
ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட்டின் மனம் கவர்ந்த நாயகி. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் திரைப்படம் அவருக்கு தமிழில் நல்லதொரு அறிமுகமாக அமைந்துவிட்டது. ஆனால் இப்படத்தில் அவரது கதாபாத்திரம் அதிகளவு பேசப்படவில்லை. இதற்கு முன்னால் அவர் நடித்துள்ள தெலுங்குப் படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவந்துள்ளதா என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்.
'திரைப்பட உருவாக்கம் என்பது ஒட்டுமொத்த படக்குழுவினரின் கூட்டு முயற்சி. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அது ஒருவரைச் சார்ந்தது மட்டுமல்ல. என்னளவில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு தேவையான பங்களிப்பை செய்துவிடுவேன். பல படங்களில் ஹீரோயின் ஒரு பதுமை போலத் தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.
சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இந்தப் பிரச்னை உள்ளது. காரணம் இன்னும் ஆணாதிக்கம் மிகுந்த உலகம் தான் இது. ஆனால் தற்போது சூழல் மாறிவருகிறது. பெண் மையப் படங்கள் அடிக்கடி வருவதில்லையென்றாலும் அவ்வப்போது வெளிவருகிறது. பாலிவுட்டில் இந்த விஷயத்தில் பரவாயில்லை. வித்யாபாலன் பல படங்களில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
பாலிவுட்டில் குயின், சிம்ரன் போன்ற படங்களில் பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டுதல்களையும் பெற்றன. தமிழில் நயன்தாரா, அனுஷ்கா தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றனர்.
நான் இந்த வருடம் நடித்துள்ள படங்கள் இரண்டும் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள். நாயகியை முன்னணியில் வைத்துத்தான் படம் எடுக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. ஹீரோவுக்குத் தரப்படும் பிரதான பாத்திரத்தில் சரி சமமாக இருந்தால் கூட போதும். அத்தகைய மாற்றத்தை நோக்கி தான் திரை உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்' என்றார் ரகுல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.