கல்விப்பணியில் சிறந்து விளங்கும் திருப்பூர் டி.இ.எல்.சி திருச்சபை
By ஆர். தர்மலிங்கம் | Published On : 25th December 2021 12:26 PM | Last Updated : 25th December 2021 02:55 PM | அ+அ அ- |

திருப்பூர் சபாபதிபுரத்தில் இருந்த டிஇஎல்சி அருள்நாதர் ஆலயம்
திருப்பூர்: திருப்பூரில் 96 ஆண்டுகள் பழைமையான தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை கல்விப் பணியில் சிறந்து விளங்கி வருகிறது.
இயேசுவின் அன்பின் மகத்துவங்களை திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் சேர்த்த பெருமை சுவீடன் மிஷினரிமாரைச்சாரும். அதிலும், தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் மூன்றாம் பேராயாராக இருந்த மறைந்த சாந்தகிரி ஐயாவின் தந்தையார் குடும்பத்துடன் 1876 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி திருப்பூர் வந்தடைந்தார்.
.jpg)
இதன்பின்னர் திருப்பூர் பழைய டவுண் மிஷன் வீதியில் ஒரு ஆரம்பப்பள்ளியை துவக்கி நடத்த தூண்டுகோலாக இருந்தார். மேலும், பள்ளியின் ஓட்டுக் கட்டடத்தில் ஆராதனைகளும் நடைபெற்று வந்தன. இதன்பின்னர் திருப்பூர் நீதிமன்றம் அருகில் உள்ள சபாபதிபுரத்துக்கு பள்ளி மாற்றப்பட்டது.
மேலும், கடந்த 1925 ஆம் ஆண்டு டிஇஎல்சி அருள்நாதர் ஆலயமும் கட்டப்பட்டது என்கிறார் இந்த திருச்சபையின் ஆயர் ஜி.அசோக்குமார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை என்பது 1706 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து தரங்கம்பாடிக்கு வந்த இரு ஜெர்மானிய மிஷினரிகளால் தொடங்கப்பட்டதாகும். இவர்களால்தான் இந்தியாவில் முதன் பெண்கள் பள்ளியும் தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது.
.jpg)
மேலும், தரங்கம்பாடிக்கு அருகில் கடிதாசிப்பட்டறை என்னும் ஊரில் காகிதத் தொழிற்சாலையும் தொடங்கப்பட்டது. திருப்பூரில் புரோட்டஸ்டன்ட் திருச்சபைகளில் டிஇஎல்சி முதல் திருச்சபையாகும். அதிலும், தென்னிந்திய திருச்சபைகள் உருவாவதற்கு முன்பாக தென்னிந்திய திருச்சபைகளின் ஆராதனைகள் கூட இந்த திருச்சபைகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த திருச்சபை 1925 ஆம் ஆண்டு கட்டப்பட்டதற்கான கல்வெட்டு உள்ளது. இதற்கு முன்பாகவே இறைபணியும் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரின் முதல் பள்ளிக்கூடம் தமிழ்சுவிசேச லுத்ரன் திருச்சபையின் பள்ளிதான். அந்தப் பள்ளி தற்போது வரையில் இங்கு செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏராளமானவர்கள் கல்வி பயிற்சி தற்போது பல்வேறு அரசு உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். அடியில் இருக்கும் மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபடுகிறது இந்த திருச்சபை. இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, ஈஸ்டர் போன்ற விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பிரர்த்தனை செய்வது வழக்கம். இந்த திருச்சபையில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.