மக்கள் திரையரங்கம்? பழைய விலைக்கே டிக்கெட் விற்கும் ஆச்சர்ய திரையரங்கம்!

இந்தத் திரையரங்குக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு சமீபத்திய டிக்கெட் உயர்வு எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை!
மக்கள் திரையரங்கம்? பழைய விலைக்கே டிக்கெட் விற்கும் ஆச்சர்ய திரையரங்கம்!
Updated on
2 min read

தாராபுரத்தில் சென்னைத் திரையரங்குகளுக்கு நிகரான ஒன்று உள்ளது. எஸ்விஆர் விஸுவல்ஸ்.

இந்தத் திரையரங்குக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு சமீபத்திய டிக்கெட் உயர்வு எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை!

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் நான்கு நாள்களாகத் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடைபெற்றது. 

திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து நேற்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சினிமா டிக்கெட் ரூ.100 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அதனுடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் கட்டணம் ரூ.100 - க்கு குறைவாக இருந்தால், அத்துடன், 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, இதுவரை ரூ.120 - க்கு இருந்த டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.153.60, ரூ.100 க்கான டிக்கெட் ரூ.128. சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நிலையில், அதனுடன் ஜிஎஸ்டி தவிர, வழக்கம்போல் கூடுதலாக ரூ.30 கட்டணம் செலுத்தவேண்டும்.

ஜிஎஸ்டி வரியை ரூ. 120 உடன் சேர்ப்பதால் மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன திரையரங்குகள். இந்தத் தாராபுரத்து உள்ளிட்ட சில திரையரங்குகளைத் தவிர. 

இதற்கு முன்பு ரூ. 120 டிக்கெட் இவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது. 

டிக்கெட் விலை ரூ. 83.30 (அல்லது ரூ. 83.74) கேளிக்கை வரி ரூ. 35, இதர வரி ரூ. 1. மொத்தமாக ரூ. 120.

இப்போது ரூ. 100க்கும் அதிகமாகக் கட்டணம் இருந்தால் 28% ஜிஎஸ்டி வரி. அதற்குக் குறைவாக எனில் 18% ஜிஎஸ்டி.

இப்போது ரூ. 83 உடன் ஜிஎஸ்டி வரியைச் சேர்ப்பதே சரியான நடைமுறையாக இருக்கும். ஏனெனில் கேளிக்கை வரி குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் திரையரங்குகள் நேரடியாக ரூ. 120 உடன் 28% வரியைச் சேர்த்துவிட்டார்கள். இதனால் டிக்கெட் கட்டணம் ரூ. 153.60 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது பழைய வரியைக் கழிக்காமல் நேரடியாக ரூ. 120 உடன் ஜிஎஸ்டி வரி சேர்க்கப்பட்டதால் டிக்கெட் கட்டணம் தமிழ்நாட்டில் மறைமுகமாக 45% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களும் திரைப்பட ஆர்வலர்களும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

ஆனால் இதுபோன்று தவறான முறையில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாத திரையரங்குகளில் தாராபுரத்து எஸ்விஆர் விஸுவல்ஸும் ஒன்று.

அங்கு பழைய டிக்கெட் விலையான ரூ. 83.74 உடன் தான் ஜிஎஸ்டி வரி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது 83.74 + 7.54 + 7.54 (ஜிஎஸ்டி வரி) என டிக்கெட் விலை ரூ. 100 என்றுதான் விற்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் வாங்கினாலும் இதே விலைதான் (அதனுடன் இணையத்தளம் விதிக்கும் இதர கட்டணங்கள் தனி).

தமிழகத்தில் இதுபோன்று பழைய டிக்கெட் விலையுடன் ஜிஎஸ்டி வரியைச் சேர்த்து விற்கும் திரையரங்குகள் மிகக்குறைவு என்று அறியப்படுகிறது.

இத்தனைக்கும் இந்தத் திரையரங்கம் சென்னை மற்றும் மால்களில் உள்ள திரையரங்குகள் போல நவீன வசதிகள், நல்ல இருக்கைகள் என பார்வையாளர்களுக்குச் சகல வசதிகளும் அளிக்கும் திரையரங்கம். இந்தத் திரையரங்கில் அரசின் விதிமுறையை அப்படியே கடைப்பிடிப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளத்திலும் டிக்கெட்டுகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு பாராட்டுகள் குவிகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com