
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் (41) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
நா.முத்துக்குமாரின் இந்த திடீர் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் மருத்துவமனையில் அதற்குரிய சிகிச்சை எடுத்து வந்தார். நோயின் தாக்கம் அதிகரித்தன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிர் பிரிந்தது. கவிஞர் முத்துக்குமாருக்கு மனைவி தீபலஷ்மி, மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி ஆகியோர் உள்ளனர்.
"பட்டாம்பூச்சி விற்பவன்': காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டு திகழ்ந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவரான நா.முத்துக்குமார் "பட்டாம் பூச்சி விற்பவன்' எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். கவியரங்க மேடைகளிலும், இலக்கிய கூட்டங்களிலும் தன் கவிதைகளால் கவனம் பெற்று, இளம் வயதிலேயே இலக்கிய உலகில் அறியப்பட்டார்.
கவிதையைப் போல் கதைகளிலும் நா.முத்துக்குமாருக்கு ஆர்வம் இருந்தது. இதையடுத்து சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து திரையுலக பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 4 ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் முத்துக்குமார்.
பாடலாசிரியராக அறிமுகம்: நா.முத்துக்குமாரின் "பட்டாம் பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பின் மூலம் கவரப்பட்ட இயக்குநர் சீமான், தன் இயக்கத்தில் வெளிவந்த "வீரநடை' படத்தின் மூலம் நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். இது முத்துக்குமாரின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
இதையடுத்து யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில் "காதல் கொண்டேன்' படத்துக்காக அவர் எழுதிய ""தேவதையை கண்டேன்...'', ""தொட்டு தொட்டு போகும் தென்றல்...'' என அனைத்துப் பாடல்களும் முத்துக்குமாருக்கு தனித்த அடையாளத்தைக் கொடுத்தன. தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
நவீன காதலின் அடையாளம்: ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களை எழுதிய பெருமையைப் பெற்றவர் நா.முத்துக்குமார். குறிப்பாக எளிய நடையில் இவர் எழுதிய காதல் பாடல்கள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. ""நினைத்து நினைத்து பார்த்தேன்...'' (7 ஜி ரெயின்போ காலனி) ""முன் பனியா முதல் மழையா...''(நந்தா), ""முதல் மழை நம்மை நனைத்ததே...''(பீமா), ""அழகே அழகே...'' (ஒரு கல் ஒரு கண்ணாடி), ""பறவையே எங்கு இருக்கிறாய்...'' (கற்றது தமிழ்), ""உனக்காகத்தானே இந்த உயிர்...'' (கற்றது தமிழ்), ""பூக்கள் பூக்கும் தருணம்...'' (மதராசப்பட்டிணம்), ""சுட்டும் விழி சுடரே...'' (கஜினி), ""உருகுதே உருகுதே...'' (வெயில்), ""என் காதல் சொல்ல நேரம் இல்லை...'' (பையா), ""கண் பேசும் வார்த்தைகள்...'' (7 ஜி ரெயின் போ காலனி) உள்ளிட்ட ஏராளமான பாடல்களின் மூலம் நவீன காதலின் அடையாளமாகத் திகழ்ந்தார் முத்துக்குமார்.
இரவு நேரத்து சங்கீதம்: ""உனக்கென இருப்பேன்...'' (காதல்), ""அனல் மேலே பனித்துளி...'' (வாரணம் ஆயிரம்) ""தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...'' (கேடி பில்லா கில்லாடி ரங்கா), ""ஆனந்த யாழை மீட்டுகிறாய்...'' (தங்க மீன்கள்), ""அழகே அழகு...'' (சைவம்), ""அடடா மழைடா...'' (பையா), ""எங்கோயோ பார்த்த மயக்கம்...''(யாரடி நீ மோகினி), "" அவள் அப்படியொன்றும் அழகில்லை...'' (அங்காடித் தெரு) என முத்துக்குமார் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்கள் வெவ்வேறு சூழல்களில் தமிழ் இசை ரசிகர்களின் இரவு நேரத்து சங்கீதமாக விளங்குகின்றன.
12 ஆண்டுகளாக முதலிடம்: தமிழ் திரைப்பாடல் உலகில் தனக்கென தனி இடம் கொண்டு விளங்கிய நா.முத்துக்குமார், கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பாடல் எண்ணிக்கையில் முதலிடம் பெற்று திகழ்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பாடல்களுக்கு மேல் எழுதி முன்னணி பாடலாசிரியராக விளங்கினார்.
இரு தேசிய விருதுகள்: இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா, வித்யாசாகர், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ""அழகே அழகு...'' (சைவம்), ""ஆனந்த யாழை...'' (தங்க மீன்கள்) ஆகிய பாடல்களுக்காக இரு முறை பெற்றுள்ள தேசிய விருதுகள் அவரது கலைப் பயணத்தை அலங்கரிக்கின்றன.
இதை தவிர "வெயில்', "சிவாஜி", "கஜினி', "சிவா மனசுல சக்தி", "அயன்' என ஐந்து முறை சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதுகள் மற்றும் திரைத்துறையின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
நூல்கள்: சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என 20-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். "கிராமம் நகரம் மாநகரம்', "ஆணா ஆவண்ணா", "என்னை சந்திக்க கனவில் வராதே', "சில்க் சிட்டி', "பால காண்டம்', "குழந்தைகள் நிறைந்த வீடு', "வேடிக்கை பார்ப்பவன்', "அணிலாடும் முன்றில்' ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
இறுதிச் சடங்கு: சென்னை அண்ணா நகர், முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் நா.முத்துக்குமாரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளக்காடு மயானத்தில் முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தினமணி இலக்கியத் திருவிழாவில் நா. முத்துக்குமார்
தினமணி சார்பில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 2014ஆம் ஆண்டு ஜூன் 21, 22 ஆகிய நாள்களில் நடத்தப்பட்ட "இலக்கியத் திருவிழாவில்', கவிஞர் நா. முத்துக்குமார் பங்கேற்று "வாசிப்பும் பழக்கமும்' என்ற தலைப்பில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி: பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அளிக்கிறது. திரையுலகில் பாடல்களால் தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் : தமிழ்த் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த நா.முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்துக்கும், திரையுலகத்துக்கும் பேரிழப்பாகும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: "விருதகிரி', "சகாப்தம்' ஆகிய படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். முத்துகுமாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ: திரையுலகில் இன்னும் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து தமிழ் உலகுக்கு பெருமை சேர்க்க வேண்டிய கவிஞரின் மறைவு வருத்தமளிக்கிறது.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): திரைப்பாடல்கள், கவிதைகள் வாயிலாக கலை உலகில் நீங்கா இடம்பெற்ற நா.முத்துக்குமார் இளம் வயதில் மரணத்திருப்பது ஆழ்ந்த வருத்தம் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும், அவரின் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஜி.கே.வாசன் (தமாகா): திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நா.முத்துக்குமார். அவருடைய இழப்பு திரையுலகுக்குப் பேரிழப்பாகும்.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் தமிழர் வாழ்வுரிமைக்கான களங்களிலும் தொடர்ந்து குரல் கொடுத்தவரான நா.முத்துக்குமார் மறைவு தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் துயரமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.