'சத்யன்' என்றொரு மகா நடிகன்!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், சரியாக இதே ஜூன் 15-ஆம் தேதி. இந்தியத் திரையுலகம் ஒரு மாபெரும் நடிகனை இழந்த நாள் அது.
'சத்யன்' என்றொரு மகா நடிகன்!
'சத்யன்' என்றொரு மகா நடிகன்!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், சரியாக இதே ஜூன் 15-ஆம் தேதி. இந்தியத் திரையுலகம் ஒரு மாபெரும் நடிகனை இழந்த நாள் அது. அரை நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தாலும், இன்னும் மறையாத நினைவுகளுடன் தொடர்கின்றன அந்த மகா நடிகனின் பெயரும் புகழும்!
இந்தி சினிமாவுக்கு திலீப்குமார்; வங்காளத்துக்கு உத்பல்தத்; தெலுங்குக்கு நாகேஸ்வர ராவ்; தமிழுக்கு சிவாஜி கணேசன். அந்த வரிசையில் மலையாளத் திரையுலகுக்கு "சத்யன்'. சத்யன் மறைந்தாலும் இந்தியத் திரை வரலாற்றில், அவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்த "செம்மீன்' பளநியை யாரால்தான் மறந்துவிட முடியும்?

ஆசிரியர்களை அழைப்பதுபோல சத்யன் சார், சத்யன் மாஸ்டர், சத்யன் மாஷு என்று இன்றுவரை மலையாளத் திரையுலகம் அவரை மதிக்கிறது. தமிழில் எப்படி நடிப்புக்கு சிவாஜி கணேசனை இலக்கணமாகக் கருதுகிறோமோ, அதேபோல மலையாளத் திரையுலகம் நடிப்புக்கு "ரோல் மாடலாக' இன்றுவரை கருதுவது சத்யன் சாரைத்தான்.

சத்யனின் வாழ்க்கை நாடகக் கம்பெனியிலோ, சினிமாவிலோ தொடங்கி விடவில்லை. அதுவும் இளம் வயதில் நடிகரானாரா என்றால் அதுவும் கிடையாது. தனது 39-ஆவது வயதில்தான் அவரது திரையுலக வாழ்க்கை தொடங்கியது. அடுத்த 20 ஆண்டுகள் மலையாளத் திரையுலகத்தில் கொடிகட்டிப் பறந்து, சட்டென்று ஒரு நாளில் விடைபெற்றுக் கொண்டுவிட்ட சத்யன் மாஸ்டரின் வாழ்க்கைப் பயணம் பிரமிப்பு ஏற்படுத்தக் கூடியது.

இன்றைய முதுகலைப் படிப்புக்கு நிகராக வித்வான் தேர்வில் தேர்ச்சி பெற்ற சத்யனின் வாழ்க்கை, பள்ளி ஆசிரியராகத்தான் தொடங்கியது. அப்போது அவரது பெயர் சத்யநேசன். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆசிரியராகப் பணி கிடைத்தது என்றால், அப்போது அதை ராஜ உத்தியோகம் என்று கொண்டாடுவார்கள். 

செயின்ட் ஜோசப் பள்ளியில்  சத்யன் ஆசிரியராகப் பணியாற்றியது வெறும் மூன்றே மாதங்கள்தான். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற கடிதம் வருகிறது. ஒரு வாரம் விடுப்புக் கோருகிறார். நிர்வாகம் மறுக்கிறது. வேலை வேண்டாம் என்று உதறிவிட்டுப் பெற்றோரைப் பார்க்கக் கிளம்பி விட்டார் சத்யன். இதுதான் அவரது குணாதிசயம். எதைப் பற்றியும் கவலைப்படாத துணிவு அவருக்குக் கடைசி வரை இருந்தது.

திருவிதாங்கூர் அரசின் தலைமைச் செயலகத்தில் அவருக்கு குமாஸ்தாவாக வேலை கிடைத்தது. சுமார் ஓராண்டு காலம் பணியாற்றியபோது அவர்  ஒன்றிரண்டு நாடகங்களில் நடித்தார். அத்துடன் அவரது கலைத் தொடர்பு அறுந்துவிடுகிறது. இரண்டாம் உலகப் போர்க்காலம். ராணுவத்தில் இணைந்தார் சத்யன். இந்திய வைஸ்ராயின் கமிஷன்ட் ஆஃபீசராக அவர் பணியாற்றி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வழியில்லை.

1941 இரண்டாம் உலகப் போரில் பர்மா, மலேயா நாடுகளில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார், மிகத் திறமை வாய்ந்த வயர்லெஸ் ஆப்பரேட்டர் என்று பிரிட்டிஷ் ராணுவத்தினரால் பாராட்டப்பட்ட சத்யன். உலகப் போர் முடிந்து தாய்நாடு திரும்பிய பிறகு அடுத்த வேலை பார்ப்பதற்கு அதிக நாள் அவர் காத்திருக்க வேண்டி வரவில்லை. திருவிதாங்கூர் காவல் துறையில் "இன்ஸ்பெக்டர்' வேலை தேடிவந்தது.

இன்ஸ்பெக்டராக ஆலப்புழையில் பணிபுரியும்போதுதான் அவருக்குத் திரையுலகம் தனது கதவுகளைத் திறந்தது. பல அமெச்சூர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சத்யனிடம் ஒரு திறமை வாய்ந்த நடிகர் இருப்பதை முதலில் உணர்ந்தவர் அவரது நண்பரும் இசையமைப்பாளருமான செபாஸ்டியன் குஞ்ஞு குஞ்ஞு பாகவதர். "தியாகசீமா' என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஆலப்புழையில் இன்ஸ்பெக்டராக இருந்த சத்யநேசனுக்கு வாய்த்தபோது, காவல்துறை உயரதிகாரிகள் அவர் சினிமாவில் நடிப்பதற்கு அனுமதி தர மறுத்தனர். துளியும் சட்டை செய்யாமல், தனது இன்ஸ்பெக்டர் வேலையை ராஜிநாமா செய்து விட்டார் சத்யநேசன்.

"தியாகசீமா' படம் வெளிவரவில்லை. தயாரிப்பாளர், இயக்குநர் பி.சுப்பிரமணியம் நீலா புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் "ஆத்ம சாட்சி' என்கிற தனது முதல் படத்தைத் தயாரிக்க இருந்தார். "தியாகசீமா' வில் சத்யன் நடித்திருந்த காட்சிகளைப் பார்த்த பி. சுப்பிரமணியம் தனது திரைப்படத்தில் கதாநாயகனாக அவரை 1952-இல் அறிமுகப்படுத்தினார். சத்யநேசன், நடிகர் சத்யனாக உருவெடுத்த வரலாறு இதுதான்.

"ஆத்ம சாட்சி' வெறும் தொடக்கம்தான். அடுத்தாற்போல வெளியான "நீலக்குயில்' மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்குப் பிறகு வெளியான சத்யனின் ஒவ்வொரு திரைப்படமும் இன்றுவரை மலையாளத் திரையுலகில் அழியாக் காவியங்களாகத் தொடர்கின்றன. 

"ஓடையில் நின்னு' பப்பு, "தாகம்' ஜெயராஜன், "யக்ஷி' ஸ்ரீநி, "செம்மீன்' பளநி, 'முடியனாய புத்ரன்' ராஜன், "அனுபவங்ஙள் பாளிச்சகள்' செல்லப்பன், "கரகாணாக்கடல்' தாமோதரன்  முதலாளி, "அஸ்வமேதம்' டாக்டர் தாமஸ் என்று எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு ரத்தமும், சதையும் வழங்கிய சத்யனின் அலட்டிக் கொள்ளாத ஆழமான நடிப்பை, ஹாலிவுட் நட்சத்திரங்களிடம்கூட காண முடியுமா என்பது சந்தேகம்தான்.

20 ஆண்டுகளில் 150 திரைப்படங்கள். அவை ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட கதாபாத்திரங்கள். அத்தனை கதாபாத்திரங்களிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிந்த சத்யன் - அதனால்தான் அவர் சத்யன் மாஸ்டர். 

உத்யோகஸ்தா, ஸ்நேகசீமா, நாயர் பிடிச்ச புலிவால், வீட்டு மிருகம், பார்யா, காயங்குளம் கொச்சுண்ணி, அடிமகள், கடல் பாலம் என்று அவர் நடித்த திரைப்படங்களை இப்போது பார்த்தாலும், கருப்பு வெள்ளையில் சத்யன் நிகழ்த்தி இருக்கும் நடிப்பு ஜாலத்தில் பிரமித்துப் போகாமல் இருக்க முடியாது.

பிரபல மலையாள நாவலாசிரியர் பி. கேசவதேவ் எழுதிய "ஓடையில் நின்னு' நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது, அதன் முக்கியக் கதாபாத்திரமான ரிக்ஷாகார பப்புவாக நடித்தார் சத்யன். வாயில் பீடியுடன், அசால்டாக தொழில்முறை கை ரிக்ஷாக்காரரைப்போல அவர் இடது காலால் ரிக்ஷாவைக் தூக்கும் அந்த ஸ்டைலை, அநாயாசமான நடிப்பை வேறு எந்தவொரு நடிகரிடமும் பார்த்துவிட முடியாது.

தமிழில் அவர் கதாநாயகனாக நடித்து ஒரு திரைப்படம் வந்தது. சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனத்தில் 1960-களில் வெளிவந்த "ஆளுக்கொரு வீடு' திரைப்படம் பெரும் வெற்றி பெறவில்லை. ஆனால், அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "செய்யும் தொழிலே தெய்வம்' பாடல் இப்போதும்கூட முணுமுணுக்கப்படும் பாடல்களில் ஒன்று.

சிவாஜி கணேசனுக்கு, சத்யன் மாஸ்டரின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இரண்டு பேருமே 1952-இல் திரையுலகுக்கு அறிமுகமானவர்கள் என்பது இன்னொரு ஒற்றுமை. "ஓடையில் நின்னு' திரைப்படத்தில் சத்யனின் நடிப்பைப் பார்த்து வியந்த சிவாஜி கணேசனுக்குத் தனது திரைப்படம் ஒன்றில் சத்யன் நடிக்க வேண்டும் என்கிற நீண்டநாள் ஆசை இருந்தது. 

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் "பேசும் தெய்வம்' திரைப்படம் எடுக்க முற்பட்டபோது, அதில் பர்மாக்காரராக வரும் கெüரவ கதாபாத்திரத்துக்கு சத்யனை ஒப்பந்தம் செய்ய சிவாஜி பரிந்துரைத்ததாகக் கூறுவார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. 

"ஓடையில் நின்னு' மலையாளத் திரைப்படத்தை, 1971-இல் "பாபு' என்று ஏ.சி. திருலோகசந்தர் தமிழாக்கம் செய்தார். படம் வெளிவந்தபோது நடிகர் சத்யன் உயிருடன் இல்லை. மலையாளத் திரைப்படத்தை இரண்டு தடவை சிவாஜி பார்த்தார் என்று கூறுவார்கள். இது குறித்தும் தெளிவு கிடையாது.

அவருடன்  பழகியவர்கள், நடித்தவர்கள், அவரை இயக்கியவர்கள் பலரும் இன்று இல்லை. அவருடன் நடித்த ஷீலாவும், சாரதாவும், விதுபாலாவும் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் அவர் குறித்துப் பல செய்திகள் வெளிவரக் கூடும். "அனுபவங்ஙள் பாளிச்சகள்' திரைப்படத்தில் மம்மூட்டியும், "ஓடையில் நின்னு' வில் சுரேஷ் கோபியும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு சத்யன் மாஸ்டர் குறித்து அதிகமாக எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

சத்யன் மாஸ்டருடன் பல படங்களில் இணை நாயகனாக நடித்த மது இன்னும் இருக்கிறார். மது நடிக்க வரும்போதே சத்யன்  முன்னணி நாயகனாக இருந்தவர் என்றாலும், இருவரும் நல்ல நண்பர்கள். 

அப்போது பெரும்பாலான மலையாள நடிகர்கள் சென்னையில்தான் இருந்தார்கள். இங்குதான் படப்பிடிப்புகள் நடக்கும். சுவாமீஸ் லாட்ஜில்தான் சத்யன், மது, சோமன் ஆகியோர் தங்கி இருப்பார்கள். சத்யன் மாஸ்டரைப் பார்ப்பதற்கு கேரளாவிலிருந்து பலர் சுவாமீஸ் லாட்ஜ் வாசலில் காத்திருப்பார்கள்.
ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் சத்யனுக்கு ரத்தப் புற்றுநோய் (லுகேமியா) இருந்திருக்கிறது. அது குறித்து அவர் யாரிடமும் எதுவும் சொன்னதில்லை. அரசல் புரசலாக அவருக்கு ஏதோ பாதிப்பு இருப்பதாக மலையாளத் திரையுலகில் சொல்லப்பட்டாலும், அவரது செயல்பாட்டில் எதுவும் வெளிப்படவில்லை. அவரேதான் தினந்தோறும் தனது காரை ஓட்டிக் கொண்டு படப்பிடிப்புக்கு வருவார் என்பதால் யாரும் சந்தேகப்படவும் இல்லை.

"அனுபவங்ஙள் பாளிச்சகள்' படப்பிடிப்பின்போது ஒருநாள், மரத்தடியில் நடிகை ஷீலாவின் மடியில் படுத்தபடி இரவுநேரக் காட்சி படமாக்கப்பட்டது. ஷீலா வெள்ளைப் புடவை கட்டியிருந்தார். காட்சி முடிந்து எழுந்தபோது ஷீலாவின் சேலையில் ரத்தம். சத்யனின் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுகிறது. ஈரத் துணியைக் கொண்டுவரச் சொன்ன சத்யன் தானே அதைத் துடைத்துக் கொண்டார்.  உடையில் ரத்தக் கறை படிந்ததற்கு நடிகை ஷீலாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத் தானே தனது காரை ஓட்டிக் கொண்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றார் அவர்.

படப்பிடிப்புக் குழுவினருக்குத் திகைப்பும், அதிர்ச்சியும். ஆனால், சத்யன் மாஸ்டர் சற்றும் பதறவில்லை. அவரது ராணுவப் பின்னணியோ என்னவோ, எதற்கும் அசைந்து கொடுக்காத மனத்துணிவு அவரிடம் இருந்தது. தோப்பில் பாஸியின் "சரசய்யா' அவரது கடைசிப் படங்களில் ஒன்று. அப்போதுகூடத் தனது நோயின் கடுமை குறித்து அவர் எதுவும் வெளிப்படுத்தவில்லை.

1971 ஜூன் 15-ஆம் தேதி. தனது காரைத் தானே ஓட்டிச் சென்று கே.ஜி. மருத்துவமனை பார்க்கிங்கில் நிறுத்தினார் சத்யன். உள்ளே போய் டாக்டரைப் பார்த்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே நினைவு தவறியது. சத்யன் மாஸ்டர் இறந்துவிட்டார் என்கிற செய்தி பரவியபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் தேம்பி அழுதவர்களைவிட, நம்ப முடியாதவர்கள்தான் அதிகம்.

இன்றுடன் அரை நூற்றாண்டாகிவிட்டது சத்யன் மாஸ்டர் என்கிற அந்த "மகாநடிகன்' மறைந்து. அவரது மறைவு மலையாளத் திரையுலகுக்கு மட்டுமான இழப்பு என்று நாம் கருதிவிட முடியாது.

கேரளம் தமிழ் சினிமாவுக்கு ஒரு எம்ஜிஆரைத் தந்தது என்றால், தமிழகம் மலையாள சினிமாவுக்குத் தந்த "மகாநடிகன்' சத்யன். மேனுவல் சத்யநேசன் நாடார் என்கிற சத்யனின் பூர்விகம், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com