பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிடத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இத்திரைப்படத்தை வெளிநாட்டில் வெளியிட அனுமதித்தாலும் இந்தியாவில் சமுக அமைதி குலையும். எனவே, வெளிநாட்டில் திரையிட...
பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிடத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வெளிநாடுகளில் பத்மாவதி திரைப்படத்துக்கு தடை கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் ராஜபுத்திர வம்சத்து ராணி பத்மாவதி குறித்த உண்மைகள் திரிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அந்தப் படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி, வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இத்திரைப்படத்துக்கு ராஜபுத்ர சமூகத்தினரும், ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்தியாவில் இத்திரைப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த டிசம்பர் 1-ஆம் தேதியில் இருந்து ஒத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில், வெளிநாடுகளில் டிசம்பர் 1-இல் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

பத்மாவதி திரைப்படத்துக்கு பிரிட்டன் திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது. திரைப்படத்தில் எந்தக் காட்சியும் நீக்கப்படவில்லை.

இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்தை வெளிநாட்டில் திரையிட தடை விதிக்க வேண்டுமென்று வழக்குரைஞர் எம்.எல்.சர்மா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பத்மாவதி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகளை வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அத்திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பு தவறான தகவலை அளித்துள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்திரைப்படத்தை வெளிநாட்டில் வெளியிட அனுமதித்தாலும் இந்தியாவில் சமுக அமைதி குலையும். எனவே, வெளிநாட்டில் திரையிட அனுமதிக்கக் கூடாது. இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த நீதிபதிகள், 'இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. வரும் 28-ஆம் தேதி விசாரணை நடைபெறும்' என்று கூறிவிட்டனர். முன்னதாக, பத்மாவதி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு நிராகரித்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வெளிநாடுகளில் பத்மாவதி திரைப்படத்துக்கு தடை கோரும் வழக்குரைஞர் எம்.எல்.சர்மாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒரு திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் முன்பு, பொதுவாழ்வில் இருப்பவர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்க கூடாது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் முன்பு கருத்து தெரிவிப்பது, திரைப்பட தணிக்கை துறையை அவமதிக்கும் செயல் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com