ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாகுபலி 2 படத்துக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து, பாகுபலி 2 படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2017, 6:46 am

சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து, பாகுபலி 2 படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ், கர்நாடகத்துக்கு எதிராகப் பேசியதாக குற்றம்சாட்டி, அவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள 'பாகுபலி-2' திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கினார்கள். பாகுபலி-2 படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கன்னட அமைப்பினரிடம் படத்தின் இயக்குநர் ராஜமெளலி ஏற்கெனவே கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) விடியோ மூலம் கோரிக்கை விடுத்தார். அதில், '9 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்த ஒரு கருத்து உங்களை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே தயாரித்த பாகுபலி முதல் பாகம் உள்பட சத்யராஜ் நடித்த பல திரைப்படங்கள் கடந்த 9 ஆண்டுகளில் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் சத்யராஜ் ஏற்றுள்ளார். அவர் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல' என்று ராஜமெளலி கூறியுள்ளார். 

ஆனால், சத்யராஜ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று கன்னட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து நடிகர் சத்யராஜ் பேசிய விடியோ, கர்நாடகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் கடந்த சில நாள்களாக வேகமாகப் பரவியது. இது, பாகுபலி-2 படத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் 'பெங்களூரு பந்த்' என்ற பெயரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. 

கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இது குறித்துத் கூறியதாவது: ராஜமெளலி அல்லது அவர் எடுத்துள்ள திரைப்படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அப்படத்தில் நடித்துள்ள சத்யராஜ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும். ஏப்ரல் 28-ஆம் தேதி கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெறும். சத்யராஜின் மன்னிப்பைத் தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்றார்.

இதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சத்யராஜ். இதுகுறித்து வீடியோவின் வழியாக அவர் அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூரில் நேற்று போராட்டம் நடத்தினார்கள். சத்யராஜ் உருவபொம்மையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் பாகுபலி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததைப் பாராட்டுகிறேன். முதலில் தடை அறிவித்தது இயக்குநர் ராஜமெளலிக்கோ படத்துக்கு எதிராகவோ அல்ல. ஏப்ரல் 28 அன்று கர்நாடகாவில் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து பாகுபலி 2 படம் ஏப்ரல் 28 அன்று கர்நாடகாவில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.