
ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அதுல் மஞ்ரேக்கர் இயக்கும் புதிய படம் ஃபேனிகான். இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அனில் கபூர் நடிக்கவிருக்கிறார்கள். தால் திரைப்படத்துக்குப் பிறகு பதினேழு வருடங்கள் கழித்து மீண்டும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அனில் கபூர் ஒன்றாக நடிக்கிறார்கள். ஆனால் அவர் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இப்படத்தில் ஒரு இசைக் கலைஞராக அனில் கபூர் நடிக்கிறார்.
படத்தின் இணை தயாரிப்பாளர் பிரேமா அரோரா, ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா ராய் இதுவரை ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களை விட இப்படத்தில் மிகவும் துணிச்சலான நாயகியாக நடிக்கிறார் என்று தெரிவித்திருந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படத்தின் ஹீரோவாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பம் நிலவியது.
ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க அக்ஷய் ஓபராயை முதலில் கேட்டபோது அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார். ராஜ்குமார் ராவ், விக்கி கௌஷல் ஆகிய பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில்தான் மாதவன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 20) செய்தி வெளியானது. இதற்கு முன்னர் மணி ரத்னம் இயக்கிய குரு திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயும் மாதவனும் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஜோடியாக நடித்திருக்கவில்லை. எனவே தற்போது ஃபேனிகானில் அவர்கள் ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என பாலிவுட் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் படக்குழுவினரிடமிருந்து உறுதியான செய்தி எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
டச்சு நாட்டில் 2000-ம் ஆண்டு வெளியான ‘எவ்ரிபடி இஸ் ஃபேமஸ்’என்ற படத்தை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படத்தை 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.