

இயக்குநர் மணி ரத்னம் தமிழ்ப்பற்றும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் கொண்டவர்தான். அவர் படங்களின் டைட்டில் கார்டில் தமிழில் மட்டுமே நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் இருக்கும். பாடல்களில் இலக்கிய வரிகளுக்கு நிறைய இடம் கொடுப்பார்.
ஆனால் எல்லா இயக்குநர்களுக்கும் உள்ள ஒரு வியாதியும் பயமும் மணி ரத்னமிடமும் உண்டு. பாடல்களுக்கு ஆங்கில லிரிக் வீடியோ அளிப்பது. காற்று வெளியிடை படத்தின் அழகியே பாடலுக்கும் ஆங்கிலத்தில்தான் லிரிக் வீடியோ வழங்கப்பட்டுள்ளது. தமிழிலும் லிரிக் வீடியோ கொடுங்கள் என்றால் ஆங்கிலத்தில் லிரிக் வீடியோ தரவேண்டாம் என்று கட்டளையிட்டதுபோல திரையுலகம் பதறுகிறது.
தமிழில் படிக்கத் தெரியாதவர்களுக்காக ஆங்கில லிரிக் வீடியோ வெளியிடப்படுகிறது என்றொரு காரணம் முன்வைக்கப்படுகிறது. ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் லிரிக் வீடியோ கொடுங்கள், அதுவே எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்கிற கோரிக்கைக்குக் கிடைக்கிற பதில் - யூடியூபில் வியூஸ் எண்ணிக்கை பிரிந்துவிடும், கணிசமாகக் குறையும்.
பல கோடிகளில் படம் எடுத்து நூறு கோடி வசூலையும் மிஞ்சும் தமிழ் சினிமாவுக்கு யூடியூப்-லிருந்து கிடைக்கும் வருமானம் ஒரு பொருட்டா? அதற்காகத் தமிழைப் புறக்கணிக்கலாமா? அதுவும் தமிழை முன்வைத்து வரிவிலக்கு எல்லாம் நயமாக வாங்கும் திரையுலகம், இதற்காகவாது தமிழ் லிரிக் வீடியோவை வெளியிடலாமே!
இதுபோன்று அசட்டையுடன் வெளியிடப்படும் ஆங்கில லிரிக் வீடியோக்கள் அப்படியே தொலைக்காட்சிகளிலும் வந்து, ஒரு வரலாற்றுப் பிழையாக மாறுகிற அவலமும் நேர்கிறது. இதை இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள் தவிர்க்க முயற்சி செய்யலாமே! இயக்குநர் ராம் சமீபத்தில் தன்னுடைய தரமணி பாடல்களுக்குத் தமிழ் லிரிக் வீடியோவை வெளியிட்டார். அதனால் அவர் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லையே!
ஆனால் ஒன்று, தமிழ் தமிழ் என்று முழங்கும் பாடலாசிரியர்கள், இவ்விஷயத்தைத் தடுக்க முயலாதது மனவேதனை அளிக்கிறது. அவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்திருந்தால் இந்தக் கட்டுரை எழுதவேண்டிய அவசியமே இருந்திருக்காது.
இன்றைக்கும் பாட்டுப் புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியிலும் விற்கப்படுகின்றன. அதற்கென ஒரு வணிகமே உண்டு. ரசிகர்களும் பாடல் வரிகளைத் தமிழில் படிக்கவே விரும்புகிறார்கள். இயக்குநர் ராம் போல தமிழ் உணர்வுடன் திரையுலகம் செயல்படவேண்டும். யூடியூபில் தமிழிலும் பாடல் வரிகளை வழங்கவேண்டும் என்கிற எண்ணம் இதரக் கலைஞர்களுக்கும் வரவேண்டும். இனிமேலாவது இந்தத் தமிழ்ப் புறக்கணிப்பு கட்டாயம் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.