என் ஆதரவாளர்களின் அன்பைக் கண்டு மெய்சிலிர்க்கிறேன்: ‘பிக் பாஸ்’ தோல்வி குறித்து சிநேகன் வீடியோ பதிவு!

ஒரு பெண்ணைத் தொடுவதற்குக்கூட அந்தப் பெண் நம்மீது நம்பிக்கை வைத்திருக்க...
என் ஆதரவாளர்களின் அன்பைக் கண்டு மெய்சிலிர்க்கிறேன்: ‘பிக் பாஸ்’ தோல்வி குறித்து சிநேகன் வீடியோ பதிவு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனை நடிகர் ஆரவ் வென்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சிநேகன் தான் வெல்வார் என்று பலரும் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதத்தில் ஆரவ் ஜெயித்துள்ளார். ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதால் சிநேகன் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். விஜய் டிவியின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலர் தங்களுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் கவிஞர் சிநேகன், வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாள்கள் நீடித்தேன். அதற்குச் சாகும்வரைக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

ஆரவ் போட்டியை வென்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு மேடையில் வாழ்த்து சொன்னேன். இப்போதும் வாழ்த்து சொல்கிறேன். என் குடும்பத்தில் உள்ள ஒரு சசோதரன் வெற்றி பெற்றுள்ளான். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. 

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரும்போது ஒரு பயம் இருந்தது. கிராமத்துக்காரன் என்பதால் என்னால் என் பாசத்தைக் கண்ணீரால் மட்டுமே வெளிப்படுத்தமுடியும். அதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்கிற அச்சத்தோடுதான் வெளியே வந்தேன். ஆனால் என்னுடைய ஆதரவாளர்கள் என்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் எழுதிய பதிவுகளைக் கண்டு மெய் சிலிர்த்துப்போய் நிற்கிறேன். அனைவருடைய வருத்தங்கள், ஆதகங்களைக் காணும்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சில இடங்களில் தொலைக்காட்சியைப் போட்டு உடைத்துள்ளார்கள். பேருந்து மறியல் செய்துள்ளார்கள் என்கிற செய்திகளைக் கேட்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. என் மீது இவ்வளவு அன்பு வைக்க நான் என்ன செய்தேன்? 

சிநேகன் பெண்களைக் கட்டிப்பிடிக்கிறார் என்கிற விமரிசனங்களுக்கு... ஒரு பெண்ணைத் தொடுவதற்குக்கூட அந்தப் பெண் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் நெருங்கி வர முடியும். அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணைத் தொட்டுவிடமுடியாது. அன்பின் வெளிப்பாடாகத்தான் அவர்களை அரவணைத்தேன். தாயும் குழந்தையும் அரவணைக்கும் அன்புதான் அது. அதையும் மீறி என் செயலை நீங்கள் விமரிசனம் செய்தால்... எனக்கு விமரிசனங்களும் தோல்விகளும் புதிதல்ல. தோல்விகளைக் கண்டு நான் துவண்டு போகமாட்டேன். 

உங்கள் அனைவருடைய ஆதரவு இருக்கும்வரை ஊர்க்குருவி மாதிரி மேலே பறந்துகொண்டிருப்பேன். தயவு செய்து யாரும் வருத்தபடாதீர்கள். யாரையும் திட்டாதீர்கள். அனைவரும் நம் சகோதரர்கள். உங்கள் ஆதரவைத் தொடர்ந்து எனக்கு அளியுங்கள். அனைவரையும் விரைவில் சந்திப்பேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com