நன்னிலத்தில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சிலை திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் நடைபெற்ற இயக்குநர் சிகரம்கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில், திரைத்துறையினர் பங்கேற்று அவருக்கு புகழாரம் சூட்டினர்.
நன்னிலம், நல்லமாங்குடியில் கே. பாலசந்தரின்  சிலையைத் திறந்து   வைத்த ராஜம்பாலசந்தர். உடன், இயக்குநர் வசந்த்சாய், கவிஞர் வைரமுத்து,  பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசுவாமி, இயக்குநர் மணிரத்னம்.
நன்னிலம், நல்லமாங்குடியில் கே. பாலசந்தரின் சிலையைத் திறந்து வைத்த ராஜம்பாலசந்தர். உடன், இயக்குநர் வசந்த்சாய், கவிஞர் வைரமுத்து, பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசுவாமி, இயக்குநர் மணிரத்னம்.
Published on
Updated on
2 min read

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் நடைபெற்ற இயக்குநர் சிகரம்
கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில், திரைத்துறையினர் பங்கேற்று அவருக்கு புகழாரம் சூட்டினர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில் இயக்குநர் சிகரம்
கே. பாலசந்தர் பிறந்த இடத்தில் உள்ள பள்ளியில், கவிஞர் வைரமுத்துவின் முயற்சியில்,
கே. பாலசந்தருக்கு மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த எஸ். சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்,
கந்தசுவாமி, பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசுவாமி மற்றும் குடும்பத்தினர் கீதா கைலாசம், பிரசன்னா, ஸ்ரீபிரியா பிரசன்னா உள்ளிட்டோர் பாலசந்தர் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசியது: பாலசந்தர் படித்த பள்ளி நன்னிலத்தில் உள்ளது. நான் படித்த பள்ளி பாலசந்தர்தான். வசந்த் போல பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பள்ளியின் வெளியே நின்று படித்தவன் நான். சினிமா என்பது நடிகர்கள் மட்டுமே ஆட்சி செய்யும் இடம் என்றே நான் கருதியிருந்தேன். அவரது படமான இருகோடுகளை பார்த்த பின்னர் தான், திரைக்குப் பின்னால் இருக்கும் இயக்குநரின் ஆளுமை எனக்குப் புரிந்தது. இரு கோடுகள் படம் தான் என் வாழ்க்கையை மாற்றியது. அவருடன் கோவையில் நடந்த ஒரு விழாவுக்கு சென்றுவிட்டு கிளம்பியபோது, என் தோளில் கை வைத்து விடைகொடுத்து அனுப்பினார். அந்த கை இன்னும் என் தோளின் மீது இருப்பதாக உணர்கிறேன் என்றார் மணிரத்தினம்.
இயக்குநர் வசந்த்சாய்: பாலசந்தரைப்பற்றி அவர் பிறந்த நன்னிலத்தில் பேசுவது கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல் ஆகும். அவரோடு 18 படங்களில் பணியாற்றியுள்ளேன். 32 ஆண்டு காலம் அவரோடு இருந்துள்ளேன். அவரது படங்கள் பெண்களின் பிரச்னைகளைப் பேசிய படங்கள். பெண்களின் உரிமைக்காக ஒரு வழக்குரைஞர்போல வாதாடியவர் அவர்.
தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்: திரைப்படங்கள், நடிகர்களின் படங்களாகப் பார்க்கப்பட்டு வந்த காலத்தில், இயக்குநரின் திரைப்படம் என்ற பாணியை ஏற்படுத்தியவர் இயக்குநர் சிகரம். திரைப்பட வாய்ப்புக் கோரி யாரிடமும் நிற்கும் பழக்கமில்லாத அவர், சினிமா உலகம் தன்னைத் தேடி வந்தால் வரட்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தவர். அவரால் உருவாக்கப்பட்ட பலருக்கும் தோன்றாத சிந்தனை, கவிஞர் வரைமுத்துவுக்குத் தோன்றியதால், அவர் மேற்கொண்ட முயற்சிகளால் இயக்குநர் பிறந்து, வளர்ந்த இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
விழாவில் ஜெ. கமலக்கண்ணன், ஜெ.பி. ரெங்கநாதன், தி.வெ. ஷத்தீஷ், இரா. செழியன், சா. ஆசிப்அலி, சுப்பிரமணிய சர்மா, க. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், சிலை வடிவமைப்பாளர் செந்தில் பாராட்டப்பட்டார். தொடர்ந்து, இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் எழுதிய, தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் "அந்த நாள்' என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட, இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com