அசோக் செல்வன்-பிந்துமாதவிக்கு அருண் பாண்டியன் பாராட்டு!

பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் தயாரிப்பாளரின் பிரச்னைகளுக்காக...
அசோக் செல்வன்-பிந்துமாதவிக்கு அருண் பாண்டியன் பாராட்டு!
Updated on
1 min read

அசோக்செல்வன், பிந்துமாதவி ஆகிய இருவரும் தங்களது சம்பளத்தில் ஐந்து லட்சம் ரூபாய் விட்டுத் தர முன்வந்தார்கள் என்று நடிகர் அருண் பாண்டியன் கூறியுள்ளார்.

அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படம், சவாலே சமாளி. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் நாசர் பேசியதாவது:

சென்ற வருடம் இதே நேரத்தில் நான் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தேன். எனது மகனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். மேல்சிகிச்சைக்காக  சிங்கப்பூர் சென்றபோது அங்கே விமான நிலையத்தில் அருண்பாண்டியன் எனக்காக காத்திருந்து உங்கள் மகன் விரைவில் குணமடைவான் என்று சொல்லி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மருத்துவ ஏற்பாடுகளைச் செய்து முதல் கட்ட சிகிச்சைக்குப் பணமும் செலுத்தி உதவி செய்தார்.

நான், அருன்பாண்டியன், ராம்கி மூவரும் 33 வருடங்களுக்கு முன்பு சினிமா கனவுகளுடன் ஒன்றாக போராடினோம். இன்று மூவரும் ஜெயித்து விட்டோம். அருண்பாண்டியன் இப்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் அவருக்கு வெற்றிப் படமாக இருக்கும். படம் தயாரிக்க எனக்கும் ஆசைதான். ஆனால் என் மனைவி காமிலா வீட்டின் கதவை அடைத்துவிடுவார் என்றார்.

அருண்பாண்டியன் பேசியதாவது:

முன்பு எல்லாம் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது ஈசியாக இருந்தது. பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள்,  நடிகர்கள் அனைவருக்கும் படம் தயாரிப்பில் பங்கு இருக்கும். ஆனால் இப்போது படத்தின் பெரும்பகுதிப் பணம் நடிகர், நடிகைகள், இயக்குநர் ஆகியோருக்குத் தான் போகிறது. ஆனால், படம் ரிலீஸ் செய்யும்போது அந்தத் தயாரிப்பாளருக்கு யாரும் உதவி செய்வதில்லை. படம் சேட்டிலைட் கூட  விற்பதில்லை. அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் விழுகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலைக் கடத்தல் வரை சென்றுள்ளார்.

இந்தப் படத்தை நானே சொந்தமாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன். இதைக் கேள்விப்பட்ட அசோக்செல்வன், பிந்துமாதவி இருவரும் தங்களது சம்பளத்தில் ஐந்து ஐந்து லட்சம் விட்டுத் தருவதாக கூறினார்கள். அனால் நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழுச் சம்பளத்தையும் செட்டில் செய்து விட்டேன். இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் அந்தப் படத்தின் வெளியீட்டின்போது, தயாரிப்பாளரின் பிரச்னைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன்வருவதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com