காதல் தோல்வியால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா விலகல்?

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேற முடிவெடுத்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
காதல் தோல்வியால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா விலகல்?
Updated on
2 min read

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ஓவியா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. 

நடிகர் ஆரவ்வைக் காதலித்த ஓவியா, அதை அவரிடம் தெரிவித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார் ஓவியா. இதையடுத்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமாக அமைந்தன. மீண்டும் மீண்டும் ஆரவ்விடம் சென்று ஐ லவ் யூ எனக் கூறினார். ஆனால் ஆரவ் தொடர்ந்து ஓவியாவின் காதலை ஏற்க மறுக்கவே, திடீரென அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார்.

இதனால் இதர போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பு அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மேலே கொண்டுவந்தார்கள். இதையடுத்து மனநல மருத்துவரை அழைத்து ஓவியாவைப் பரிசோதிக்கும்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். மனநல மருத்துவர் பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்து ஓவியாவைப் பரிசோதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்டு வெளியேற எண்ணினார் ஓவியா. இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்ததால், ஓவியாவை வெளியேற்றும் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றன. 

ஓவியாவின் மேலாளர் விரைவில் வர இருப்பதால் அதுவரை பொறுமையாக இருக்கும்படி ஓவியாவுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதற்காக ஓவியா காத்திருந்தார். அதுவரை நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பவர், நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகிவருகின்றன.  தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேற முடிவெடுத்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் புகைப்படம் ஒன்றும் நேற்று வெளியானது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி காரில் செல்லும் ஓவியாவின் புகைப்படம் என்று அப்புகைப்படத்துக்குக் குறிப்பு சொல்லப்பட்டதால் ஓவியாவின் வெளியேற்றம் குறித்த பரபரப்பு மேலும் அதிகரித்தது. ஓவியாவின் விலகல் குறித்தும் அப்புகைப்படம் குறித்தும் விஜய் டிவியிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஓவியா நிகழ்ச்சியில் தொடராவிட்டால் தங்களால் நிகழ்ச்சியைக் காண இயலாது என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். இதனால் விஜய் டிவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறுவது குறித்த உண்மை நிலவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com