256 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம்!
By ஆர். முருகன் | Published On : 25th December 2021 01:10 PM | Last Updated : 25th December 2021 03:27 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திருச்சி மறை மண்டலத்துக்கும் முன்னோடியாக விளங்குகிறது 256 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்துநாதர் ஆலயம்.
திருச்சியின் அடையாளமாக மலைக்கோட்டை விளங்குவதைப்போன்று, கோட்டை பகுதியிலேயே இந்த ஆலயம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களும், கல்லணைகளும் இன்றளவும் திருச்சியின் அடையாளமாக இருந்து வருகின்றன. இதேபோல, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட புனிதத் தலங்களில் கிறிஸ்து நாதர் ஆலயமும் ஒன்று.
ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டியன் பிரெடெரிக் சுவார்ட்சு, தமிழ் மொழியைக் கற்றவர். இவர், அருட்பணி செய்வதற்காக தமிழகம் வந்தவர். தமிழகத்தில் திருச்சியை மையமாகக் கொண்டு 1762 ஆம் ஆண்டு முதல் 1776 ஆண்டு வரை ஊழியம் செய்தார். அப்போது, திருச்சியிலேயே 8 ஜெர்மானியரும், 13 லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்த தமிழர்களும் இவரது, திருப்பணியை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வந்த சுவார்ட்சு, திருச்சியிலேயே (தெப்பகுளம் பகுதியில்) ஜெப வீடு கட்டி தங்கினார். அங்கேயே சிறு பள்ளியையும் அமைத்தார். பின்னர், இந்த பகுதியில் ஆலயம் கட்டுவதற்கான தேவையை அறிந்து கர்நாடக நவாப் வழங்கிய இடத்தில், சென்னையில் அப்போதைய ஆங்கிலேயே ஆட்சியாளர்களின் அனுமதி பெற்று 2 ஆயிரம் வராகன் நிதி திரட்டினார்.
1765 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி ஆலயம் கட்டுவதற்கான அஸ்திவாரமிட்டு கட்டடப் பணிகளைத் தொடங்கினார். உயர்ந்த மற்றும் வளைந்த மேற்கூரை கட்டுமானப் பணி 1766 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து அழகிய வேலைப்பாடுகளுடன் 1,500 பேர் அமரும் வகையில் ஆலயத்தைக் கட்டி முடித்து 1766 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி பரிசுத்த ஆவியின் பண்டிகையின்போது மங்களப் படைப்புச் செய்தார்.
இந்த ஆலயத்தின் தோற்றமானது, சென்னை கோட்டையில் உள்ள தூய ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தூய மரியன்னை ஆலயத்தை ஒத்திருப்பது சிறப்புமிக்கதாகும். ஆலயத்தின் மேற்கூரை அக்காலத் தேவைக்கு ஏற்ப வெடிகுண்டுகளால் தகர்க்க முடியாத அளவுக்கு அமைக்கப்பட்டது. இந்த ஆலயமானது 72-க்கு 46 அடி கொண்டது. கிழக்குப் பக்கத்தில் 15 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட அரை வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது. மேற்கு பக்கத்தில் 12-க்கு 8 அடி என்ற அளவில் இரு வெஸ்ட்ரி அறைகள் உள்ளன.
பீடத்தின் சுவற்றில் தங்க வண்ண எழுத்துக்களால் விசுவாசப் பிரமாணம், கர்த்தர் கற்பித்த ஜெபம், பத்துக் கட்டளைகள் ஆகியவை தமிழ், ஆங்கிலம், போர்த்துக்கீசிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தின் அருகே மிஷன் வீடு கட்டப்பட்டது. இந்த வீட்டில், இரவு நேரம் கழித்து வெளியூர் செல்ல இயலாதவர்கள் தங்கிச் செல்லும் சத்திரமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பகுதிக்கு சத்திரம் என பெயர் வந்ததற்கு இந்த ஆலயமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு தொடங்கப்பட்ட முதல் வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என பாகுபாடின்றி கலந்து கொண்டனர். இதுதான் மிகப் பழமை வாய்ந்த கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயமாக இன்றளவும் பிரமாண்டமாக வீற்றிருக்கிறது.
ஆலயம் தொடங்கப்பட்ட காலத்தில், ஞாயிறுதோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழ் வழிபாடும், காலை 10 மணி முதல் ஆங்கில வழிபாடும், மாலை 4 மணிக்கு போர்த்துக்கீசிய வழிபாடும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் உள்ளே 19 ஆம் நூற்றாண்டில் இறந்தவர்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டதும் வரலாற்று சிறப்புமிக்கது.
பழுதபட்டிருந்த ஆலயத்தின் மேற்கூரை 1978-79 ஆம் ஆண்டுகளில் கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டது. 1982-இல் இந்த ஆலயத்தின் தேவைக்காக சபா மண்டபம் கட்டப்பட்டது. 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆலயத்தின் தளம் மாற்றப்பட்டு நவீன விளக்குகள் பொருத்தப்பட்டன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயமானது 256 ஆண்டுகளைக் கடந்து 257 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது.
கோட்டை கிறிஸ்து நாதர் ஆலயக் கிளைகள்:
திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் இந்த ஆலயத்தின் முதல் கிளையானது தொடங்கப்பட்டது. இந்த கிளையும் சுவார்ட்சு திருக்கரங்களால் தொடங்கப்பட்டது. இதேபோல, இந்த ஆலயத்திலிருந்துதான் 1977-இல் குளித்தலை தனி சேகரமாக உருவானது. முசிறி, காட்டுப்புத்தூர் தொட்டியம் ஆகியவை முசிறி சேகரமாக உருவானது. எல்ஐசி காலனியில் உள்ள தூய அந்திரேயா ஆலயம் 1985-இல் தனி சேகரமாக உறுவானது. 1991-இல் துறையூர் தனி சேகரமானது, இதேபோல, திருவரங்கம், மண்ணச்சநல்லூர், முருங்கைப் பேட்டை, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு சேகரங்களும் இதன் அங்கமாயின. பழூரிலும் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. தஞ்சை கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயமும் இந்த ஆலயத்தின் அமைப்பிலேயே கட்டப்பட்டுள்ளது.