கீர்த்தி சுரேஷுக்கும் அனுஷ்காவுக்குமான ஒற்றுமை!

சாவித்ரி புகழேணியின் உச்சத்தில் இருந்த போது நடந்த கதையை விவரிக்க கீர்த்தியும் சாவித்ரி போன்றே எடையைக் கூட்டினால் நன்றாக இருக்கும் என்பது இயக்குனரின் அபிப்ராயம்.
கீர்த்தி சுரேஷுக்கும் அனுஷ்காவுக்குமான ஒற்றுமை!

‘சைஸ் ஜீரோ’ திரைப்படத்துக்காக அனுஷ்கா உடல் எடையைக் கூட்டி நடித்திருந்தார். அதற்கான பலன் ‘பாகுபலி-2’ திரைப்படத்திலும் நன்றாகவே தெரிந்தது. படத்தில் திருமணத்திற்குப் பிறகான சில காட்சிகளில் அனுஷ்கா எடை கூடி இருப்பது நன்றாகவே தெரிந்தது. கதையோட்டத்துக்காக அனுஷ்கா நிஜமாகவே எடை கூட்டினாரா? அல்லது சைஸ் ஜீரோவுக்காக ஏற்றிய எடையை குறைக்க முடியாமல் அவஸ்தைப் பட்டாரா? என்று தெரியவில்லை. ஆனால் படத்தின் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பற்றி கசிந்த பல செய்திகளில் அனுஷ்காவின் எடை பற்றிய செய்தியும் ஒன்று. சைஸ் ஜீரோ படத்துக்காக அனுஷ்கா எடை கூடுவதற்கு முன்பு பாகுபலி- 2 க்காக படம்பிடிக்கப் பட்ட சில காட்சிகளில் நாம் ஒல்லியான அனுஷ்காவைக் காணலாம். ஆனால் பாகுபலி-2 க்கான சில காட்சிகள் 2016 ஆம் ஆண்டில் படம் பிடிக்கப் பட்டன. அதில் அனுஷ்காவால் பழைய சிக்கென்ற அனுஷ்காவாக மாற முடியாததால் மும்பையில் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான VFX ஸ்டுடியோவில் அனுஷ்கா வரும் காட்சிகளில் எல்லாம் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரையில் அவரது எடை முந்தைய அளவுக்கு குறைந்ததாகக் காட்டப்பட்டது என்று கூறப்பட்டது. இது பழைய செய்தி!

இப்போது புதிய செய்தி என்ன தெரியுமா? நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை சித்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. ஆனால் அந்தப் படத்தில் சாவித்ரி புகழேணியின் உச்சத்தில் இருந்த போது நடந்த கதையை விவரிக்க கீர்த்தியும் சாவித்ரி போன்றே எடையைக் கூட்டினால் நன்றாக இருக்கும் என்பது இயக்குனரின் அபிப்ராயம். அதை உணர்ந்த கீர்த்தியும் சாவித்ரி போல குண்டாகி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். 

60 களில் திரையில் தோன்றி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகைகளில் பெரும்பாலானோர் குண்டானவர்களே. அவர்களில் சாவித்ரி பிற நாயகிகளைக் காட்டிலும் அதிக குண்டானவராகவே கருதப் பட்டார். எனினும் அவரது உடல் எடைக்காக அவரை யாரும் புறக்கணித்து விடவில்லை. சாவித்ரியின் நடிப்பில் மகுடத்தில் பொருத்தப்பட்ட வைரமாகக் கருதப் படும் ‘நவராத்திரி’ திரைப்படத்தில் உடன் நடித்த சிவாஜியைக் காட்டிலும் சாவித்ரி குண்டாக இருப்பார். ஆனாலும் அவர் நடிப்பில் என்றும் சோடை போனதில்லை. சாவித்ரி என்றதும் ரசிகர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது அவரது குழந்தைத் தனமான முகமும், புடவை கட்டிய வாளிப்பான உருவமும் தான். ஆகவே கீர்த்தி சாவித்ரியாக மாற தன் உடல் எடையைக் கூட்டுவதாக இயக்குனருக்கு வாக்களித்திருக்கிறாராம்.

1936 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஆந்திராவில் பிறந்த நடிகை சாவித்ரி 1950 ல் ‘சம்சாரம்’ எனும் தெலுங்குப் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். முதற்படத்தை தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ச்சியாக அவர் நடித்த மிஸ்ஸியம்மா, தேவதாஸ், பெண்ணின் பெருமை, பாசமலர், பலே ராமுடு, தோடி கோடலு, மாயா பஜார், குண்டம்ம கதா, நவராத்திரி என அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட் படங்களே! 

சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திரமான ‘மகாநதியில்’ அவருடன் இணைந்து நடிகர் ஜெமினி கணேஷனின் வேடத்தில் துல்கர் சல்மானும், நடிகை ஜமுனா ரோலில் சமந்தாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com