இஸ்லாமிய மீனவர் கடலில் கண்டெடுத்த வேளாங்கண்ணி மாதா: அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசயம்!
By ஜெ. முருகேசன் | Published On : 25th December 2021 11:29 AM | Last Updated : 25th December 2021 11:29 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், அக்காள்மடத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மீனவர் ஒருவர் மண்டபம் தோணித்துறை கடற்பகுதியில் சங்கு குளி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
பாக்நீரிணை பகுதியில் சங்கு குளி தொழில் செய்யும் நிலையில், ஒரு முறை சங்கு எடுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் சங்கு குளிக்க முடியாது. ஆனால் தொடர்ந்து ஒரே பகுதியில் மூன்று மாதங்கள் குறிப்பிட்ட இடத்தில் சங்கு கிடைத்தது.
இதேபோன்று கடந்த 24.08.1983 ஆம் ஆண்டு கடலில் சங்கு குளிக்கும் போது சங்கு கூட்டத்திற்குள் கருப்பு வடிவில் மூன்று அங்குல உயரத்தில் சுருவம் இருந்துள்ளது. அதனை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த கருப்பு வடிவிலான பொருளை காலையில் எடுத்து வீசிவிடுவோம் என நினைத்து தூங்கியபோது கனவில் தோன்றிய மாதா, 'இதை வெளியே வீசி விடாதே, அதற்கான நபர் வந்து வாங்கிக்கொள்வார்' என்று கூறியதுடன் எழுந்துவிட்டார். காலையில் அதேபோன்று ஒரு நபர் வந்து தானம் கேட்ட போது கடலில் எடுத்துக்கொண்டு வந்த அந்த சுருவத்தை கொடுத்துவிட்டார். கருப்பாக இருந்த சுருவத்தை சுத்தம் செய்யும்போது அது அன்னை வேளாங்கண்ணி மாதா என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் சிறிய கொட்டகையில் ஆலயம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஆனால், அன்னை வேளாங்கண்ணி மாதாவின் அருள் அந்த பகுதி மக்களைக் கடந்து பல்வேறு பகுதி மக்களைச் சென்றடைந்தது. இதனால் பெருமளவில் கூட்டம் வரத் தொடங்கியது.
கடலில் கண்டெத்து சுருவம் வளரத்தொடங்கி தற்போது 1 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. இதன்பின்னர் இந்த மாதா சிலையை சிறிய அளிவிலான கூண்டு செய்து அதற்குள் வைக்கப்பட்டபின் சிலையின் வளர்ச்சி நின்று விட்டதாக ஆலயத்தை பரமரித்து வரும் பெண் ரோசிட்மேரி தெரிவித்தார்.
பாம்பன் போருந்து பாலம் பயன்பாட்டிற்கு வரும் முன்னர் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகையைத் தொடர்ந்து ரயில் நின்று செல்லும் அளவிற்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். பக்தர்கள் தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்து காணிக்கை செலுத்தினர். குழந்தை வரம் வேண்டுதல், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் அருள் அளித்து வரும் வேளாங்கண்ணி மாதா ஆலயம், அந்த பகுதி மக்களின் காணிக்கையுடன் 8 ஆண்டுகளுக்கு முன் பெரிய ஆலயமாக அமைக்கப்பட்டது.

காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆலயத்தை பராமரித்து வரும் ரோசிட்மேரி தெரிவித்தார்.
வேளாங்கண்ணி மாதா சிலை கடலில் கண்டெடுத்த நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இறைமக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...