எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில்... குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த விஜய்யின் ஃபார்முலா!

எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் வரிசையில் தளபதி விஜய் எவ்வாறு இணைந்தார் என்பதைப் பற்றி...
From Vijay films...
விஜய் படங்களின் தொகுப்பு.edit | muthuraja
Published on
Updated on
5 min read

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்களான எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் வரிசையில் தளபதி விஜய்யும் பின்பற்றிய குடும்ப ரசிகர்களுக்கான ஃபார்முலாவே அவரை இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது என்று கூறினால் யாருமே மறுக்க மாட்டார்கள்.

கடந்தாண்டின் முற்பகுதியில் ஏப்ரல் மாதவாக்கில், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவந்தார். அந்தப் படத்துக்கு ‘கோட்’ எனப் பெயரிடப்பட்டது. ஜென் ஸீ தலைமுறையினர் பயன்படுத்தும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற பெயரில் இந்தப் படத்துக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஆங்கிலத்தில் இருக்கும் பெயர் அடித்தட்டில் இருக்கும் மக்களை எவ்வாறு சென்றடையும் என அனைவரும் கிண்டல் செய்துகொண்டிருந்தபோது, அது என்ன பெயராக இருந்தால் என்ன, திரையரங்கிற்கு வருபவர்கள் கேட்கப் போவது என்னவோ, “விஜய் படத்துக்கு ஒரு டிக்கெட் குடுப்பா..” என்பதாகத்தான் இருக்கும். இதுதான் விஜய்யின் வெற்றிக்கான சூட்சுமமாகவே கருதப்படுகிறது.

சமகாலப் போட்டியாளர்களாகக் கருதப்படும் அஜித் மற்றும் விஜய் இருவருமே ஒரு மாதிரியாக குடும்பப் படங்களிலே நடித்து வந்தனர். அஜித் அதிரடி படங்களான கேங்ஸ்டர் கதைகள் மற்றும் போலீஸ் கதைகள் என வேறுபாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், விஜய் அதிரடி படங்களில் நடித்தாலும் அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட் என குடும்ப ரசிகர்களைத் தன்னிடமே தக்கவைத்துக் கொண்டார்.

கில்லி படத்திலிருந்து
கில்லி படத்திலிருந்து

ஓர் உச்ச நடிகர் தனது ரசிகர்களை மட்டுமின்றி, ஆறு வயதிலிருந்து அறுபது வயது வரையிலான அனைவரையும் கவர்ந்து வைத்திருந்தால் மட்டுமே, அவர் மாஸ் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற முடியும். அப்போதுதான் அவரின் படங்களுக்கான கலெக்‌ஷனும் அதிகரிக்கும். அதை விஜய் நன்றாகவே அதைப் பயன்படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

முழுமையான அதிரடிப் படமான ‘திருமலை’க்கு முன்னதாகவே, குடும்ப பாங்கான மற்றும் நகைச்சுவைப் படங்களிலேயே விஜய் அதிகமாக நடித்துவந்தார். பகவதி திரைப்படத்தில் அதிரடி, நகைச்சுவை, தம்பி சென்டிமென்ட் என நடித்திருந்தாலும் இந்தப் படம் விஜய்க்குத் தோல்விப் படமாகவே அமைந்தது.

அதைத் தொடர்ந்து திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்கள்தான் விஜய்யை முழுவதுமாக ஒரு பெரிய கமர்ஷியல் நாயகனாக மாஸ் ஹீரோவாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தன. இதனிடையே வெளியான உதயா, மதுர, சுக்ரன் ஆகிய படங்கள் சுமாராக அமைந்திருந்தாலும், விஜய்யின் கமர்ஷியல் மசாலா படங்களின் வெற்றிகளால் இந்த சுமாரான படங்களின் விமர்சனங்கள் அனைத்தும் தூள் தூளாகின.

From the movie Ghilli...
கில்லி திரைப்படத்திலிருந்து...படம் | ஐஎம்டிபி

இதற்கிடையே வந்ததுதான், 'தி ரியல் கோட் ஆஃப் கமர்ஷியல்' மூவி ‘கில்லி’. தற்போதைய காலத்தில் கமர்ஷியல் படத்துக்கும் ஒரு பெஞ்ச் மார்க் என்றால் அது கில்லி படம்தான்.

ஆங்கிலத்தில் ‘தி பாய் நெக்ஸ்ட் டோர்’ (The Boy Next Door) என்ற வார்த்தை இருக்கிறது. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பையன் போல இருக்கிறது என்று அர்த்தம். அதுபோலத்தான் கில்லி படத்தில் தேவையற்ற சிகை அலங்காரங்கள், கோட் சூட், கண்ணைப் பறிக்கும் மேக் - அப் எதுவுமில்லாமல் இயல்பாக அமுளி துமளி செய்திருப்பார் விஜய்.

இடை இடையேவரும் அம்மா - தங்கச்சியின் காமெடிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதுமட்டுமா, அடிதடி என அதகளம் பண்ணியிருந்தார் விஜய். அதுவே அவரது திரை வாழ்க்கை முதல் ரூ. 50 கோடி படமாக அமைந்தது.

கில்லி வெளிவந்து 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை பிரைம் டைமில் 6 மணிக்குத் தொலைக்காட்சியில் கில்லி படத்தைப் போட்டுவிட்டால் எத்தனை முறை பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கவே மனம் சொல்கிறது. ஏன்... மறுவெளியீட்டில்கூட கில்லி படம் வெளியாகி சக்கை போடு போட்டது. தொலைக்காட்சியில் வெளியிடப்படும்போதுகூட புதிய படங்களுக்கு இணையாக டிஆர்பியில் முதலிடம் பிடித்துவிடுகிறது கில்லி.

தாய்ப்பாசம், தங்கச்சி சென்டிமென்ட் இதெல்லாம் தமிழ் சினிமாவில் எப்போதுமே புழக்கத்தில் இருக்கும் கதைத் தேர்வுகள். 1960-களில் எம்.ஜி.ஆர். தொடங்கி இன்றைய காலத்தில் சூப்பர் ஸ்டாராக தயாராகும் சிவகார்த்திகேயன் வரை ஃபேமிலி சென்டிமென்ட், தங்கச்சி பாசம் தொடர்பான கதைகளைத் தொட்டவர்கள் கெட்டுப்போவதில்லை.

விஜய்யின் அந்த ஃபார்முலாவே அவரை தற்போதைய சூப்பர் ஸ்டார் என்ற நிலையில் அமர வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களில் அம்மா, தங்கச்சி சென்டிமென்ட், பாட்டு, பாடல், டான்ஸ், பொறி தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என மாஸ் மசாலாவைக் கலந்துகட்டி அடித்திருந்தார் விஜய்.

From the movie Aadhi...
ஆதி திரைப்படத்திலிருந்து...படம் | ஐஎம்டிபி

இரு படங்களிலும் காட்டிய சென்டிமென்ட் மற்றும் அதிரடி மசாலாவின் நெடி ‘ஆதி’ படத்தில் அதிகமாகவே சேர்க்கப்பட்டிருந்தது. இது அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட ஆவரேஜ் படமாக அமைந்திருந்தாலும், அதற்கடுத்த வருடத்தில் பொங்கலுக்கு வெளியான போக்கிரி, திரையரங்குகளில் சக்கைபோடு போட்டது. அதிலும், குறிப்பாக அந்தப் படத்தில் வரும் முதல் பாடலான 'போக்கிரி பொங்கல்..' பாடலுக்கு சட்டை காலரை தூக்கி ஆடாத சிறுவாண்டுகளை பார்க்காமல் இருக்க முடியாது, அந்தக் காலகட்டத்தில்.

சிவகாசி படத்திலிருந்து..
சிவகாசி படத்திலிருந்து..

திருப்பாச்சி, கில்லி, சிவகாசி, திருமலை இந்த நான்கு படங்களிலுமே காமெடியில் விஜய் கலக்கியிருந்தார். அதற்கடுத்தடுத்த வந்த அதிரடிப் படங்களால், இப்போது இயக்கும் விஜய் பட இயக்குநர்கள், அவருக்கான காமெடி போர்ஷன்களை முழுமையாகத் தவிர்த்துவிட்டனர்.

தொடர்ச்சியாக ஒரே பாணியில் நடித்து வந்த மசாலா படங்களே விஜய்யைத் தோல்வியை நோக்கி இழுத்துச் சென்றன. போக்கிரிக்கு பின்னர் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், 50-வது படமான சுறா வரை தொடர் தோல்விகளால் விஜய் விரக்தியின் உச்சத்துக்கே சென்றிருப்பார். இதில், வேட்டைக்காரன் மட்டும் சொல்லிக்கொள்ளும் வகையில் ஓகேவான படமாக இருந்தது.

இதனால், தனது மசாலா வகைப் படங்களுக்கான பாணியை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார் விஜய். சுறாவுக்குப் பின்னர் வந்த காவலன், வேலாயுதம், நண்பன் என வித்தியாசமான படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

துப்பாக்கி படத்திலிருந்து...
துப்பாக்கி படத்திலிருந்து...படம் | புக் மை ஷோ.

அதற்கு பின்னர்தான் நம்ம பார்த்த விஜய்யா இது? என அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையிலான 'துப்பாக்கி' படத்தில் நடித்து, 2000 காலகட்டத்தில் சென்டிமென்ட் படங்களைக் காட்டி தன்பக்கம் இழுத்துவைத்திருந்தவர், வாண்டுகள் இளைஞர்களாக மாறியிருந்த 2010 காலகட்டத்தில் மீண்டும் தன் பக்கமே இழுத்து வைத்துக் கொண்டார் விஜய்.

அதைத் தொடர்ந்து ஜில்லா, கத்தி எனத் தெறிக்கவிட்ட விஜய் கெரியரில் (2015 ஆம் ஆண்டு வெளியான புலியை யாருமே கண்டுகொள்ளவில்லை, அதை நாமும் தவிர்த்துவிடலாம்) ஒரேயொரு படம் மட்டும் இயக்கியிருந்த அட்லி என்பவர் தெறி என்ற படத்தை இயக்கியிருந்தார் [ஆர்யாவின் ராஜா ராணி மட்டும் இயக்கியிருந்தார் அட்லி].

திருப்பாச்சி, சிவகாசி காலகட்டத்தைப் போலவே அட்லியின் வாழ்க்கைப் பயணத்தில் விஜய்க்கு ஏறுமுகம்தான். இவரின் இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்கள் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. இளைய தளபதியாக இருந்த விஜய், தளபதி என்ற புதிய பரிமாணத்தையும் அடைந்தார்.

விவசாயிகள் பிரச்னை, தீவிரவாதம், அரசியல் மாற்றம், சிறுவர் சீர்சிருத்தப் பள்ளியில் பிரச்சினை என வித்தியாசமான கதைகளைத் தேர்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தினார் விஜய்.

திருப்பாச்சி படத்திலிருந்து...
திருப்பாச்சி படத்திலிருந்து...

ஆரம்பம் முதலே விஜய் தனது அரசியல் வருகை குறித்து ஆங்காங்கே கூறிவந்தாலும், சர்க்கார் போன்ற படங்களில் வெளிப்படையாக பேசியிருந்தார். மேலும், அவ்வப்போது பட வெளியீடுகளுக்கு முன்னர் ஆடியோ லாஞ்ச்களிலும் அரசியல் ரீதியிலான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர், லியோ, நெல்சனின் பீஸ்ட், வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என நகைச்சுவைக்குத் துளியும் இடம் கொடுக்கப்படாத முழுமையான சண்டைப் படங்களிலே நடித்து விஜய் தனி ட்ராக்கில் பயணித்து வருகிறார்.

மாஸ் மசாலா விஷயங்களை கொஞ்சம் குறைத்துவிட்டு திருப்பாச்சி மாதிரியான அழுத்தமான குடும்பக் கதைகளை மீண்டும் கையிலெடுத்தால்தான் சூப்பர் ஹிட் என்ற நிலையை மாற்றிவிட்ட விஜய் தனக்கென தனி பட்டாளத்தைக் கையில் வைத்திருக்கிறார். விஜய்யைத் திரையில் பார்த்துவிட்டால் போதும் என முதல் பார்வை போஸ்டரிலிருந்து ட்ரைலர், பாடல் வெளியீடு என கொண்டாட்ட மோடுக்கு சென்றுவிட்டனர் விஜய் ரசிகர்கள்.

ஜனநாயகன்.
ஜனநாயகன்.

அரசியல் நுழைவின் மூலம் ‘கெரியரின் உச்சத்தில் இருந்து’ வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69-வது படமான 'ஜனநாயகன்' படத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். இதுவும் கண்டிப்பாக முழுமையான அரசியல் படமாகவே இருக்கும்.

நாம் இதுவரை பார்த்த விஜய்யைப் பார்க்க முடியாது என்றாலும், அப்போது வெளியான அவரின் படங்கள் பசுமையான நினைவுகளாக மட்டுமே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திரைப்படங்கள் வாயிலாகவும் திரைப்படங்களைத் தவிர்த்து வெளியுலகத்திலும் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள விஜய், இனி சினிமாக்களில் நடிக்க மாட்டேன் எனத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். எதுவாயினும், அவரின் அடுத்தடுத்த நகர்வுகளில் அவரின் சினிமாக்களைப் போல வெற்றிகள் தொடுமா எனப் பார்த்திருப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com