

கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகில் ஒரு நடிகை கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க முடிகிறது என்றால் அது பெரிய விஷயம். அந்த நடிகைக்கு நிச்சயம் அழகும் திறமையும் இருக்க வேண்டும். ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரைத் தொடர்ந்து அதே போல் சினிமாவில் நீடித்து இருப்பவர் ஸ்ரேயா சரண். 2001-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இஷ்டம்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ஸ்ரேயா, 2003-ம் ஆண்டு வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நான்கு தென்னிந்திய மொழிகள் தவிர இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். ரஜினி, விஜய், தனுஷ், சிரஞ்சீவி, பவண் கல்யாண், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, பிரபாஸ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கவனம் பெற்றவர்.
நடிகைகள் பெரும்பாலும் வயதாகும் போது தோற்றத்தில் கவனம் செலுத்த முடியாமல் படவாய்ப்புக்களை இழக்கின்றனர். ஆனால் ஸ்ரேயாவைப் பொருத்தவரை உடலை கச்சிதமாக வைத்துள்ளார். தோற்றத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் மெருகேறி வருகிறார். தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதால் திரையுலகில் வெற்றிக் கனியை இவரால் தொடர்ந்து சுவைக்க முடிகிறது எனலாம்.
சினிமாவில் நடிப்பதே தன் மனத்துக்கு நெருக்கமானது என்று அவர் கூறுகிறார் 'சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது. 17 வயது முதல் நான் நடித்து வருகிறேன். இப்போது 34 வயதாகிறது. எந்த வயதாக இருந்தாலும் ஏன் 65 வயதானாலும் சினிமாவில் மட்டும்தான் நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. அமிதாப்பச்சனுக்கு இந்த வயதிலும் அருமையான வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. நடிகையாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்’ என்று ஒரு பேட்டியில் கூறினார் ஸ்ரேயா.
ஸ்ரேயா தற்போது 'வீர போக வசந்தராயலு’எனும் தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று (செப்டம்பர் 11) தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ரேயாவின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர் அப்படக்குழுவினர். ஸ்ரேயா இப்படத்தில் ஏர் ஹோஸ்டஸாக நடித்துள்ளார். இந்தப் படத்திலும் ஸ்ரேயாவின் லுக்ஸ் மிக அழகாக உள்ளது என்று டோலிவுட் பாராட்டி வருகிறது.
தமிழில் ‘நரகாசூரன்’எனும் படத்தில் ஸ்ரேயா தற்போது நடிக்கிறார். அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தை இயக்குபவர் துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன். இவைத் தவிர தமிழ் கன்னட மொழியில் வெளிவரவிருக்கும் ‘சந்திரா’ எனும் படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இதில் அவர் கடைசி தலைமுறை இளவரசியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியோ தோல்வியோ அதைப் பற்றி கவலைப்படாமல் தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து இதே போல் நடித்து வந்தால் நிச்சயம் ஸ்ரேயா தென்னிந்தியத் திரையுலகைல் மேன்மேலும் உயரங்களைத் தொடுவார்.
ஸ்ரேயாவின் சமீபத்திய கலக்கல் ஃபோட்டோ ஷூட் :
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.