என்னுடைய கனவுகளும், நானும்! இயக்குனர் மிஷ்கின் பேட்டி!

இயக்குனர் மிஷ்கினின் சமீபத்திய சந்தோஷத்துக்கான காரணம், விஷால் நடிப்பில் வெற்றி நடை
என்னுடைய கனவுகளும், நானும்! இயக்குனர் மிஷ்கின் பேட்டி!

இயக்குனர் மிஷ்கினின் சமீபத்திய சந்தோஷத்துக்கான காரணம், விஷால் நடிப்பில் வெற்றி நடைபோடும் துப்பறிவாளன் படத்துக்குக் கிடைத்த பாசிட்டிவ் விமரிசனங்கள்தான். அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில், ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் துப்பறியும் படங்களை அடுத்தடுத்து இயக்குவதற்கான திட்டங்களை மிஷ்கின் வகுத்துக் கொண்டிருக்கிறார். 

மிஷ்கின் இயல்பாகவே கனவு காண்பவர் ...  அவர் தனது எல்லா கனவுகளை ஒரு டைரியில் எழுதி வருபவர். தன் கனவுடன் தொடர்புடைய எதுவொன்றையும் பதிவு செய்பவர். 'கனவுகளை நிறைவேற்றிக் கொள்வது என்பது எல்லோருக்குமே சாத்தியம்தான். ஆனால் அதற்கான முயற்சி மிகவும் முக்கியம். முதலில் காலையில் எழுந்ததும் செல்ஃபோனில் விழிக்காமல் இருந்தாலே போதும், அவரவர் கனவுகளை நிச்சயம் கண்டடையலாம்’ என்றார் கறுப்புக் கண்ணாடிக்கு மேல் தெரிந்த  புருவத்தை நெறித்த மிஷ்கின். 

ரைட்டர்ஸ் ப்ளாக் என்று சொல்லப்படும் எழுத்தாளரின் மனத்தடைக்குள் மிஷ்கின் தவித்த போது அவரை மீட்டெடுத்தது கனவுகள் தானாம். 2010-ம் ஆண்டில் நந்தலாலா வெளிவந்த சமயத்தில், எதுவும் செய்ய இயலாத ஒருவித உறைநிலைக்கு தள்ளப்பட்டதாக உணர்ந்தார். அப்போது அவருக்குத் தோன்றிய ஒரு இமேஜ், ஒரு கனவுக் காட்சி தான் அவரை மீட்டெடுத்தது. வயதான நடுத்தர வர்க்கப் பெண் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெறுவதாக ஒரு காட்சியை மனத்திரையில் கண்டார் மிஷ்கின். இந்தக் கணம் அந்தக் காட்சியை மீள் நினைவு செய்தபடி சொல்கிறார், 'தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவனை பழிவாங்கியதால் இங்கு நிற்கிறாளோ என்று அவளைப் பற்றி நினைத்தேன்’
 
அந்தக் காட்சியைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதைதான் யுத்தம் செய் திரைப்படம். போலவே சமீபத்தில் அவருக்கு மீண்டும் இதே போல ஒரு கனவு. இம்முறை காட்சி இல்லை, ஒலி. துப்பறிவாளன் படத் தயாரிப்பின் போது, ஒரு பாடலைப் பற்றிய கனவு கண்டார் மிஷ்கின். அடுத்த நாள் காலை இசையமைப்பாளர் அரோல் கொரேலியைச் சந்தித்துப் பேசினார். துப்பறிவாளன் படத்தில் இடம்பெற்ற 'இவன் துப்பறிவாளனன்' என்ற பாடல்தான் அது. மேலும் அந்தப் பாடலை மிஷ்கினே பாடியுள்ளார். 'ஒவ்வொரு கணத்தையும், ஒவ்வொரு ஒலியையும், ஒவ்வொரு வாசனையையும் விழிப்புணர்வுடன் உள்வாங்குகிறேன். என்னை வரையறுப்பது நேரத்தின் போதாமை மட்டுமே’ என்றார் மிஷ்கின். 

மேலும் அவர் கூறுகையில், 'எனக்கு இரண்டு கண்கள்தான் உள்ளன, ஆனால் 100 கேமராக்கள் போல் அவை தொடர்ந்து எல்லாவற்றையும் பதிவு செய்கின்றன. ஒருவர் இன்னொரு நபரை நேசிக்கக் காரணம், அவர் தன்னிடம் உள்ள ஏதோவொன்றை அந்த இன்னொரு நபரிடம் இனம் காண்கிறார் என்பதால்தான். கணியனும் (துப்பறிவாளன் பட நாயகன்) அப்படிப்பட்ட ஒருவன் தான். அவனைப் போலவே, என் மனமும் தொடர்ந்து என்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களைப் பதிவு செய்து வருகிறது. ஒருவர் சிரிக்கும் விதம், ஒருவர் சட்டை ஸ்லீவ்வை எத்தனை தடவை மடக்கிக் கொள்கிறார் என்ற எண்ணிக்கை’

ஷெர்லாக் ஹோம்ஸின் கண்டுபிடிப்பாளரான ஆர்தர் கோனன் டோயில், மிஷ்கின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியவர். 'அதனால்தான் நான் துப்பறிவாளன் படத் துவக்கத்தில் அவருடைய பெயரை மரியாதை நிமித்தம் அர்ப்பணிப்பு செய்துள்ளேன்’ ஆனால் தன்னுடைய கதை அசலானது என்றும் தெளிவுப்படுத்தினார் மிஷின். 'ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் வாட்சன் ஆகிய இருவரும் ஒரே மாதிரியானவர்கள், ஒருபாலின விருப்பம் உடையவர்கள், மேலும் பெண்களை வெறுக்கும் தன்மையுடைவர்கள். அவர்களது கதாபாத்திரங்களிலுள்ள சில பரிமாணங்களைத் தழுவி கணியன் பூங்குன்றன் மற்றும் மனோகர் கதாபாத்திரங்களில் முயற்சித்திருக்கிறேன்.

இது போன்ற சர்வதேச கதாபாத்திரங்களைத் தழுவி எழுதும் போது நாம் ஒன்றை படைக்கும் போது, இங்குள்ள இயக்குனர்கள் வழக்கமாக நம்முடைய மண் சார்ந்த உணர்வுகளுக்குப் பொருத்துமாறு அவர்களின் குணாதிசயங்களை மாற்றி எழுத முயற்சிப்பார்கள். இது முட்டாள்தனமானது. தமிழ் பார்வையாளர்களின் ஆழமான புரிந்துணர்வு உள்ளவர்கள். ஒரு கதையை மிகச் சரியாக உள்வாங்கிக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். பிசாசு படத்துக்குக் கிடைத்த வரவேற்பு இதை தெளிவாக எனக்கு உணர்த்தியது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் காட்டும்படி இயேசு கிறிஸ்து கேட்டார். ஆனால் பிசாசு கதை இதற்கு இன்னும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. ஒரு பெண் தான் இறக்க காரணமான கொலையாளியை மன்னித்ததுடன் இல்லாமல், அவனை காதலிக்கவும் செய்கிறாள். அவள் கிறிஸ்துவைக் காட்டிலும் உயர்ந்தவளாகிவிட்டாள் இல்லையா?’என்று கூறினார் மிஷ்கின்.

துப்பறிவாளன் வழக்கமான மிஷ்கின் படம் அல்ல என்றவர், 'ஆனால் அது என் பார்வையாளர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்காது. இது என்னுடைய பித்துநிலையில் உருவாகியது என்பதை அவர்கள் உணர்வார்கள்’என்று சிரித்தார் மிஷ்கின்.

பின்னர் வெளிப்படையாகவே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டார் மிஷ்கின். 'விஷால் நடித்துள்ள எந்தப் படத்தையும் இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை’ என்று கூறி சிரித்தார். 

'விஷால் தன் படங்களைப் பார்க்கும்படி என்னிடம் அடிக்கடி சொல்வார், ஆனால் அவர் படங்களை நான் பார்க்காததால் தான் கணியன் கதாபாத்திரத்தை படத்தின் தேவைக்கேற்றவாறு என்னால் வடிவமைக்க முடிந்தது. விஷால் ரசிகர்களுக்கு இது ஆச்சரியம் கலந்த சந்தோஷமாக அமையும். மற்ற தமிழ் ஹீரோக்களை விட, விஷால் மிகவும் வித்தியாசமானவர். உயரமும் சரி, கறுப்பு நிறமும் சரி மிகவும் வசீகரமான தோற்றம் அவருடையது. மேலும் தீவிரமான பாவம் அவரிடம் இயல்பாகவே இருக்கும், எனவேதான் ஹோம்ஸ் கதாபாத்திரத்துக்கு வேறு எந்த நடிகரையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.’

பாக்யராஜ், வினய் மற்றும் ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் பற்றி நிறைய ஊகங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. இப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு பெண் கொலையாளியாக நடிக்கிறார். பாக்யராஜ் ஒரு வயோதிக வில்லனாக நடிக்கிறார். வினய்தான் பிரதான வில்லன்’ என்றார் மிஷ்கின். இப்படத்தின் முழு ஸ்கிரிப்டையும் நான் உங்களிடம் சொல்ல முடியும். காரணம் இப்படம் 'என்ன' என்பதை விட 'எப்படி' என்பதில்தான் அதிகம் உள்ளது. 

துப்பறிவாளனுக்கு சரியான கவனம் கிடைத்துவிட்ட நிலையில், இதன் அடுத்த பாகத்தை மிஷ்கின் இயக்கலாம். ஒரு படைப்பாளியின் கனவுகள் அனைத்தையும் வெல்லும்.

- சுதீர் ஸ்ரீநிவாஸன் (தமிழில் உமா பார்வதி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com