சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கப் படம் - ஈரானிய இயக்குநர் மஜித் மதியின் 'பியான்ட் தி கிளவுட்ஸ்'   

நவம்பர் 20 முதல் 28 வரை, சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் நடைபெற உள்ளது
சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கப் படம் - ஈரானிய இயக்குநர் மஜித் மதியின் 'பியான்ட் தி கிளவுட்ஸ்'   

நவம்பர் 20 முதல் 28 வரை, சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் நடைபெற உள்ளது. ஈரானிய இயக்குநர் மஜீத் மஜிதியின் சமீபத்திய படமான 'பியான்ட் தி கிளவுட்ஸ்' (Beyond The Clouds) இவ்விழாவின் தொடக்கப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'தி கலர் ஆஃப் பாரடைஸ்', 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' போன்ற திரைப்படங்களுக்காக பல கௌரவ விருதுகளை பெற்றவர் மஜித் மஜிதி.  

தன்னுடைய படங்களை பெரும்பாலும் ஈரானில்தான் படமாக்கம் செய்வார் மஜிதி. முதன் முறையாக இந்திய நடிகர்களை இயக்கி, இந்தியாவில் படப்பிடிப்பை நடத்தி அதை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச திரைவிழாவில் மஜிதி திரையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மஜீத் மஜிதி கூறுகையில், ‘'பியான்ட் தி கிளவுட்ஸ்' போன்ற ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு இத்தனை காலம் காத்திருந்தேன்’ என்றார். இந்திய நடிகர்களான இஷான் கட்டர் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், அன்பு, நட்பு, குடும்ப உறவு போன்ற ஆழமான உணர்வுகளை அழுத்தமாகப் பேசக் கூடியது. மேலும் திரைப்படங்களின் மீதான தனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றார் மஜிதி.

இப்படத்தில் இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், வசனம் எழுதியுள்ள பாலிவுட் இயக்குநர் விஷால் பரத்வாஜ், நடிகர்கள் இஷான் கட்டர், மாளவிகா மோகனன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் இவ்வாண்டு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார் மஜித் மஜிதி. தொடக்க விழாவிற்கு முக்கிய விருந்தாளியாக ஷாருக் கான் பங்கு கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'இந்திய மண்ணில் முதன்முறையாக படம் பிடித்த மஜித் மஜிதியின் படத்தை தொடக்க விழாவில் திரையிடுவதில் IFFI பெருமை கொள்கிறது’ என்று கூறினார் சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநர் சுனித் டாண்டன். மனித மனத்தின் இயல்புகளையும் துயரங்களையும் சித்தரிப்பதில் மஜிதி வல்லுநர், பியான்ட் தி க்ளவுட்ஸ் படத்திலும் மஜிதியின் நுட்பமான இத்தகைய திரைப்பார்வை தொடர்கிறது, இந்தியப் பின்புலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம், சர்வதேச கவனத்தைப் பெறுவது அதுவும் இந்தியத் திரைப்பட விழாவின் மூலம் என்பது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்’என்றும் டாண்டன் கூறினார்.

வியாழக்கிழமை துவங்கவுள்ள இந்த விழாவில் இந்தியன் பனோரமாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 26 சிறப்புத் திரைப்படங்களில் இறுதிப் பட்டியலில், பிஹு (ஹிந்தி), கிஷிதி (மராத்தி), கச்சா லிம்பூ (மராத்தி), கசவ் (மராத்தி) மற்றும் நியூட்டன் (ஹிந்தி) ஆகியவை அடங்கும்.  

அம்ஷன் குமார் இயக்கிய மனுசங்கடா, கமால் ஸ்வரூபின் புஸ்கர் புரான், அமர் கௌஷிக்கின் ஆபா, பிரதீக் வாட்ஸின் ' தி ஓல்டு மேன் வித் எனார்மஸ் விங்ஸ்', மற்றும் லிபிகா சிங் துரையின் 'தி லிபரல்' ஆகியவை திரை ஆர்வலர்களின் சிறப்பு கவனம் பெற்றவையாகும். மெயின் ஸ்ட்ரீம் படங்கள் வரிசையில் ஜாலி எல்எல்பி 2 மற்றும் பாகுபலி 2 உள்ளிட்ட 16 பிரபலமான திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com