

பெண்களை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க உள்ளார் இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த பிரியதர்ஷினி. இந்தப் படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஜானர் மிகவும் தனித்தன்மையானது என்றும், ஆக்ஷன், மர்மம், பயணம், திகில் என எல்லாமும் கலந்த படமாக இது இருக்கும் என்று கூறினார் பிரியதர்ஷினி.
மேலும் அவர் கூறுகையில், ‘இந்தப் படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனுடன் கண்ணாம்பூச்சி ஆடும் கதாபாத்திரம் அவருக்கு. பூனை எலியைத் துரத்தும், ஆனால் எலி தந்திரமாகத் தப்பித்துவிடுவதுடன் பூனையை எப்படி காலி செய்கிறது என்பதான எளிமையான கதைதான். ஆனால் திரைக்கதையில் வித்தியாசமாக இருக்கும். கில் பில், லூசி போன்ற படங்களில் பிரதான பாத்திரத்துக்கு காதல் வருவதில்லை. போலவே என்னுடைய ஹீரோயினுக்கும் மரத்தை சுற்றி டூயட் ஆட வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் தற்போது சந்திக்கும் சமகால பிரச்னைகள் இப்படத்தில் பேசப்பட்டிருக்கும். முன்னனி ஹீரோ ஒருவரிடம் கதை சொல்லியிருக்கிறோம், அவர் ஓகே சொல்லிவிட்டால், அவர் தான் படத்தின் வில்லன்’ என்றார்.
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்க ‘விக்ரம் வேதா’புகழ் சாம் சி.எஸ்சுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் புனேவில் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கவிருக்கிறது. 'இந்தப் படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் மிஷ்கினின் பிறந்த நாளான இன்று (செப்டர்ம்பர் 20) வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால் சில வேலைகள் இன்னும் முடியாத நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் அதனை வெளியிட முடியவில்லை. செப்டம்பர் 30-ம் தேதி விஜயதசமி அன்று வெளியிடுவோம் என்றார் பிரியதர்ஷினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.