பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!
பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்..
நடிகர் நானா படேகர்.
பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக். 8) காலமானார். அவருக்கு வயது 75.
கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஹிந்தி மற்றும் மராத்திய திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல நடிகர் நானா படேகர் (75) வியாழக்கிழமை அதிகாலை காலமானார். கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் மயங்கிய நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மணிபால் மருத்துவமனையின் புற்றுநோயியல் தலைவரும் மருத்துவருமான சேகர் சல்கர் கூறுகையில், “45 நிமிடங்கள் தொடர்ச்சியாக உயிர் காக்கும் சிபிஆர் அளிக்கப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சைக்கு அவர் உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், காலை 5.20 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கான சூழ்நிலைகள் தொடர்பாக மருத்துவ-சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, உடற்கூராய்வு நடத்தப்பட உள்ளது” என்றார்.
40 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணம்
விஸ்வநாத் படேகர் என்ற இயற்பெயர் கொண்ட நானா படேகர், 1951ஆம் ஆண்டு ஜன. 1ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் பிறந்தவர். 1978 ஆம் ஆண்டு வெளியான ‘கமன்’ (Gaman) என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து ஹிந்தி மற்றும் மராத்திய மொழித் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தனது இயல்பான நடிப்பு, அழுத்தமான வசன உச்சரிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
‘பரிந்தா’, ‘கிராந்திவீர்’, ‘அக்னி சாக்ஷி’, ‘காமோஷி: தி மியூசிக்கல்’, ‘அப் தக் சப்பன்’, ‘அபஹரண்’, ‘வெல்கம்’, ‘நட்ஸம்ராட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
ரஜினியின் ‘காலா’ படத்தில் வில்லன்
தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கும் நானா படேகர் நன்கு அறிமுகமானவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ஹரிதாதா என்ற வேடத்தில் அவர் நடித்து மிரட்டியிருந்தார். அந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு எதிரான சக்திவாய்ந்த கதாபாத்திரமாக தோன்றி, தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களிடமும் கவனம் பெற்றார். இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்திலும் நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பத்மஸ்ரீ - தேசிய விருதுகள்
நானா படேகரின் சிறப்பான நடிப்புக்காக அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘பரிந்தா’, ‘கிராந்திவீர்’, ‘அக்னி சாக்ஷி’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். ‘கிராந்திவீர்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான தேசிய திரைப்பட விருது ஆவணத்திலும் அவரது பெயர் மற்றும் விருது விவரங்கள் இடம்பெற்றுள்ளன. திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
ரசிகர்களை கவர்ந்த ‘வெல்கம்’ கதாபாத்திரம்
கடுமையான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி நகைச்சுவை கலந்த வேடங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் நானா படேகர். குறிப்பாக ‘வெல்கம்’ திரைப்படத்தில் ‘உதய் ஷெட்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
இதன் மூலம் தீவிரமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கும் நடிகர் என்ற பிம்பத்தை மாற்றி, நகைச்சுவையிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். இந்தப் படத்தில் காமெடி மீம் டெம்ப்ளேட்டுகள் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமானவை.
திரையுலகினர் அதிர்ச்சி
இந்தி மற்றும் மராத்திய திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்ந்த நானா படேகரின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நானா படேகரின் மறைவு, சினிமா உலகில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
நானா படேகரின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Bollywood’s veteran star Nana Patekar has passed away at the age of 75 after suffering a severe cardiac arrest. The National Award-winning actor was among the most respected and distinctive performers in Hindi and Marathi cinema.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





