சசி கபூர்...

பாலிவுட் திரையுலகை மட்டுமல்லாது இந்தியத் திரையுலகையை வேறொரு தளத்திற்கு உயர்த்திய
சசி கபூர்...
Published on
Updated on
2 min read

வாழ்வாங்கு வாழ்ந்தோரையும் விட்டுச் செல்லுமோ மரணம்?

பாலிவுட் திரையுலகை மட்டுமல்லாது இந்தியத் திரையுலகையை வேறொரு தளத்திற்கு உயர்த்திய பங்கு கபூர் குடும்பத்துக்கு உண்டு. தலைமுறையாக இந்தி சினிமாவில் அவர்களது பங்களிப்பை உலகறியும். சசி குமார் கிட்டத்தட்ட 148 படங்களில் நடித்துள்ளார். 1960 -  1970-ம் ஆண்டுகளில் இந்தி திரையுலகில் ரொமான்ஸ் ஸ்டாராக விளங்கியவர் சசி கபூர். 

கொல்கத்தாவில் பிறந்த சசிகபூர் தனது குழந்தை பருவம் முதல் (1940) சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டார்.

1961 முதல் இதுவரை 148-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து உள்ளார். 3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் ஈடுபட்டு இருந்தார் சசி குமார். 

பிலிம்பேர் இதழின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது மனைவியான ஜெனிபர் கெண்டால் 1984 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் காலமானார். சிறுநீரக பாதிப்பால் பல ஆண்டுகள் சிகிச்சைப் பெற்று வந்தார் சசி கபூர்.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 4, 2017) சசி கபூர் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79.

மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சசி கபூர் திங்கள்கிழமை மாலை 5.20 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை மூத்த நடிகர் ராஜ் கபூரின் மகனும், நடிகருமான ரன்தீர் கபூர் உறுதி செய்தார். காலமான சசிகபூருக்கு குணால் கபூர், கரண் கபூர் என இரு மகன்களும், சஞ்சனா கபூர் என்ற மகளும் உள்ளனர். 

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. பாலிவுட் திரையுலக பிரபலங்கள் அபிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாரூக் கான், சஞ்சய் தத், அனில் கபூர், சயஃப் அலி கான், ராணி முகர்ஜி, கஜோல், நீது கபூர் உள்ளிட்ட பலர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ரசிகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பிரியங்கா சோப்ரா, கரண் கபூர், ஹ்ருதிக் ரோஷன் உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் கபூர் குடும்பத்தின் அண்ணன் தம்பிகள் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடியத் தருணத்தை கரிஷ்மா கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் 'நாங்கள் ஒன்று கூடி உணவருந்தும் குடும்பம் மட்டுமல்ல, ஒன்றி வாழும் குடும்பமும் கூட’ என்று பதிவிட்டிருந்தார். 

அந்த புகைப்படம் சசி கபூர் தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட கடைசிப் புகைப்படமாகிவிட்டது. கரீனா கபூருக்கு குழந்தை பிறந்திருந்த சமயமாதலால், அவர் இதில் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com