பிக் பாஸ் - சேரி பிஹேவியர் விவகாரம்: வழக்கைச் சந்திக்கவிருக்கும் காயத்ரி ரகுராம்!

பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவுபடுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் குற்றமாகும்...
பிக் பாஸ் - சேரி பிஹேவியர் விவகாரம்: வழக்கைச் சந்திக்கவிருக்கும் காயத்ரி ரகுராம்!
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்குக் கடும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. 

அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் காயத்ரி ரகுராமுக்கும் விஜய் டிவிக்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலிடமும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் கூறியதாவது: சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை தான் காயத்ரி ரகுராமுக்குச் சொல்லிக்கொடுத்து, அவர் சொல்லியிருந்தால்தான் அதற்குப் பதில் கூறுவேன் என்றார்.

இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடி வரும் எவிடன்ஸ் கதிர், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் எழுதியவதாவது: 

பிக் பாஸ்(Big Boss) அல்ல.பிக் காஸ்ட்(Big Caste).

பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவுபடுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் குற்றமாகும். காயத்திரி என்பவர் சேரி பிஹேவியர் என்று இழிவு படுத்தி இருப்பதாக அறியவருகிறேன். அந்த லிங்க் இருந்தால் அனுப்பவும். உயர் நீதி மன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும் என்று எழுதியுள்ளார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில மக்களை இழிவானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துபவர்களின்மீது வழக்கு தொடராமல் எப்படி இருக்க முடியும்? 

பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பவர்களை இழிவுபடுத்தியதற்காக இதை எதிர்த்து காயத்ரி ரகுராம், விஜய் டிவி, தொகுத்துவழங்கும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது வழக்குதொடர ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் தகவல்கள் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

இதுதவிர, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி, மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலர் மா.பா. மணி அமுதன் தலைமையில், அந்த அமைப்பினர் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர். அதில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பப்படுகிறது. இதில், திரை நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், நடிகை காயத்ரி ரகுராம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். தமிழகத்தில் சாதி மோதல்களை உருவாக்கும் விதமாக பேசி வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடைவிதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விவகாரத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் காயத்ரி ரகுராமுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com