும் தெரிவித்தான். பால் எந்தளவு குறைந்திருக்கிறது என்பதை அறிய பண்ணையார் பால் குடத்தை உடனடியாகத் திறந்தார். அப்போது, குறைந்திருக்க வேண்டிய பாலின் அளவு மிகுந்திருந்தது. திறக்கப்பட்ட பால் குடத்திலிருந்து, பொங்கி வழிந்தோடியது.

குறைந்திருக்க வேண்டிய பால் மிகுந்திருப்பதும், குடத்திலிருந்து பால் பொங்கி வழிந்தோடியதையும் கண்டு ஆச்சர்யமடைந்த பண்ணையாரும், அந்த ஆச்சர்யத்தை காண குழுமிய மக்களும், அந்த அதிசயத்துக்கான காரணம் குறித்து சிறுவனிடம் கேட்டனர். அப்போது, தான்கண்ட காட்சிகளை அச்சிறுவன் விவரித்தான். வியப்பு நீங்காத பண்ணையார், உலக ரட்சகனுடன், விண்ணகப் பேரரசி காட்சியளித்த இடத்துக்கு (அண்ணாப்பிள்ளை குளக்கரைக்கு) தன்னை அழைத்துச் செல்லக் கேட்டார். அதன்படி, பால்கார சிறுவனும், பண்ணையாரும் வேளாங்கண்ணி குளக்கரைக்கு வந்தனர். 

குளக்கரையை அடைந்த அந்தச் சிறுவன், தமக்கு அருளிய அருள் காட்சிகள் அனைத்தையும் உலகுக்கு உரைக்க, அன்னை மறுமுறையும் தமக்குக் காட்சியளிக்க வேண்டும் என்று பணிந்து மன்றாடினான். கருணையே வடிவான புனித ஆரோக்கிய அன்னை, கள்ளம் கபடம் இல்லாத அந்தச் சிறுவனின் வேண்டுதலை உடனே நிறைவேற்றினார். மாசற்ற திங்களாய் தன் பாலகனுடன் மீண்டும் காட்சியளித்தார். அந்தக் காட்சியைக் கண்ட பால்கார சிறுவனும், பண்ணையாரும் தரையில் வீழ்ந்து பணிந்து வணங்கினர்.

இந்த ஆன்மிக அதிசய நிகழ்வு திக்கெட்டும் பரவியது. புனித ஆரோக்கிய அன்னையும், உலகை காக்கத் தோன்றிய தேவ மைந்தனும் காட்சியளித்த புதுமை நிகழ்ந்த இடம் அனைவராலும் போற்றி வணங்கப்பட்டது. அன்று முதல், அண்ணாப்பிள்ளை குளம், மாதா குளமாக மக்களால் வழங்கப்பட்டது. 

பால்கார சிறுவனுக்கு அன்னை காட்சியளித்து, வேளாங்கண்ணியின் ஆன்மிக புதுமைக்குச் சான்று பகர்ந்த அந்த இடம், பேராலயத்தின் மேற்குப் புறத்தில் சிலுவைப் பாதையின் நிறைவில், பக்தர்களின் பிணி தீர்க்கும் ஆலயமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com