பூங்காற்று திரும்புகிறதா? ஒரே படத்தில் பணியாற்றியுள்ள இளையராஜா, வைரமுத்து!

பூங்காற்று திரும்புகிறதா? ஒரே படத்தில் பணியாற்றியுள்ள இளையராஜா, வைரமுத்து!

சிம்பு நடித்துவரும் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் வைரமுத்து, இளையராஜா ஆகிய இருவருமே...
Published on

இருவரும் பிரிந்த நாள் முதல் இந்தப் படம் வரை ஒன்றாக இணைந்து எந்தப் படத்தில் பணியாற்றியதில்லை. இளையராஜா இசை என்றால் அங்கு வைரமுத்துவுக்கு வேலை இருக்காது. அதேபோல வைரமுத்து பாடல் எழுதும் படத்தில் ராஜா தலை வைத்துப் படுக்கமாட்டார்.

இன்னும் சொல்லப்போனால் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்குக்கூட இளையராஜாவுடன் இணைகிற வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. 

ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் வைரமுத்து, இளையராஜா ஆகிய இருவருமே பணியாற்றியுள்ளார்கள், பல வருடங்களுக்குப் பிறகு.

இதுகுறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறியதாவது: படத்தின் சிறப்பம்சம் பாடல்கள்தான். வைரமுத்து எங்களுக்காகப் பாடல்கள் எழுதியுள்ளார். டி.ஆர். படங்களில் உள்ள 8 சூப்பர்ஹிட் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளோம். அதேபோன்ற செட்டையும் உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார் இந்தப் படத்தில் ரோட்டுல வண்டி ஓடுது என்கிற பாடலை இளையராஜா பாடியுள்ளார். அதேபோல படத்தின் அறிமுகப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பதால் இது சாத்தியமாகியுள்ளது. யுவன் இசையமைப்பில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்களில் பாடல் எழுதியுள்ளார் வைரமுத்து. 

எப்படியோ பல வருடங்களுக்குப் பிறகு அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்துள்ளது.

ஒரே படத்தில் தனித்தனியாக வேலை செய்ததே இப்போது செய்தியாகிறது, கவனம் பெறுகிறது. இருவரும் ஒன்றாகப் பணியாற்றினால்? பூங்காற்று திரும்புமா? ரசிகர்கள் அந்த நாளுக்காகக் காத்திருக்கலாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com