லாபத்தின் ஒருபகுதியை சுவாதி, ராம்குமார் குடும்பங்களுக்குத் தருவோம்: இயக்குநர் பேட்டி

லாபத்தின் ஒருபகுதியை சுவாதி, ராம்குமார் குடும்பங்களுக்குத் தருவோம்: இயக்குநர் பேட்டி

சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் சுவாதியை பற்றிய திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது... 
Published on

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கு திரைப்படம் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது தந்தை போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தார். இதற்கு இயக்குநர் பதில் அளித்துள்ளார்.

சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி. இவர் கடந்தாண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற இச் சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இதுதொடர்பாக சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் சுவாதியை பற்றிய திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் டி.ஜி.பி. அலுவலகத்தில் புதன்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

எனது மகள் வாழ்க்கையை பற்றி சுவாதி கொலை வழக்கு என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல், திரைப்படத்தை எடுத்துள்ளனர். மேலும் அந்த திரைப்படத்தில் எனது மகள் சுவாதியை தவறாக சித்திரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த திரைப்படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை சந்தான கோபாலகிருஷ்ணன், ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதியிடம் வழங்கினார்.

இந்நிலையில் இயக்குநர் ரமேஷ் செல்வன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

சமூகநோக்கத்துடன்தான் படம் எடுத்துள்ளேன். ராம்குமாரைக் குற்றவாளியாகச் சித்தரித்து படம் எடுக்கவில்லை. நான்கு பார்வைகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு சுவாதி, ராம்குமார் உருவாகக்கூடாது என்பதற்காகப் படம் எடுத்துள்ளேன்.

படத்துக்கு லாபம் கிடைத்தால் அதில் ஒரு பகுதியை சுவாதி, ராம்குமார் குடும்பங்களுக்குத் தருவேன். தணிக்கைக்குச் செல்லும் முன்பு இருவர் குடும்பங்களுக்கும் படத்தைத் திரையிட்டுக் காண்பிப்பேன். ஏதாவது ஆட்சேபம் தெரிவித்தால் அதனை மாற்றிவிடுவோம். படத்தில் சுவாதியை எந்த இடத்திலும் தவறாகக் காண்பிக்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com