ஓவியா, ஜூலி வெளியேறியதால் 'பிக் பாஸ்' பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையுமா?

இப்போது இருக்கும் போட்டியாளர்களில் ஓவியா அளவுக்கு பார்வையாளர்களிடையே கவனத்தையும், அன்பையும் பெற்ற நடிகர்கள், நடிகைகள் எவருமில்லை.
ஓவியா, ஜூலி வெளியேறியதால் 'பிக் பாஸ்' பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையுமா?

உலகெங்கும் பெருவெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸால் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த நான்கைந்து வாரங்களுக்குள்ளாகவே 10% அதிகரித்துள்ளதாம். இந்த எண்ணிக்கை விகிதச் சாதனையை, விஜய் தொலைக்காட்சி, உலகெங்கிலும் கிளைகளைப் பரப்பி பார்வையாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் சன் தொலைக்காட்சியின் பார்வையாளர்களிலிருந்து கவர்ந்திழுத்து எட்டியதாக கருத்துக் கணிப்பு விளம்பர நிறுவனம் ஒன்று புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

பார்வையாளர்களின் எண்ணிக்கை, தொலைக்காட்சிக்குண்டான சந்தை மதிப்பு உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்காட்சி  ஊடகங்களைப் பொறுத்துவரை சன் தொலைக்காட்சி கடந்த 5 ஆண்டுகளாக எவராலும் அசைத்துப் பார்க்க இயலாத அளவில் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் முதல்முறையாக பிக் பாஸால் அதை அசைத்துப் பார்த்து வெற்றிகரமாக முதலிடத்தைப் பெற்றுள்ளது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. இந்த வெற்றியை அது தனியாகப் பெறவில்லை, தனது குழுமத்தில் இயங்கும்  பிற மொழி ஊடகங்களான ஸ்டார் மா தொலைக்காட்சி, ஸ்டார் GEC உள்ளிட்டவற்றுடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கைகோர்த்து இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆனால் இந்த வெற்றி என்பது இப்போதைக்கு தற்காலிகமானது தான். தமிழ் ‘பிக் பாஸைப்’ பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களாக இதுவரை இருந்து வந்த ஓவியா கடந்த வாரம் போட்டியிலிருந்து தானாகவே எலிமினேட் ஆகிச் சென்று விட்டதால் மிச்சமிருக்கும் போட்டியாளர்கள் மட்டும் வைத்துக் கொண்டு பிக் பாஸ் தனது பழைய பார்வையாளர்கள் விகிதத்தை தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் ஓவியா அளவுக்கு பார்வையாளர்களிடையே கவனத்தையும், அன்பையும் பெற்ற நடிகர்கள், நடிகைகள் எவருமில்லை. எனவே வரும் வாரங்களில் தமிழ்  ஸ்டார் விஜயின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையவும் வாய்ய்புகள் உண்டு. 

அதற்கு மாறாக... கமல் போன்ற ஒரு தொகுப்பாளரை வைத்துக் கொண்டு ஸ்டார் விஜய் ;பிக் பாஸில்’ அதிரடி மாற்றங்களைச் செய்து மேலும் இந்தப் போட்டியை மக்களிடையே பேசுபொருளாக்கி பார்வையாளர்கள் எண்ணிக்கை விகிதத்தை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. முதலில் 14 போட்டியாளர்கள் மட்டுமே என்றிருந்த நிலையில் கடைசி கட்டமாக நமீதா வந்து இணைந்தது போல.... பின்னர் நான்கு வாரங்கள் கடந்த பின் புதுப் போட்டியாளராக ‘பிந்து மாதவி’ இணைந்தது போல, திடீரென, மக்கள் நன்கு அறிந்த அரசியல், சினிமா, கலைத்துறை சார்ந்த புதுப் போட்டியாளர்கள் எவரையேனும் விஜய் தொலைக்காட்சி பிங் பாஸுக்குள் கொண்டு வர முயலலாம். அப்படி ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் இப்போதிருக்கும் சூழலில் ‘பிக் பாஸ்’ன் பார்வையாளர்கள் எண்ணிக்கையோ அல்லது தொலைக்காட்சியின் சந்தை மதிப்பிலோ இப்போது கிட்டிய உயரம் மாற வாய்ப்புகள் இல்லை. 

உலகின் பிற நாடுகளில்  ‘பிக் பிரதர்’  என்ற பெயரில் சக்கைப் போடு போட்ட வெற்றிகரமான ரியாலிட்டி ஷோ தான் தமிழில் ‘பிக் பாஸ்’ ஆனது. இந்தியில் பிக் பிரதர் எனும் பெயரில் சல்மான் கான் தொகுத்து வழங்க 10 எபிசோடுகள் கண்டது இந்த பிக் பாஸ் கான்செப்ட். இந்தி மட்டுமல்ல கன்னடத்திலும் கூட பிக் பாஸ் 4 எபிசோடுகள் கண்ட வெற்றிகரமான  ஷோவாகத் திகழ்ந்தது. அதே சமயம், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ‘பிக் பாஸை’ ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையைப் 'Endemol shine'  நிறுவனத்திடம் இருந்து  பெற்று 3 வருடங்களாகிறதாம். கடந்த 3 வருடங்களில் நிதானமாகத் திட்டமிட்டு தென்னிந்திய ரசிகர்களின் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி  ரசிகர்களின் ரசனையைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து, பார்வையாளர்களுக்கு கொஞ்சமும் அலுப்புத் தட்டாமல் பரபரப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்லும் விதமாக பக்காவாகத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியே தமிழ் பிக் பாஸ். அந்த உழைப்புக்கான வெற்றியை அது முதல் வாரத்தில் இருந்தே அதன் உரிமையாளர்களுக்கு ஈட்டித் தந்து கொண்டு தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com