சாந்தி... டிஸ்கோ சாந்தி - வலிகளில் இருந்து மட்டுமே வாழக் கற்றுக் கொண்டிருக்கும் நடிகை!

சாந்தி... டிஸ்கோ சாந்தி - வலிகளில் இருந்து மட்டுமே வாழக் கற்றுக் கொண்டிருக்கும் நடிகை!

இவர்கள் இருவருமே மறைந்த பிரபல நடிகர் ஆனந்தனின் மகள்கள். ஆனந்தன் யாரென்று தெரியாதவர்கள் கூகுளில் தேடிக் கண்டடையலாம், அல்லது யூ டியூபில் ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலை தேடினால் அவரைப் பார்க்கலாம்

சாந்தி இப்போதிருக்கும் நிலையில் அவரது பெயருக்கு முன் ‘டிஸ்கோ’ என்ற வார்த்தை அனாவசியமானது. தமிழ் சினிமாவில் 80 களில் தவிர்க்கவே முடியாத டான்ஸர்களில் சாந்தியும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லை, தென்னிந்திய சினிமா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஜோதி லட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, வரிசையில் சாந்திக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமே! சில காலம் தமிழில், பாடல் காட்சிகளில் மட்டுமல்ல ஒரு சில திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஓரிரு காட்சிகளில் சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் கூட சாந்தி வந்து சென்றிருக்கிறார். அவற்றுள் ரசிகர்களுக்கு ஞாபகமிருக்கக் கூடிய திரைப்படங்கள் என்றால்  ‘அக்னி நட்சத்திரம்’ மற்றும் ‘இதயத்தைத் திருடாதே’ படங்களைச் சொல்லலாம்.

அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, தெலுங்கில் ஃபைட்டர் மற்றும் வில்லன் நடிகராக அறிமுகமான ஸ்ரீஹரியுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாற, இருவரும் ரகசியமாகத் திருமணமும் செய்து கொண்டார்கள். திருமணத்தைப் பதிவு செய்திருந்தாலும் தங்களது திருமணத்தை சினிமா உலகத்துக்கும், வெளி உலகத்துக்கும் அறிவிக்க சில வருடங்கள் தேவைப்பட்டதால் அவர்களது திருமணம் ரகசியமானதாகவே இருந்தது. பிற்பாடு அவர்கள் தங்களது திருமணத்தை அறிவித்த போது ஸ்ரீஹரி தெலுங்கில், வில்லனில் இருந்து ஹீரோவாகவும், கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் புரமோட் ஆகியிருந்தார். அன்பான கணவர், இரு மகன்கள் என சாந்தி தனது குடும்ப வாழ்வில் அருமையாக செட்டிலாகி விட்டார். அதன் பிறகு அவர் தென்னிந்திய சினிமாக்களில் தலை காட்டவில்லை.

நடுவில் தனது தங்கையின் மண வாழ்க்கை முறிவைக் குறித்து ஓரிரு தமிழ் பத்திரிகைகளில், தங்கைக்கு ஆதரவாக சாந்தி பேட்டியளித்திருந்தார். அப்போது மீண்டும் தமிழ் ரசிகர்கள் சாந்தியை.... அவர்களுக்குத் தெரிந்த வகையில் சொல்வதென்றால் டிஸ்கோ சாந்தியை அடையாளம் கண்டு கொண்டனர். 

சாந்தியின் தங்கை வேறு யாருமல்ல, நடிகர் பிரகாஷ் ராஜின் மனைவி லலிதகுமாரி. அவரும் நடிகை தான். கே.பாலசந்தர் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கணவருடனான விவாகரத்துக்குப் பின் தன் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவர்கள் இருவருமே மறைந்த பிரபல நடிகர் ஆனந்தனின் மகள்கள். ஆனந்தன் யாரென்று தெரியாதவர்கள் கூகுளில் தேடிக் கண்டடையலாம், அல்லது யூ டியூபில் ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலை தேடினால் அவரைப் பார்க்கலாம். ஆனந்தன், தியாகராஜ பாகவதர் காலத்து ஆள். ஹீரோவாக பெரு வெற்றிகளைப் பெற்று தமிழ் சினிமாவில் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு நபர். வெகு இளமையிலேயே இறந்து விட்டார். தந்தையை இழந்த குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகத் தான் சாந்தி தமிழில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானதாகத் தனது பழைய நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். 

தந்தை இல்லாத குடும்பத்தில் சாந்தி தான் மூத்த மகள், அவர் தனது குடும்பத்தின் மேல் தனக்கிருந்த பொறுப்புணர்வாலும், பற்றாலும் தன்னுடன் பிறந்தவர்களது வாழ்க்கை பொறுப்பை தானே  ஏற்றுக்கொண்டு ஒவ்வொருவருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து அவரவர் வாழ்வை செட்டில் செய்து கடைசியாக தனது முயற்சியால் தனக்கும் ஒரு அற்புதமான குடும்ப வாழ்க்கையைத் தேடிக் கொள்கிறார். ஆனால் விதி அவர்களது குடும்பத்தை இப்போதும் விட்டு வைக்கவில்லை போலும்.

திடீரென சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி புற்றுநோயால் பாதிக்கப் படுகிறார். டோலிவுட்டில் பரபரப்பான நடிகராக இருந்த ஸ்ரீஹரி, தனது நோயைக் கண்டு கொண்டதோ... அதன் முற்றிய நிலையில் தான் என்பதால் அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை. 2013 ல் மும்பையில் ஷூட்டிங்கின் போது திடீரென மயங்கி விழுந்தவரை, லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கிறார்கள், ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்ரீஹரி இறந்து விடுகிறார். வாழ்வின் பல போராட்டங்களைத் தனியாகத் தாங்கிக் கொண்டு எதிர்நீச்சலிட்டு தனக்கு வந்த தடைகளை எல்லாம் தூர விலக்கி விட்டு முன்னேறிக் கொண்டிருந்த சாந்தியின் வாழ்க்கை அன்பிற்குரிய கணவரது மரணத்தால் ஸ்தம்பித்துப் போனது. அவரால் தனது கணவரது இழப்பைத் தாங்கவே முடியவில்லை.

சாந்திக்கு இரண்டு மகன்கள், மகன்களின் மீதான பாசத்தையும் மீறிக் கொண்டு கணவரை இழந்த துக்கம் அவரைத் தூங்க விடாமல் அரற்றச் செய்தது. விளைவு இரவுகளில் துக்கத்தை மறப்பதற்காக, தூக்க மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். நாளடைவில் அதுவே அடிக்‌ஷன் ஆனது. திடீரென ஒரு நாள் தூக்க மாத்திரை இல்லாமல் இனி தன்னால் வாழவே முடியாது என்ற நிலைக்குச் சென்றதும் திடீரென சாந்தி விழித்துக்கொண்டார். கணவர் இறந்து விட்டார். இப்போது தனது மகன்களுக்கு தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை. அவர்களது எதிர்கால வாழ்வு தன்னை மட்டுமே நம்பி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, தான் இப்படி துக்கத்தைக் காரணமாக்கி எந்நேரமும் மாத்திரைகளின் தயவில் சரியாக வேளைக்குச் சாப்பிடக் கூட மனமின்றி தன்னை மறந்து தூங்கிக்கொண்டே இருந்தால், தன் மகன்களின் வாழ்க்கை இருண்டு விடும் என்ற அச்சம் அவரைத் தூங்க விடாமல் செய்தது.

கணவர் ஸ்ரீஹரிக்கு மரணிக்கும் வயதில்லை, ஆனால் அது நோய்க்குத் தெரியுமா?! ஆனாலும் ஸ்ரீஹரியை விரும்பாதோர் டோலிவுட்டில் எவருமில்லை... தன்னால் முடிந்த வரை, தனது தொழிலில் தனக்கென சிறப்பான பெயரைச் சம்பாதித்தவராகவே அவர்  மறைந்ததால் அவரது மகன்களை டோலிவுட் கைவிடாது. சாந்தியைப் பொறுத்தவரை தன் மகன்களுக்காக அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், மகன்களுக்காக தனது தூக்க மாத்திரைகளைத் தியாகம் செய்து விட்டு இனி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்காக தன்னை தயார்படுத்திக் கொள்வது மட்டுமே, தான் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்க முடியும் என்பதை சாந்தி உணர்ந்தாக வேண்டிய நிலை. 

அவர்  உணர்ந்தார்,  அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் பொது வெளியில் அவர் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள். ‘ நான் என் கணவரது மரணத்தின் பின் மிகப்பெரிய அளவில் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாகி இருந்தேன். ஆனால் என் மகன்களின் எதிர்கால வாழ்க்கை குறித்த அபாய மணி அடிக்கடி என் மூளையில் ஒலித்துக் கொண்டே இருந்ததால்... பெருமுயற்சி செய்து இப்போது முழுமையாக அந்த அடிக்‌ஷனில் இருந்து வெளியில் வந்து விட்டேன். என் மகன்களுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை. அவர்களுக்காக நான் எப்போதும் நலமுடன் இருக்க வேண்டும்.” என்றிருக்கிறார் சாந்தி.

வலிகளிலிருந்து வாழக் கற்றுக் கொண்ட யாருமே முழுமையாக எந்த விதமான அடிக்‌ஷனிலும் மூழ்கிப் போக முடியாது. தற்காலிகமாக துக்கம் அவர்களை மூழ்கடித்தாலும் வாழ்க்கையில் தாம் கற்றுக் கொண்ட அனுபவங்களில் இருந்து அவர்கள் தங்களது மீள் வாழ்வுக்கான நியாயங்களைத் தேடிக் கண்டடைந்து மீள்வார்கள் என்பதற்கு டிஸ்கோ சாந்தி ஒரு சிறந்த உதாரணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com