160 ஆண்டுகள் பழமையான புலியகுளம் புனித அந்தோனியார் தேவாலயம்
By த. சித்தார்த் | Published On : 25th December 2021 10:55 AM | Last Updated : 25th December 2021 11:57 AM | அ+அ அ- |

கோயம்புத்தூர் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் புலியகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோனியார் தேவாலயம். இது 162 ஆண்டுகள் பழமையான தேவாலயமாகும். 1859 ஆம் ஆண்டில் பாதர் டி கேலிஸ் (Fr.De Gelis) என்பவரால் கட்டப்பட்டது.
சிறிய தேவாலயமாக இருந்தது 1892 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின்பு, தற்போது கிறிஸ்துவர்களால் வணங்கப்பட்டு வரும் இந்த தேவாலயத்தின் அமைப்பு 12 ஜூன் 1987 ஆம் ஆண்டில் புதிய கட்டடம் அமைத்து புனிதப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றில், புனித அந்தோனியார் எனப்படுபவர் கோடி அற்புதர் என கிறிஸ்துவர்களால் அழைக்கப்படுகிறார். புனித அந்தோனியார், குழந்தை இயேசுவை கைகளில் தாங்கி நிற்கும் ஓவியம் மிகவும் பிரபலமானது. இவர் 1195 ஆம் ஆண்டில் பிறந்தவர். காணாமல்போன பொருட்களைக் கண்டடைய, பேய்களை விரட்ட இவரின் துணையை நாடுவர் என இவரது வாழ்க்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிழமை இவருக்கு நவநாள் ஒப்புக்கொடுக்கும் நாள் எனக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் என ஒன்பது மாதங்களுக்கு நவநாள் அல்லது தொடர்ச்சியாக ஒன்பது செவ்வாய் என நவநாள் ஒப்புக்கொடுப்பர் என நம்பப்படுகிறது.
இந்த தேவாலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக வார நாள்களில் செவ்வாய்க்கிழமை புனித அந்தோனியாரின் ஒப்புக்கொடுக்கும் நாள் எனக் கருதப்படுவதால், அன்று சாதி, மதம் வேறுபாடின்றி அனைத்து மக்களையும் இந்த புனித அந்தோனியார் தேவாலயம் வரவேற்கிறது.
மேலும், புனித அந்தோனியாரை போற்றி செவ்வாய்க்கிழமைகளில் 4 புனித பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13 ஆம் தேதி அன்று புனித அந்தோனியார் திருவிழா கொண்டாடப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...