
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு செப்.6-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மண்டியா, மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த கோரி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு கர்நாடக அரசு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு கர்நாடக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் நடிகை சுஹாசினி கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளதாக வாட்சப்பில் தகவல்கள் பரவின.
இந்நிலையில் இதுகுறித்து அவர் ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஓர் அரசியல் விவகாரம் தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக தவறான பதிவு ஒன்று ட்வீட்டாகவும் வாட்சப்பிலும் வலம் வருகிறது. அது தவறானது. பொய். எனக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அதுபோன்ற பதிவுகளை உதாசீனப்படுத்தவும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.