கேரள நடிகை வழக்கு: திலீப் கைது! நடிகை காவ்யா மாதவன் எங்கே?

14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு..
Published on
Updated on
1 min read

பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள நடிகை, கொச்சி அருகே படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நடிகையை காரில் கடத்திய கும்பல், காரிலேயே 2 மணி நேரம் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது. பின்னர் பாதிவழியில் நடிகையை இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. 

இந்தச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த காரின் ஓட்டுநர் மார்டின் அந்தோணியைக் கைது செய்தனர். பிறகு, அவர் அளித்த தகவலின்பேரில் பல்சர் சுனி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்துக்காக தனக்கு ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்ட தகவலை வெளியிட்டார். மேலும், நடிகர் திலீப்புக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, திலீப், அவரது மனைவி காவ்யா ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனால், திலீப் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கடந்த சில நாள்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடிகர் திலீப்பிடம் காவல்துறையினர் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை பல மணி நேரம் நீடித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் திலீப்பைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், 'நடிகையைக் கடத்த சதி செய்தது, தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்' என்றன. இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விரோதமே, இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக திலீப்பின் நண்பரும், இயக்குநருமான நாதீர் ஷா உள்ளிட்ட 3 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், 14 நாள் நீதிமன்றக் காவலில் அலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

சதித் திட்டம் தீட்டியதற்கான முகாந்திரம் உள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார். கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான 19 ஆதாரங்கள் உள்ளன என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக இருக்கும் திலீப்பின் 2-வது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனைக் காவல்துறை தேடிவருகிறது.

நடிகை வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com