ஸ்விட்சர்லாந்துக்குப் பறந்த விராட் கோலி - அனுஷ்கா சர்மா! இத்தாலியில் திருமணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள்...
ஸ்விட்சர்லாந்துக்குப் பறந்த விராட் கோலி - அனுஷ்கா சர்மா! இத்தாலியில் திருமணம்?
Updated on
1 min read

கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டில் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் திருமணச் செய்திதான் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அடுத்த ஒரு வாரத்தில் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் தற்போது ஐரோப்பாவுக்குப் பறந்துள்ளார்கள். அதுவும் நேற்றிரவு அனுஷ்கா சர்மா - பெற்றோர், அண்ணன் என தனது குடும்பத்துடன் ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றுள்ளதால் திருமணம் குறித்த செய்திகளும் யூகங்களும் அதிகமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அனுஷ்கா மும்பையிலிருந்தும் கோலி தில்லியிலிருந்தும் ஸ்விட்சர்லாந்துக்குப் பறந்துள்ளார்கள்.

திருமணம் செய்வதற்காக அனுஷ்கா சர்மா இத்தாலிக்குச் செல்லவில்லை என அனுஷ்கா சர்மாவின் செய்தித் தொடர்பாளர் தகவல் கூறியிருந்தாலும் யாரும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. கோலி, அனுஷ்கா ஆகிய இருவரும் முதலில் ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றுவிட்டு பிறகு இத்தாலியில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதைப் பல செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. 

கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, சிகே நாயுடு போட்டியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் - உறவினரின் திருமணம்! இந்தச் செய்தி கோலியின் திருமணத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. அனுஷ்காவின் பெற்றோர் தங்களுடைய உறவினர்களுக்கு இத்திருமணம் குறித்து சமீபத்தில் விளக்கியதாவும் கூறப்படுகிறது. இதனால் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பு கோலியின் திருமணச் செய்தி அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிசம்பர் 10 அல்லது 12 அன்று இத்தாலியின் மிலன் நகரில் கோலி - அனுஷ்கா சர்மா காதல் ஜோடியின் திருமணம் நடைபெறவுள்ளது, மும்பையில் ஜனவரி 4 அன்று திருமணம் பதிவு செய்யப்படும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிருக்கான விடை விரைவில் கிடைக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com