பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தின் சிறப்புகள்!
By கே. முத்துக்குமார் | Published On : 25th December 2021 11:51 AM | Last Updated : 25th December 2021 12:06 PM | அ+அ அ- |

புதிதாக புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வரும் தூய சவேரியார் பேராலயம்
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று எடுத்தியம்பியுள்ளார் ஒளவையார். 'உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்' என்று விளம்பியுள்ளார் திருமூலர். உலகின் மிகப் பெரிய தேவாலயம் வாடிகனில் அமைந்துள்ள தூய பேதுரு தேவாலயம்.
தாமிரவருணி பாய்ந்தோடும் நெல்லை மாவட்டத்தின் இரட்டை நகரங்களில் ஒன்றான பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தேவாலயங்கள் பல உள்ளன. அவற்றில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை தேவாலயமாக தூய சவேரியார் பேராலயம் திகழ்ந்து வருகிறது.
பாளையங்கோட்டையில் சேசுசபைச் செம்மலும், அருள்பணியாளருமான வெருடியர் காலத்தில் உருவாகிய தூய சவேரியார் தேவாலயம் இப்போது பேராலயமாக ஒளியுடன் மிளிர்ந்து வருகிறது. 17 ஆம் நூற்றறாண்டில் அன்னை மரியாள் பெயரால் அமைந்த சிற்றாலயமே பாளையங்கோட்டை மக்களுக்கு தேவாலயமாக விளங்கியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் சேசு சபைத் திருத்தொண்டர் தம் பெரும் முயற்சியால் தெற்கு நோக்கிய திருக்கோவில் உருவானது. மறைமாவட்டத் தலைமைக் குருவாகிய லூயிசுவெருடியர் 30-9-1860 அன்று அடித்தளம் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் கோபுரத்தோடு உருவான திருக்கோவில் 29-6-1863 ஆம் ஆண்டு தூய சவேரியார் பெயரால் வழிபாட்டுத்தலம் ஆயிற்று.
அதிரையான் ஞானப்பிரகாசம் அடிகளார் பாளையங்கோட்டை தலத் திருஅவைக்கு ஈடுபாட்டுடன் உழைத்த பெருமக்கள் ஆவர்.
"கோபுரதரிசனம் கோடிபுண்ணியம்" என்பர். தொலைவிலிருந்து வருவோர் கோபுர தோற்றத்தைக் கண்டதும் இறைவனை உள்ளத்தில் சிந்தித்தவாறே வந்து சேருவர். தூய மாற்கு வீதியில் அமைந்த தூய சவேரியார் தேவாலய தலைமை குரு ஆஞ்சிசாமி அடிகளார், கோட்டாறு ஆயராகப் பொறுப்பேற்றுச் சென்றார். தெற்கு நோக்கிய தேவாலயத்தை கிழக்கு நோக்கிய ஆலயமாக பன்னிரண்டு கல்தூண்களுடன் விரிவாக்கம் செய்த பெருந்தகை அருளானந்தம் அடிகளார்.
"உலகின் ஒளி" நாடகம் வாயிலாகவும் இளையோரின் பலருடைய உறுதுணையாளும் ஜார்ஜ் அடிகளார் ஆலயத்திற்குப் பெரிதும் ஊழியம் புரிந்தார். செயபதி அடிகளார் ஆலயத்தின் திருப்பலி பீடத்தை மெருகேற்றி வழங்கினார். மதுரை பேராயர் திரவியம் ஆண்டகை ஈராண்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட தேவாலயத்தை 25-1-1959 அருச்சித்துப் புதிய வழிபாட்டுத் தலமாக பொலிவுறச் செய்தார்.
மதுரை உயர் மறைமாவட்டத்தின் ஒரு பங்குதளமாக விளங்கிய தூய சவேரியார் தேவாலயம் 1973 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக அறிவிக்கப்பட்டது. மேதகு இருதயராஜ் ஆண்டகை பாளையங்கோட்டை மறை மாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்றார். அதன்பின்பு இம்மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் கத்தோலிக்க தேவாலயங்கள் உருவாகின.
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தை புனரமைத்து விரிவாக்கம் செய்து கட்டி முடிக்க பக்தர்கள் இறைவேண்டல் செய்தனர். அதன்பலனாக பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ், இப்போதைய ஆயர் அந்தோணிசாமி ஆகியோரின் பேருதவியோடும், நல்லாதரவோடும் தூய சவேரியார் பேராலயம் பெரும் பொருள்செலவில் பிரம்மிப்பூட்டும் கோபுரத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. பத்தாண்டுகளாக பேராலய வளாகத்தில் மேற்கு நோக்கிய தேவாலயத்தில் திருவழிபாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | பாளையங்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் ஊசிக்கோபுரம்