பாகுபலி 2 வெற்றியை அடுத்து, ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் படம்!

பாகுபலி 2 படத்தின் இமாலய வெற்றி இந்த முயற்சியில் ஈடுபடவைத்துள்ளது.
பாகுபலி 2 வெற்றியை அடுத்து, ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் படம்!

வரலாற்றுக் கதைகள் பிரமாண்டமான படைப்புடன் வெளிவரும் காலம் இது.

தொலைக்காட்சிகள் பார்த்து ரசித்த ராமாயணம் கதை, தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டும் இப்படத்தில் அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா, மது மந்தனா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். 

பாகுபலி 2 படத்தின் இமாலய வெற்றி இந்த முயற்சியில் ஈடுபடவைத்துள்ளது. அல்லு அரவிந்த், 2009-ல் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா படத்தைத் தயாரித்தார். ஸ்டார் வார்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் ஸ்பெஷல் எஃபெக்ஸ்ட் பணிகளில் ஈடுபட்ட பிரைம் ஃபோகஸ் நிறுவனத்தின் நமித் மல்ஹோத்ராவும் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார். வரலாற்றுப் படங்களை அதிக பட்ஜெட்டில் உருவாக்க இது சரியான நேரம் என்று அவர் பேட்டியளித்துள்ளார். 

3டி-யில் படமாக்கப்படும் ராமாயணம், 3 பாகமாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக்கப்படவுள்ளது. இயக்குநர் மற்றும் நடிகர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. 

சமீபத்தில் மகாபாராதம் படம் குறித்து செய்தி ஒன்று வெளியானது.

இந்திய இதிகாசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் மகாபாரதத்தை, ரூ.1,000 கோடி செலவில் பிரம்மாண்டத் திரைப்படமாக எடுக்க பிரபல தொழிலதிபர் பி.ஆர். ஷெட்டி திட்டமிட்டுள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்படவுள்ள இந்தப் படத்தை பிரபல விளம்பரப் பட இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். இதில், மோகன்லால் உள்ளிட்ட இந்திய அளவில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகள் மட்டுமன்றி சர்வதேச (ஹாலிவுட்) திரைப்படக் கலைஞர்களும் நடிக்கவுள்ளனர். அதேபோன்று உலக அளவில் புகழ் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். மலையாள இலக்கிய உலகின் ஜாம்பவான் எம்.டி.வாசுதேவன் நாயர் இந்தப் படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதுகிறார். பீமனின் பார்வையில் மகாபாரதத்தை எடுத்துரைக்கும் வகையில் 'ரெண்டாம் மூழம் (Randamoozham)' என்ற நாவலை அவர் எழுதினார். பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்த அந்த நாவலை மையமாகக் கொண்டே இந்தப் படம் உருவாகவுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2018) செப்டம்பரில் தொடங்குகிறது. 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதல் பாகத்தையும், அதற்கு அடுத்த மூன்று மாதங்களில் இரண்டாம் பாகத்தையும் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். உலக அளவில் பேசப்படும் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக மகாபாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ள ஷெட்டி, இந்தப் படம் 100 மொழிகளில் டப்பிங் (மொழியாக்கம்) செய்யப்பட வாய்ப்புள்ளது என்றார்.

பாகுபலி 2 படத்தின் வெற்றியினால் ராமாயணம், மகாபாரதக் கதைகள் பெரிய திரையில் பிரமாண்டமான முறையில் உருவாகவுள்ளது ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com