ட்விட்டரில் அமிதாப் வெளியிட்ட ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ புகைப்படங்கள்...

அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் சை ரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில ஸ்டில்களை இணையத்தில் கடந்த வாரத்தில் பகிர்ந்திருந்தார்.
ட்விட்டரில் அமிதாப் வெளியிட்ட ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ புகைப்படங்கள்...
Published on
Updated on
2 min read

தெலுங்கில் சிரஞ்சீவி, நயன் தாரா, அமிதாப், நாசர் நடிப்பில் உருவாகி வரும்  ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தின் ஸ்டில்கள் சில சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சிரு மற்றும் நயன் ரசிகர்களின் மனதில் பாலை வார்த்துள்ளன. அக்கடபூமியின் எவர் கிரீன் சூப்பர் தலையான சிரஞ்சீவிக்கு தாத்தாவான பின்னும் மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. காரணம் மனிதர் ஃபிட்னஸில் அத்தனை கவனம் செலுத்தி பார்க்க இன்னும் இளமை இதோ... இதோ லுக்கிலேயே ரசிகர்களை மட்டுமல்ல சக நடிகர்கள் மற்றும் இன்றைய தலைமுறை இளம் நடிகர்களையும் கூட தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார். அவரது ஃபிட்னஸுக்கு ஒரு சோறு ஒரு பதம் என்றால் கைதி நம்பர் ஒன்னில் வரும் தம்முடு கும்முடு பாடலைச் சொல்லலாம்.

அப்படியிருக்க  ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ சிரஞ்சீவியின் 151 ஆவது படமாக வெளிவரவிருக்கிறது என்பதால் டோலிவுட்டில் சிரு ரசிகர்களின் கும்மாளத்துக்கு கேட்க வேண்டுமா? அதில் நாயகியாக நயன்தாரா! சில வருடங்களுக்கு முன்பு நயன், பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்த ராமராஜ்யம் திரைப்படத்திலேயே அங்கத்திய ரசிகர்கள் நயனை தங்களது சீதாவாக ஸ்வீகரித்து விட்டார்கள். சொல்லப்போனால் பாகுபலியின் தேவசேனா கதாபாத்திரத்துக்காக முதலில் அணுகப்பட்டவர் கூட நயன்தாராவே என்பதாகக் கூட ஒரு பேச்சிருந்தது. அந்த அளவுக்கு சரித்திர கதாபாத்திரத்தில் நயன்தாராவை அந்த மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது தான் காரணம். எனவே சிரஞ்சீவியின் சை ரா நரசிம்மாவில் நயன் தாரா நாயகி என்பதில் எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லை.

போதாக்குறைக்கு பிக் பி அமிதாப் பச்சனும் படத்தில் இருக்கிறார். இத்தனை நட்சத்திரக் கூட்டம் இருக்கும் போது சை ரா நரசிம்மாவுக்கு கிடைக்கக் கூடிய எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் சை ரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில ஸ்டில்களை இணையத்தில் கடந்த வாரத்தில் ஒருநாள் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படம் இது தான்;

வெண்பட்டு அரச உடையில் கம்பீரமான மெரூன் நிற அங்கவஸ்திரத்துடன் சிரஞ்சீவி அமர்ந்திருக்க, அவரருகில் கல்யாணக் கோலத்தில் மஞ்சள் பொன்னிற பட்டுப்புடவை உடுத்திய நயன்தாரா.

பின்னணியில் தூய வெள்ளுடுப்பில் ராஜகுரு தோற்றத்தில் அமிதாப் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைத் தான் பிக் பி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

புகைப்படமே இத்தனை பிரமாத அழகில் இருந்தால் திரைப்படம் இன்னும் எத்தனை பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறதோ? பட்ஜெட் 243 கோடி என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழித் திரைப்படமாக வெளிவரவிருக்கிறதாம். படத்தின் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி. கொனிடேலா பிக்ஸர்சுக்காக இந்தத் திரைப்படத்தை தயாரிப்பது சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரன் தேஜா.

உய்யலா நரசிம்ம ரெட்டி என்பவர் ஒருங்கிணைந்த ஆந்திராவின் ராயல சீமா பகுதியில் வாழ்ந்து மறைந்த ஒரு சுதேசி மன்னர். தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், நெற்கட்டும் செவல் பூலித்தேவன் உள்ளிட்ட பாளையக் காரர்களாக இருந்து கொண்டு ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் அராஜகத்தை எதிர்த்து போராடினார்களே அதே விதமாக ராயல சீமாவின் கட்டபொம்மனாக இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காகப் அயராது போராடிய தலைவர்களில் ஒருவர். அவரது வாழ்க்கைக் கதை தான் சை ரா நரசிம்ம ரெட்டியாகி திரை காணவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com