ஹிட்லருக்கு பட்லராக இருக்கக்கூட லாயக்கில்லாதவர் விஷால்: டி.ஆர். விமரிசனம்!

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று பெரும் முதல்வர்களுடன் அரசியல் செய்த நான், இப்போது ஞானவேல் ராஜா போன்றவர்களை...
ஹிட்லருக்கு பட்லராக இருக்கக்கூட லாயக்கில்லாதவர் விஷால்: டி.ஆர். விமரிசனம்!
Published on
Updated on
1 min read

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஹிட்லருக்கு பட்லராக இருக்கக்கூட லாயக்கில்லாதவர் என்று டி. ராஜேந்தர் விமரிசனம் செய்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நாளை நடைபெறுகிறது. 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து விலகினார். விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் அவர் போட்டியிட முடிவெடுத்ததால் தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியிலிருந்து விலகினார். இவர் விஷாலின் ஆதரவுடன் விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தற்போது தலைவராக உள்ள டிஏ அருள்பதி தலைமையிலான அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். அருள்பதிக்கு தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனாலும் இந்தத் தேர்தலிலும் எந்த அணி ஜெயிக்கும் என்கிற ஆர்வம் உண்டாகியுள்ளது. இந்த இரு அணிகள் தவிர கலைப்புலி சேகரன் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுகிறார்.

இத்தேர்தல் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டி. ராஜேந்தர் கூறியதாவது:

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று பெரும் முதல்வர்களுடன் அரசியல் செய்த நான், இப்போது ஞானவேல் ராஜா போன்றவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளதே என்பதை நினைக்கும்போது அவமானமாக உள்ளது. 

ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவிக்கு வந்தார். ஆனால் பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்டார். நான் ஒரு விநியோகஸ்தர். ஆரம்ப காலத்திலிருந்து எத்தனையோ படங்களை விநியோகித்திருக்கிறேன். ரஜினிகாந்தின் ராஜாதிராஜா கூட நான் விநியோகித்த படம்தான். ஒரு தயாரிப்பாளனாக எத்தனை வெற்றிப் படங்களைத் தந்தவன் என்பதைப் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்த ஞானவேல் ராஜாவும் விஷாலும் என் படப் பிரச்னைக்கு எத்தனையோ முறை தொலைப்பேசியில் அழைத்தபோதும் ஒருமுறை கூட போனை எடுக்கவே இல்லை. 

விஷாலும் ஞானவேல் ராஜாவும் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பொறுப்புக்கு வந்தார்கள். ஆனால் சங்கத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொதுக்குழுவைக்கூட ஒழுங்காக நடத்தத் துப்பில்லாதவர்கள். 

விஷால் என்ன லாடு லபக்கு தாஸா? அவர் என்ன ஹிட்லரா? ஹிட்லருக்கு பட்லராக இருக்கக்கூட லாயக்கில்லாதவர். ஒரு தமிழனாக நான் வெட்கப்படுகிறேன். விஷாலும் ஞானவேல் ராஜாவும் என்னைத் திட்டமிட்டு அவமதித்தார்கள். நான் பார்க்காத அரசியல்வாதியா, தயாரிப்பாளர்களா? ஆனால் எனக்கே இந்தக் கதி என்றால், மற்ற உறுப்பினர்களின் நிலை என்ன?

எனவே விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் எக்காரணம் கொண்டும் ஞானவேல் ராஜா வெல்லக்கூடாது என்றார். 

நாளை காலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com